காதல் காலம்‍ 9

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.

மாலைப்பொழுது. தன் பணி முடிந்தும் உறங்கச் செல்லாமல் வானத்தின் விளிம்பில் சூரியன். அழகான செவ்வானம். வீடு திரும்பும் சூரியன் முதுகில் சிவப்புமை அடித்து முட்டாள் தினம் கொண்டடுகிறதா நிலா? இல்லை இரவு - சூரியனை கொலை செய்ய அதன் உதிரமா வானம் முழுக்க?

முதன்முதலாக உன்னை நினைக்காமல் வானத்து விளையாட்டைப் பார்த்தபடி அந்த சூரியகாந்தி தோட்டத்தில் காத்திருக்கிறேன். அனிச்சையாய் நீ வருவதை உணர்ந்தேன் ஆனால் பொய்யாய் தெரியாதது போல நடித்து வானம் பார்க்கிறேன். பின்னிருந்து என் கண்களை கைகளால் கைது செய்தாய்.

"யாரது?"

"நீயே கண்டுபிடி."

"ம்.. ஏதாவது துப்பு குடு."

"அடப்பாவி என் குரல் கேட்டுமா தெரியல?" பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து அடிக்க வந்தாய்.

"ஏய்.... அங்க பாரு அந்த மேகக்கூட்டம் கூட என்னடா குயில் தோடி ராகத்துல கூவுதுனு என்னைப் போலவே குழம்பிப் போய் இங்க பாக்குது."

"ம்.. கதை சொல்ல சொன்னா நல்லா சொல்லுவ. நான் வந்தது கூட கவனிக்காம உக்காந்திருக்க."

"எனக்கு தெரியுமே நீ வந்தது. தெரிஞ்சா மாதிரி இருந்திருந்தா என் கண்களுக்கு இன்னொரு இமை கிடைச்சிருக்குமா? அந்த சுகம் நிரந்திரமாக கிடைக்குமானால் இருட்டுக்கு வாழ்க்கை பட்டுவிடுவேன் தெரியுமா?"

"பின்னாடி பாக்கவே இல்ல நீ. அப்புறம் எப்படி தெரியும் உனக்கு?"

"அங்க பாரு அந்த சூரியகாந்தி எல்லாம் நீ இங்க இருக்கன்னு சாயந்திரம் கூட கழுத்து வலிக்க கிழக்கைப் பார்த்துகிட்டு இருக்கு. அது எல்லாம் இந்த பக்கமா திரும்பினதை பாத்து நீ வந்ததை தெரிஞ்சிக்கிட்டேன்."

"போதும்பா விட்டா நிறுத்தாம பேசுவ நீ."

சொல்லிக்கொண்டே வைக்கோல் போரின் மேல் சாய்ந்தாய். அந்த வயலில் இருந்த நாத்துக்களெல்லாம் உடனே சாகத்தயாரனது எனக்கு மட்டும் தானடி தெரியும்.

ஊமைக் கரையோடு கதையடிக்கும் நதியாய், பூக்களின் தவத்தை கலைக்கப் பாடும் வண்டாய் பேசி, உன் அழகால் பசித்து, வெட்கத்தை புசித்து, சிறிது நேரம் மடியில் தவழ்ந்து காலத்தின் வயதை அதிகரித்தேன்.

உன் தாலாட்டுப் பேச்சில் மயங்கி கிடந்தவனை உனக்கு எசைப்பாட்டு பாடும் குயில் எழுப்பியது. தலை கோதிக் கொண்டே நீ இருக்க மனம் முர‌ட்டுக்குதிரையாய் பாய்ந்து ஓடியது எண்ணக்காட்டில். ("நான் சஹாராவின் சகோதரன் என் பகல்கள் சுடும், இரவு குளிரும் அது தான் வழக்கம் ஆனால் இவள் வந்து என் வாழ்ககை வீதிகளில் வண்ணம் விசிறியடித்து இப்போது ஒன்னும் தெரியாதது போல உக்காந்து இருக்கா." யோசனையில் நான்.)

"என்ன யோசிக்கிற?"

"ஒன்னும் இல்ல இன்னும் 2 மாசத்துல‌ காலேஜ் சேரணும். நாம பிரிஞ்சிடுவோமா?"

"எதுக்கு பிரியணும்? நாம ரெண்டு பேரும் ஒரே காலேஜுல சேந்தா போச்சு."

"நடக்குமா?"

"ஏன் நடக்காது? வேணும்னா பாரு நாம ஒன்னாதான் படிக்கப்போறோம்."

நீ சொன்னதால் அது உண்மையில் நடந்தது போலவே எனக்கு தோன்ற இருவரும் சிரிப்போடு கிளம்பினோம் வீட்டுக்கு. உதட்டில் சிரிப்பு இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லாதது ஒரு அறிவு கொண்ட செடிகளுக்கு கூட தெரிந்தந்தது. காலையில் பார்த்த வண்ணங்கள் எல்லாம் தன்னுள் இருந்தாலும் இந்த வானம் ஏன் நட்சத்திரங்களால் ஓட்டை போடப்பட்ட கருப்பு புடவையை கட்டிக்கொள்கிறது? ஒரு வேளை என் சோகத்தை பகிர்ந்து கொள்கிறதோ?

காதல் காலம்‍ -10

காதல் காலம்‍ தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

2 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

தங்களின் கதைகள் மிகவும் அருமை... காதல் சுவையை மிகவும் ரசித்து ருசித்த தங்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகின்றேன்..!

- கவியானவன் !

ஸ்ரீ said...

காதல் சுவையா? சுமையா?. சுமக்கவும் செய்திருக்கேன் விக்ரமா தங்களைப் போலவே ;) ஆனால் பெருமை படும் அளவுக்கு காதலித்திருக்கிறேன்.