காதல் காலம் 6

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 6 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

இன்று வெகு நேரம் ஆகியும் விடியாதது போலவே தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் ஞாயிற்றுக்கிழமை என்று சிற்றறிவுக்கு எட்டியது. பிரதி ஞாயிறு விடுமுறை விட்ட வெள்ளையனை திட்டலானேன். சுவாசிக்காமல் இருக்க முடியுமா? கழற்றி விட்ட கன்றுக்குட்டியாய் உன்னைத்தேடி உச்சிப்பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் காத்திருந்தேன். உழைத்த 100 ரூபாய் நோட்டை நொடிக்கு நூறு முறை எடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் கூலிக்காரனைப் போல, உன் காதல் ஒன்று மட்டுமே உடன் இருக்க உலகத்தை வென்ற பெருமிதத்தில் நான். வழக்கம் போல் காலத்தை முந்திக்கொண்டு முன்னமே வந்து சேர்ந்தேன். என் தனிமையோடு பேசிக்கொண்டிருந்தேன்.

"லூசு வெயில்ல நின்னு என்ன பண்ற?"

"நட்சத்திரம் எண்ணிக்கிட்டு இருந்தேன்."

"லூசுனு சொன்னது சரி தான். இப்போ நட்சத்திரம் எங்க தெரியும்னு கேட்டா,'நிலாவே என் முன்னாடி நிக்குதே நட்சத்திரம் தெரியாதானு சொல்லுவ'."

"இல்லமா நீ என் சூரியன். நீ இல்லாம இவ்ளோ நேரம் இருட்டாதான் இருந்தது அதான் நட்சத்திரம் தெரிஞ்சுது."

"விட்டா பேசிகிட்டே இருப்ப வா கோயிலுக்கு போவோம்."

"ஆமாம் இல்லன்னா பிள்ளையாரே உன்ன பாக்க கீழ இறங்கி வந்துட போறாரு."

படிகளை நோக்கி ஓடினாய்.

"இன்னிக்கு கொலுசு அதிகமா சத்தம் போடுதே!"

"பொய் சொல்ல அளவே இல்லயா? நான் கொலுசே போடலை."

"அப்படியா? அப்ப அந்த சத்தம் எங்கேருந்து வருது? இந்த படிகள் தான் சத்தம் போடுதுனு நெனக்கிறேன் இரு என்னனு கேட்டுட்டு வரேன்."

படிகளை நோக்கி காதுகளை எடுத்து செல்கிறேன்.

"என்ன சொல்லுதுங்க?"

"அதுவா? இந்த கோயில் கட்டும் போது,'சிற்பியோட ஒரு அடிக்கே உடஞ்சுட்டியே அதான் நீ படிக்கல்லா இருக்க ஆனால் 1000 அடி வாங்கியும் உடையாததுனால தான் நான் கடவுள் சிலையா இருக்கேன்னு' அந்த சிலை சொல்லுச்சாம். ஆனா இன்னிக்கு இந்த படி எல்லாம் உன்னோட கால் பட்டதால உள்ள இருக்க கடவுளை பாத்து சிரிக்குதுங்க. உன் ஸ்பரிசம் தொடமுடியாத சாபம் வாங்கியிருக்காம் அந்த சிலை. இதுங்க எல்லாம் பழி தீத்துக்குச்சாம் அதான் சிரிக்குதுங்க."

"அப்பா! பொய் பேசுறதுல உன்ன யாரும் ஜெயிக்க முடியாது. பாத்து பொய் சொன்னா சாப்பாடு கிடைக்காதுனு சொல்லுவாங்க."

"'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது'
பொய்க்கு விலையாய்
உன் வெட்கம் கிடைக்கையில்

பசியும் எடுக்குமோ?"

பதில் தேடி கலைத்து போன நீ கண்ணாலேயே ஆயிரம் பதில் சொன்னாய். அதை மொழி பெயர்த்தால் தான் கவிதை என்கிறது இந்த உலகம்.

காதல் காலம்‍‍‍ பாகம் 7

காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

0 கால்தடங்கள்: