இது பாகம் 8 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.
எப்போதுமே உன்னோடு நான் இருந்து விடுவேன் என்று நினைத்து தானோ அந்த பொறாமைக்கார கடவுள் படைத்தான் இரவை. தனிமையைக் கூட சமாளித்து விடுவேன் ஆனால் உன் நினைவுகளை என்ன செய்ய? இரவோடு சேர்ந்து அவையும் இம்சை செய்தன. கனவோடு கண்ணாமூச்சி, தலையணைக்கு உயிர் தந்து அதோடு செல்ல பேச்சு, இப்படியே இரவைக் கொன்று முடித்தேன். தலையில் தீ வைத்து விட்டார்களோ? தன் கொண்டையைப் பார்த்து சந்தேகத்தில் கூவும் சேவல், மெதுவாக வெளியே வந்து சோம்பல் முறிக்கும் சூரியன், என்னைப் போலவே இரவை வெறுத்திருந்து கூட்டை விட்டு பறக்கும் புறாக்கள் அனைத்தும் அழகாகத் தெரிந்தாலும் மனம் உன்னைத்தேடியே அலைபாய்ந்தது. பால் வாங்கும் காரணம் சொல்லி கால்கள் உன் வீடு தேடி நடந்தன.
இரவில் நிலவும்
உனைக்காணா நேரம்
வடித்த கண்ணீர் தானோ?
விடியலில்
புற்களிலும், பூக்களிலும்.
தூரத்தில் என் உயிருக்கு உருவமும், பச்சை தாவணியும் கொடுத்தார் போல் நீ. அந்த தெருவையே அழகாக அலங்கரித்து கொண்டிருந்தாய் என் வாழ்க்கையை போலவே. தண்ணீர் தெளித்தும் அடங்காத உன் வீட்டு வாசலின் தாகம், நீ சரியாக துவட்டாத ஒரு துளி நீரால் மூழ்கிப்போனது. அது சரி சூரியனையே குளிரச்செய்யும் அந்த சொட்டு இது வெறும் நிலம் தானே!
வாசலைக் கொஞ்சுகிறாயோ? ஓ! கோலமா? அடிப்போடி பைத்தியக்காரி நாணத்தால் நீ கால் நுணியில் போடும் கோலத்தை விடவா இது அழகாக இருக்கப் போகிறது. நடப்பதை மறந்தன கால்கள். என்னைக் கண்ட நீ மிரண்டு போன மான் குட்டியாய் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினாய். கீழே என்னை திட்டிக்கொண்டிருக்கிறது பாதியில் நீ விட்டுச்சென்ற கோலம். அட இது கூட அழகாகத்தான் இருக்கிறது தேய்பிறை போல. இந்த நிகழ்வுகளில் என்னைத் தொலைத்து வெறும் கையோடு வீடு திரும்பினேன். பள்ளி முடிந்து திரும்பும் நேரம் வழக்கமான வார்த்தை விளையாட்டைத் தொடங்கினேன்.
"ஏய்! அப்படியா திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வந்து நிப்ப?"
"என்னிக்கா இருந்தாலும் உன் வீட்டுக்கு வரப்போரவன் தானே கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் அவ்ளோ தான்."
"ம்... சரி மயில் கோலம் பாத்தியா? எப்படி இருந்துச்சு?"
"மயில் போட்ட கோலத்த பாத்தேன் ஆனா.. மயில் கோலத்த பாக்கலயே!!"
"அய்யோ! ஒழுங்கா பதில் சொல்லு."
"நிஜமா தான். உன் கை பட்டதால இனிக்கிற கோலமாவை எல்லாம் சர்க்கரைனு ஏமாந்து போன எறும்புங்கள் எடுத்துகிட்டு போயிடுச்சு. அதான் பாக்க முடியல."
செல்லமாக உன் கையில் இருந்த குச்சியை என் மேல் வீசினாய். நான் நகர்ந்து விட, கூட்டுக்கு சுள்ளி தேடி வந்த மைனா அதன் வாசற்காலுக்கு அதை எடுத்துக் கொண்டு பறந்தது. கொடுத்து வைத்த பறவை அந்த கூடு கலையாது, கலைக்கவும் முடியாது. அந்த அடியின் சுகத்தை இழந்து விட்ட சோகத்தில் வரவிருக்கும் இரவுடனான சண்டைக்கு என்னை ஆயுத்தப் படுத்திக் கொண்டே நடந்தேன்.
காதல் காலம் பாகம் 9
காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
காதல் காலம் 8
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்:
வகை: தொடர் கதை
Subscribe to:
Post Comments (Atom)
0 கால்தடங்கள்:
Post a Comment