காதல் காலம் ‍‍‍ 5

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 5 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லை என்றால் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

மேய்ப்பன் தோளில் இருக்கும் வழிமாறிய ஆட்டுக்குட்டியாய் காதலின் தோளில் ஏறிக் கொண்டு பயணித்தேன். சவாரி என்றுமே சுகம் தானே. என் காதலை வட்டியும் முதலுமாக என் மேல் திணித்தாய் நீ. அற்புதமான அந்திப்பொழுது சூரியனை விரட்ட வந்த நிலா வானத்தில். உனக்காக ஆத்தங்கரையில் உன் முகத்தை மனதில் அசை போட்டுக்கொண்டே கல் எறிந்து கொண்டு நான் காத்திருந்தேன்.

"ரொம்ப நேரமா காத்திருக்கியா?"

"இல்ல இப்பதான் வந்தேன் ஆனா இந்த அரசமரம் தான் 70 வருசமா காத்துகிட்டு இருக்கு உனக்காக."

"இன்னிக்கு சூரியன் ரொம்ப சிகப்பா இருக்கே!"

"நீ வருவேனு இவ்ளோ நேரம் காத்திருந்தது அது கிளம்புர நேரம் பாத்து நீ வர அதான் கோவமா இருக்கு போல."

"எல்லாத்துக்கும் பதில் வெச்சிருப்பியோ?"

"முன்னாடி எல்லாத்துக்கும் கேள்வி தான் வெச்சிருந்தேன். இப்போ பதில்கள் தான் என்னை வெச்சிருக்கு."

"சரி அப்போ கேள்வி கேக்குறேன். ஏன் என்ன புடிச்சிருக்கு?"

"இயற்கைய பொய்யாக்க பொறந்திருக்கியே அதான்."

"எப்பவுமே புரியாத மாதிரி தான் பேசுவியா?"

"தேயாத நிலா,
வாடாத பூ,
பேசும் சித்திரம்,
குளிரும் தீ,
அழகான பெண் மயில்,
நடமாடும் கவிதை,
சிணுங்கும் சிற்பம்,
கைக்கெட்டும் வானம்,
கலையாத மேகம்,
ஐந்தடி சொர்கம்,
திகட்டாத தேன்..

இது மாதிரி சொல்லிகிட்டே போலாம். காரணம் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?"

"உன்ன மாதிரியே உன் காதலும் ரொம்ப மோசம்டா கனவுல கூட வந்து தொல்ல பண்ணுது."

"அடிப்பாவி என்னை அது தூங்கவே விடுறது இல்ல. நேத்து இப்படித்தான் தூங்க முடியாமல் உனக்காக் நட்சத்திரம் பறிக்க வானத்துக்கு போயிருந்தேன். சொர்கத்துல காவல் தேவதைகள் கண் அச‌ந்த நேரம் உள்ளே போய் சுவத்துல உன் பேரை கிறுக்கிட்டேன். வந்து பாத்த தேவேந்திரன் தேவர்களை எல்லா சுவத்தலயும் உன் பேரையே எழுத சொல்லிட்டான். கடவுளா இருந்தாலும் சரி உன் பேரை எழுத விடுவேனா? நானே ராத்திரி முழுக்க இருந்து எழுதிட்டு தான் வந்தேன்."

கேட்ட நீ கைக்கு ஒரு முத்தம் தந்தாய். காமத்தை மட்டுமே அறிந்த அந்த வயது காதலோடு நீ தந்த முத்தத்தால் காமத்தைக் கொன்ற காதலாக மாறியது.

"சரி உலகத்துலயே சிறந்த காதல் ஜோடி ஆவோம் தயாராகிக்கோ!" என்றேன்.

"அப்போ ரோமியோ‍‍-ஜுலியட், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு பட்டியலில் நம்ம பேரும் சேத்துடுவோம்."

"காட்டுத்தீயை சுடும்
என் காதலுக்கு
மின்மினிப்பூச்சுடன் போட்டியா?"

இதைக்கேட்ட அரசமரம் இலைகளாக தன் வியர்வையை நம் மேல் உதிர்த்தது.


காதல் காலம்‍‍‍ பாகம் 6


காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

0 கால்தடங்கள்: