தேவதைலோகம்

என்ன வரம் வேண்டுமோ கேள்!
உறக்கத்தின் நடுவே
உரக்கக்கேட்ட குரலால் எழுந்தேன்.
தூக்கத்தை தூர எட்டி உதைக்கும் முன்
பிரகாசமாக சிரித்தான் கடவுள்.

மானிடப்பதரல்லவா சுயநலமே
முந்திக் கொண்டு வர‌
தேவலோகத்தில் ஒரு இடமென்றேன்
மறுக்கவா முடியும்?
தர்மசங்கடத்தில் அவன்!

உடனே சுதாரித்துக் கொண்டு
சரி அது வேண்டாம்.
என்னவளை அரை நொடி கூட‌
பார்க்காமல் இருக்க முடியாது,
இமைகளை செயலிழக்கச் செய்யென்றேன்.

தேவர்களின் குணத்தை கேட்பதை
புரிந்து மர்மமாக சிரித்து மறைந்தான்.
இமைகள் முத்தமிடுவதை நிறுத்தின,
தேவனான திமிரில் தேவலோகத்திக்கெதிராக‌
தேவதை உனக்கு தேவதைலோகமொன்று செய்தேன்.

இதழோடு இதழ் முட்டி உனக்கும்
நம் காதல் போல் அமரநிலை தந்தேன்.
சரி வா நம் லோகத்துக்கு அந்த‌
தாஜ்மகாலை ஒரு படிக்கல்லாக்கலாமா?
‍பரிசீலிப்போம்.

கடவுளையே வென்ற பரவசத்தில்
திளைத்த நேரம் காதோரமாய்
"இப்போது புரிகிறதா?
முதல் வரம் ஏன் தரவில்லையென்று."
மர்ம சிரிப்பின்
முடிச்சியவிழ்த்தான்.

இப்போது தேவனானாலும்
முன்னாள் மனிதன் தானே!
அசட்டுத்தனத்தை துடைத்துக்கொண்டு
என் தேவதைலோகத்தில்
நான்....


காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

0 கால்தடங்கள்: