கட உள் கடவுள்

சேமித்த பாவமூட்டைகளோடு
அவன் வீடு போக,
காசைப் பார்த்த கொடி மரம்
காலம் மறந்து பூக்க,
காந்திக்கு ஐயர் எங்களிடையில்
கண்ணாமூச்சி நடத்த,
புறப்பட்டேன் அவனை
தேடி நானே!

துரும்பை கிளறியும்,
தூணை சுரண்டியும்
ஏமாந்து போனேன்.
"ஏழையின் சிரிப்பு"
என்றாரொரு பெரியவர்.
ஏழைக்கா பஞ்சம்?
பசியெனும் பசையால்
இடுப்போடு வயிறொட்டியவன்
எப்படி சிரிப்பான்?
மீண்டும் ஏமாற்றம்.

வேறு வழியின்றி
அச்சிலை முன்னே
இறக்கி வைத்து நடந்தேன்.
ஏனோ இப்போது மனம்
அதிக பாரமாய்!
"விதைத்ததை நானே
அறுத்துக் கொள்கிறேன்"
சொல்லி மறுபடி சுமந்தேன்.

ஆனால்
அதில் சுமையிருந்தும்
பாரமில்லை.
அட!
உள்ளே கிடப்பவனை
வெளியே தேடினால்
கிடைப்பானா?

கட+ உள் = கடவுள்.

அன்பே சிவம்...
-ஸ்ரீ.

2 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

கவிப் பெருந்தகையே......

இதன் பொருளைச் சற்று விளக்கினாள்.. எனைப் போன்ற பாமரனுக்கும் சற்று விளங்கும்...
விவரிப்பீரா ?

- ரசிகன் !

ஸ்ரீ said...

வணக்கம் விக்ரமாதித்தன்!

உங்கள் கேள்வியே பதில் சுமந்து நிற்கிறதே! பாமரனுக்கு விளங்காமல் தான் கடவுள் வைக்கப்பட்டிருக்கிறார் (வைக்கப்பட்டிருக்கிறார் ‍கவனிக்கவும் ஆனால் அவர் அப்படி இல்லை). காசுக்கு கிடைக்கும் மரியாதை கோயில்களில் மனிதனுக்கு கிடைக்காதது வருத்தமே. கோயில் என்பது பாவத்தை தொலைக்கும் ஒரு இடமாக ஆக்கப்பட்டுவிட்டது. இப்போது கோயிலுக்கு போனால் எல்லா பாவமும் தொலைக்கலாம் என்னும் மாயை அதிகரித்து விட்டது. ஆனால் நீ செய்த பாவங்களை சுமக்க தயாராகிவிட்டால் கடவுள் உன்னை மன்னிப்பான் என்பது என் தாழ்மையான கருத்து. முடிந்த வரை பாவங்களை செய்யாமல் இருக்க முயற்சிப்போம். உள்ளே கிடப்பவன் தான் கடவுள். கட + உள் = கடவுள். அன்பே சிவம்.

வேதாளம் கேட்ட கேள்வியோ? :)

நன்றி