நேத்து பெஞ்ச மழை

"நல்ல புள்ளயா படிச்சு
பெரிய ஆளாவனும்"
வேளக்காரியா அவமானப்பட்டு
முடியும் அவ வாழ்க்கயோட‌
ஆதங்கத்த கொட்டித்தீத்தா
ஆத்தா

கண்டிப்பானு நாஞ்சொல்லி
முடிக்குமுன்
போய் சேந்தா

அய்யோ மவராசி போய்டியே!
போலியா அழற‌ கிழவிக,
குடிபோதயில அம்மனமா
கெடக்குற அப்பன்,
ஆத்தா நகைக்கு கழுகா
சுத்துற மாமன்

அழாம அவ முத்தம்
தந்த ஈரத்த தொட்டுகிட்டு
கெடக்கேன்
முனியப்பா இத காயவுடாத‌
வேண்டிக்கிட்டேன்

கடன வாங்கி காரியம் பண்ணி
சொந்தத்த வழியனுப்ப‌
அப்பனும் போனான் கூட‌
நானும் சொந்தம் தான்டானு சொல்லி

பிச்சயெடுக்க தோணல‌
கையேந்த ஆத்தா
கத்தும் தரல‌

சாராயக்கடயில வேல‌
கூலி அடியும் சூடும்
தான்டி

வவுறு காஞ்சி
உசுரு போவ‌
சோத்துக்கு திருடினேன்

மறஞ்சி வந்து
தொரந்த பையில‌
நோட்டுல எல்லாம்
ஆத்தாவோட மூஞ்சி

மன்னிச்சுடுடி என்ன‌
கதறி அழுது ஓடுனேன்
அந்த ஆள தேடி

ஐயா உங்க பைய‌
பசியாலத் திருடிப்புட்டேன்யா
மன்னிச்சிக்கோங்க‌

மேல கீல பாத்த‌
புண்ணியவான்
படிக்கிறியானு கேட்டார்
தோள்ள கைபோட்டு

ஆத்தா நேத்து பெஞ்ச மழைக்கு
அர்த்தம் இருக்கு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்!!

-ஸ்ரீ

0 கால்தடங்கள்: