நிரந்தர கர்பிணி

கோயிலுள்ளே பத்து ரூபாய்
போட்ட கை தான்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் தேடியது.

கோயில் காளையாகவே
பிறந்திருக்கலாம்
யோசனையில்
பிச்சைக்காரச் சிறுவன்.

அரியும் சிவனும்
ஒன்னென்று
புறியவே
ஒரு யுகமாச்சே!
அப்போ
மதநல்லினக்கம்?
சில ஜென்மங்கள்
கழித்து பேசுவோம்...

நிரந்திர
கர்பிணியாய்
கோயில் உண்டியல்,
வெளியே
பாலுக்கு கதறும்
ஏழைகள்.
கேட்கவில்லையா
உங்களுக்கு?

"கடவுள் முன் எல்லோரும் சமமா?"
சரி முதலில்
"கடவுள் எல்லோரும் சமமா?"
ஆமென்றால்
அய்யனாருக்கு மட்டும்
ஏன் 'அவுட் ஹவுஸ்'?

பொருள் வாங்கி,
அருள் தரும்
ஐந்தறிவு யானையை
மன்னிப்பேன்.
உன்னையல்ல....

அன்பே சிவம்...
-ஸ்ரீ.

ஸ்ரீயாகிய நான் 1 வயசுக்குவந்துட்டோம்ல

தப்பா நினைக்காதீங்க. பசங்க எப்போ வயசுக்கு வராங்கனு தெரியமாட்டேங்குதே! ஆனா பசங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சா வயசுக்கு வந்தா மாதிரினு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தது 12‍th படிக்கும் போது தான். கொஞ்சம் லேட் இல்ல? அப்போ கொஞ்சம் படிப்பாளி நான், இதெல்லாம் தெரியாது. எக்ஸ்கர்சன் அப்டின்ற பேருல வாத்தியாருங்க ஊரு சுத்த கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த வருசம் மெட்ராஸ் போலாம்னு சொன்னாங்க. கிளாஸ் கவனிக்காம சும்மா பின்னாடி பென்சுல பேசுரத கேட்டேன் அவனுங்க எனக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டானுங்க போல பீரை பத்தி பேசிகிட்டு இருந்தானுங்க. எனக்கு ஆசை வந்துடுச்சு சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமேனு அவனுங்க கிட்ட கெஞ்சுனேன். அவனுங்க சரி ஆனா நீ தான் வாங்கிட்டு வரணும்னு சொல்லிடானுங்க பாவிங்க. உடனே மாஸ்டர் பிளான் போட்டோம் நானும் என் பிரண்டு ஓணானும். அன்னிக்கு ராத்திரி தான் ஆபரேசன் பீர். அவன் வண்டி எடுத்துகிட்டு பாருக்கு போனோம். போகும் போது நான் தான் ஓட்டினேன் ஆனா எனக்கு வண்டி ஒட்ட தெரியாது ஏதோ ஒரு சந்தோசத்துல ஓட்டிட்டேன். அவன உள்ள அனுப்பி வாங்கிட்டு வர சொன்னேன் (உசாரு இல்ல நாங்கெல்லாம்). போனவன் அலறிகிட்டு ஓடி வரான் அவனோட அப்பா உள்ள இருக்காராம், ஆனா செல்லம் வாங்கிட்டு வந்துட்டான். சீக்கிரம் வண்டி எடுடானு சொல்றான் ஆனா வண்டி நவுற மாட்டேங்குது. அப்டியே வண்டிய தள்ளிகிட்டு எஸ் ஆயிட்டோம்.

அடுத்த பிரச்சனை எங்க வெக்கறதுனு. அடுத்த நாள் 4 மணிக்கு தான் போறோம் சரி அத அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பொதருல போட்டுட்டு போயிட்டோம். நான் வீட்டுக்கு நல்ல புள்ளயா போய் மத்த விசயம் எல்லாம் எடுத்து வெச்சேன். ஒரு 7up பாட்டில் எடுத்து போட்டுகிட்டேன் (அதுல ஊத்துனா தான் தெரியாதுனு ஐடியா. எப்டி யோசிச்சேன் பாத்தீங்களா?). சந்தோசமா தூங்க போயிட்டேன். அடுத்த நாள் 3.30 மணிக்கு அவன் வீட்டுக்கு போனா அந்த இருட்டுல எந்த பொதருல போட்டோம்னு ஞாபகம் இல்ல. டார்ச் அடிச்சி எப்டியோ 10 நிமிஷதுல கண்டு புடிச்சிட்டோம். அதுக்கு அப்புறம் தான் தெரியுது அது சோடா பாட்டில்ல இருக்குற மூடி மாதிரி இருக்கு. ஓப்பனர் இல்ல, பல்லால கடிச்சாலும் வேலக்கு ஆகல. அடுத்த ஐடியா நர்ஸ் ஊசி எல்லாம் ஒடச்சி ஒப்பன் பண்றா மாதிரி தொரக்கலாம்னு தோணுச்சு (இட் ஹேப்பன்ஸ்! எல்லா நேரமுமா நல்ல ஐடியா வரும்?). ஆனா அது சொதப்பல்னு கல்லால அடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது. எல்லா பீரும் என் சட்ட மேல தான். பாதி பாட்டில் காலி மீதிய 7up பாட்டில்ல ஊத்தினோம். ஸ்கூல் யுனிபாம்ல தான் போணும் ஆனா சட்ட எல்லாம் நாசம் ஆச்சு அப்டியே அவன் வீட்டுக்கு பின்னாடி போய் இருட்டுல அத தோச்சு மாட்டிக்கிட்டு போனேன்.

ஆனா அந்த வாசனை (நாத்தம் தான் ஆனா இப்போ அது வாசனையா தெரியுது) அப்டியே தான் இருந்தது. எல்லாம் வித்தியாசமா பாத்தானுங்க. ஓடி போய் கடைசி சீட்ட போட்டு சைலண்ட் ஆயிட்டேன். அப்புறம் சட்டய கழட்டி தூக்கி போட்டுட்டேன். அத காசு குடுத்து வாங்கிட்டோமேனு குடிச்சுட்டேன். நம்ம சிம்ஸ் சூப்பரா ஆடியிருக்குமே நிலவை கொண்டு வானு ஒரு வாலி பாட்டு அத போட்டு சரியான குத்து போட்டேன். அப்பால போய் பிளாட் ஆயிட்டேன். வாய முதலை மாதிரி தொரந்துகிட்டு தூங்கி இருக்கேன். அத போட்டோ வேற எடுத்து மானத்த வாங்கிட்டானுங்க. ஆனா நான் கவலை படலைங்க (இருந்தா தான;)). அன்னிக்கு இருந்து நானும் சொல்லிக்கிறா மாதிரி வளந்துட்டேன் ஸ்கூல்ல. 12th முன்னாடி நடந்த கத நிறைய இருக்கு (வித்து ரொமான்சு) . அப்புறம் சொல்றேன். ரொம்ப யோசிக்காதிங்க ரொமான்சுனு சொன்ன உடனே... ;)

ஸ்ரீயாகிய நான் 2

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

கட உள் கடவுள்

சேமித்த பாவமூட்டைகளோடு
அவன் வீடு போக,
காசைப் பார்த்த கொடி மரம்
காலம் மறந்து பூக்க,
காந்திக்கு ஐயர் எங்களிடையில்
கண்ணாமூச்சி நடத்த,
புறப்பட்டேன் அவனை
தேடி நானே!

துரும்பை கிளறியும்,
தூணை சுரண்டியும்
ஏமாந்து போனேன்.
"ஏழையின் சிரிப்பு"
என்றாரொரு பெரியவர்.
ஏழைக்கா பஞ்சம்?
பசியெனும் பசையால்
இடுப்போடு வயிறொட்டியவன்
எப்படி சிரிப்பான்?
மீண்டும் ஏமாற்றம்.

வேறு வழியின்றி
அச்சிலை முன்னே
இறக்கி வைத்து நடந்தேன்.
ஏனோ இப்போது மனம்
அதிக பாரமாய்!
"விதைத்ததை நானே
அறுத்துக் கொள்கிறேன்"
சொல்லி மறுபடி சுமந்தேன்.

ஆனால்
அதில் சுமையிருந்தும்
பாரமில்லை.
அட!
உள்ளே கிடப்பவனை
வெளியே தேடினால்
கிடைப்பானா?

கட+ உள் = கடவுள்.

அன்பே சிவம்...
-ஸ்ரீ.

அசைபோடுகிறேன்

நண்பர்களே!

ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த காலேஜ் பக்கம் போயிருந்தேன். பின் நோக்கி போகிற சுகமே தனி தான். முதல்ல போக‌ணுமானு தான் யோசித்தேன். நான் காதல் பழகிய அந்த அழகான உலகத்த மறுபடியும் பாக்க ஏதோ என்ன இழுத்துட்டு போயிடுச்சு. என்கிட்ட நல்லா பழகுனவங்களை மட்டும் பாத்துட்டு வந்துடலாம்னு போனா அங்க எல்லாரும் அவர் ரூம்ல தான் இருக்காங்க. என்ன உருப்பட மாட்டடானு திட்டுனவங்க தான் என்ன பார்த்து சந்தோஷப் பட்டாங்க. எங்கயோ படிச்ச ஞாபகம் "வெளியேறியது பறவை, கூண்டுக்கு விடுதலை.". ஆனா அந்த கூண்டுகள் எனக்கு கூடு கட்ட சொல்லித்தந்து இன்னும் கூண்டா இருக்கவே சந்தோஷப்படுதுங்க. என் பேரை 2 வருஷம் கழிச்சு கூட முக்கால் வாசி சரியா சொன்ன அந்த பேராசிரியை, ஆர்வமா என்ன பாத்த ஜூனியர் எல்லாம் "ஏன் இவ்ளோ நாள் போகாம இருந்தேன்னு என்னயே கேள்வி கேக்க வெச்சுது.". நீங்களும் ஒரு முறை போய் பாத்தாதான் நான் சொல்ற‌து புறியும். திரும்ப வர மனசில்லாம தான் வந்தேன். நியாபகங்கள் சுவை இப்போது புறிந்து போச்சு அதனால் ஒரு புது பகுதி ஆரம்பிக்க நினைக்கிறேன். பேரு தேடி சலிச்சு போச்சு. "Being Sri" அப்டினு வைக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா தமிழ்ல எழுதும் போது நம்ம பசங்க தப்பா படிக்க போறாங்களோ ஒரு பயம் அதனால "ஸ்ரீயாகிய நான்" அப்டினு அரம்பிக்க போறேன். என் வாழ்க்கையில நடந்த சில மறக்க முடியாதவை மட்டுமே இடம் பெறும். நீங்களும் ஒரு முறை போய் பாக்கலாமே...?

அசைபோடுகிறேன்...
-ஸ்ரீ.

காதல் பிழைக்க

எங்கே போகிறது இந்த காதல்?
காதல் போயின் சாதல்
என கொதித்த மூத்த கவியின்
வார்த்தையை பொய்யாக்கும் முயற்சியோ?

கடற்கரை மணலிலும்,
அரங்குகளின் இருட்டிலும்,
பூங்காவின் புதரிலும்,
காதல் கொலை செய்யும் காமுகா!

நடுத்தெருவில் சூரியன் சிரிக்க‌
புணரும் தெருநாய்க்கும்
உனக்கும் பெரிய‌
வித்தியாசம் இல்லை.

காமஇச்சை தீர உனக்கு
காதலென்ன கேடயமா?
அடேய் படைத்தவனே!

ஒன்று
ஆணைக் கருத்தரிக்கவை,
இல்லை
அவளை ஊர் கூட்டி,
அவன் வீட்டின் முன்
பிரசவிக்க ஆணையிடு!

காதல் பிழைத்துக்கொள்ளும்...

காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

(உண்மைக் காதலை சாடி எழுதப்படவில்லை)

தேவதைலோகம்

என்ன வரம் வேண்டுமோ கேள்!
உறக்கத்தின் நடுவே
உரக்கக்கேட்ட குரலால் எழுந்தேன்.
தூக்கத்தை தூர எட்டி உதைக்கும் முன்
பிரகாசமாக சிரித்தான் கடவுள்.

மானிடப்பதரல்லவா சுயநலமே
முந்திக் கொண்டு வர‌
தேவலோகத்தில் ஒரு இடமென்றேன்
மறுக்கவா முடியும்?
தர்மசங்கடத்தில் அவன்!

உடனே சுதாரித்துக் கொண்டு
சரி அது வேண்டாம்.
என்னவளை அரை நொடி கூட‌
பார்க்காமல் இருக்க முடியாது,
இமைகளை செயலிழக்கச் செய்யென்றேன்.

தேவர்களின் குணத்தை கேட்பதை
புரிந்து மர்மமாக சிரித்து மறைந்தான்.
இமைகள் முத்தமிடுவதை நிறுத்தின,
தேவனான திமிரில் தேவலோகத்திக்கெதிராக‌
தேவதை உனக்கு தேவதைலோகமொன்று செய்தேன்.

இதழோடு இதழ் முட்டி உனக்கும்
நம் காதல் போல் அமரநிலை தந்தேன்.
சரி வா நம் லோகத்துக்கு அந்த‌
தாஜ்மகாலை ஒரு படிக்கல்லாக்கலாமா?
‍பரிசீலிப்போம்.

கடவுளையே வென்ற பரவசத்தில்
திளைத்த நேரம் காதோரமாய்
"இப்போது புரிகிறதா?
முதல் வரம் ஏன் தரவில்லையென்று."
மர்ம சிரிப்பின்
முடிச்சியவிழ்த்தான்.

இப்போது தேவனானாலும்
முன்னாள் மனிதன் தானே!
அசட்டுத்தனத்தை துடைத்துக்கொண்டு
என் தேவதைலோகத்தில்
நான்....


காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

காதல் காலம்‍‍‍ 8

இது பாகம் 8 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

எப்போதுமே உன்னோடு நான் இருந்து விடுவேன் என்று நினைத்து தானோ அந்த பொறாமைக்கார கடவுள் படைத்தான் இரவை. தனிமையைக் கூட சமாளித்து விடுவேன் ஆனால் உன் நினைவுகளை என்ன செய்ய? இரவோடு சேர்ந்து அவையும் இம்சை செய்தன. கனவோடு கண்ணாமூச்சி, தலையணைக்கு உயிர் தந்து அதோடு செல்ல பேச்சு, இப்படியே இரவைக் கொன்று முடித்தேன். தலையில் தீ வைத்து விட்டார்களோ? தன் கொண்டையைப் பார்த்து சந்தேகத்தில் கூவும் சேவல், மெதுவாக வெளியே வந்து சோம்பல் முறிக்கும் சூரியன், என்னைப் போலவே இரவை வெறுத்திருந்து கூட்டை விட்டு பறக்கும் புறாக்கள் அனைத்தும் அழகாகத் தெரிந்தாலும் மனம் உன்னைத்தேடியே அலைபாய்ந்தது. பால் வாங்கும் காரணம் சொல்லி கால்கள் உன் வீடு தேடி நடந்தன.

இரவில் நிலவும்
உனைக்காணா நேரம்
வடித்த கண்ணீர் தானோ?
விடியலில்
புற்களிலும், பூக்களிலும்.

தூரத்தில் என் உயிருக்கு உருவமும், பச்சை தாவணியும் கொடுத்தார் போல் நீ. அந்த தெருவையே அழகாக அலங்கரித்து கொண்டிருந்தாய் என் வாழ்க்கையை போலவே. தண்ணீர் தெளித்தும் அடங்காத உன் வீட்டு வாசலின் தாகம், நீ சரியாக துவட்டாத ஒரு துளி நீரால் மூழ்கிப்போனது. அது சரி சூரியனையே குளிரச்செய்யும் அந்த சொட்டு இது வெறும் நிலம் தானே!

வாசலைக் கொஞ்சுகிறாயோ? ஓ! கோலமா? அடிப்போடி பைத்தியக்காரி நாணத்தால் நீ கால் நுணியில் போடும் கோலத்தை விடவா இது அழகாக இருக்கப் போகிறது. நடப்பதை மறந்தன கால்கள். என்னைக் கண்ட நீ மிரண்டு போன மான் குட்டியாய் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினாய். கீழே என்னை திட்டிக்கொண்டிருக்கிறது பாதியில் நீ விட்டுச்சென்ற கோலம். அட இது கூட அழகாகத்தான் இருக்கிறது தேய்பிறை போல. இந்த நிகழ்வுகளில் என்னைத் தொலைத்து வெறும் கையோடு வீடு திரும்பினேன். பள்ளி முடிந்து திரும்பும் நேரம் வழக்கமான வார்த்தை விளையாட்டைத் தொடங்கினேன்.

"ஏய்! அப்படியா திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வந்து நிப்ப?"

"என்னிக்கா இருந்தாலும் உன் வீட்டுக்கு வரப்போரவன் தானே கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் அவ்ளோ தான்."

"ம்... சரி மயில் கோலம் பாத்தியா? எப்படி இருந்துச்சு?"

"மயில் போட்ட கோலத்த பாத்தேன் ஆனா.. மயில் கோலத்த பாக்கலயே!!"

"அய்யோ! ஒழுங்கா பதில் சொல்லு."

"நிஜமா தான். உன் கை பட்டதால இனிக்கிற கோலமாவை எல்லாம் சர்க்கரைனு ஏமாந்து போன எறும்புங்கள் எடுத்துகிட்டு போயிடுச்சு. அதான் பாக்க முடியல."

செல்லமாக உன் கையில் இருந்த குச்சியை என் மேல் வீசினாய். நான் நகர்ந்து விட, கூட்டுக்கு சுள்ளி தேடி வந்த மைனா அதன் வாசற்காலுக்கு அதை எடுத்துக் கொண்டு பறந்தது. கொடுத்து வைத்த பறவை அந்த கூடு கலையாது, கலைக்கவும் முடியாது. அந்த அடியின் சுகத்தை இழந்து விட்ட சோகத்தில் வரவிருக்கும் இரவுடனான சண்டைக்கு என்னை ஆயுத்தப் படுத்திக் கொண்டே நடந்தேன்.

காதல் காலம்‍‍‍ பாகம் 9

காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

பார் ரதி

இதயப் பூவமர்ந்து
உயிர்த்தேன் குடித்து
இமைச்சிறகடிக்கும்
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.

கருப்பு என்ன
ஒதுக்கப்பட்ட நிறமா?
அதில் பூக்களே இல்லை
ம்... ஒருவேளை,
உன் கூந்தலினும்
மணம் ஏற்ற முயன்று
தோற்றானோ நான்முகன்?

மேக அரிதாரம்
பூசியும் அழகில்
உனக்கு ஈடாகாமல்
வானம் அழுவதைத் தான்
மழை என்கிறதா உலகம்?

'எமக்குத் தொழில் கவிதை'
என்றான்
பாரதி
அவன் தொழிலாகவே வாழும்
நீ
பார் ரதி!!

மனதில் உனை விதைத்து
நீர் கொண்டு திரும்பும் முன்
விருட்சமாக சிரிக்கிறாய்.
கொணர்ந்த நீர் போதாமல்
உயிர் உருவி ஊற்ற‌
மறுகனம் போன்சாயாய்
மாறி சிலிர்க்கிறாய்.
ஏனடி இந்த சில்மிஷம்?
சில்மிஷியே!!!


காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

நேத்து பெஞ்ச மழை

"நல்ல புள்ளயா படிச்சு
பெரிய ஆளாவனும்"
வேளக்காரியா அவமானப்பட்டு
முடியும் அவ வாழ்க்கயோட‌
ஆதங்கத்த கொட்டித்தீத்தா
ஆத்தா

கண்டிப்பானு நாஞ்சொல்லி
முடிக்குமுன்
போய் சேந்தா

அய்யோ மவராசி போய்டியே!
போலியா அழற‌ கிழவிக,
குடிபோதயில அம்மனமா
கெடக்குற அப்பன்,
ஆத்தா நகைக்கு கழுகா
சுத்துற மாமன்

அழாம அவ முத்தம்
தந்த ஈரத்த தொட்டுகிட்டு
கெடக்கேன்
முனியப்பா இத காயவுடாத‌
வேண்டிக்கிட்டேன்

கடன வாங்கி காரியம் பண்ணி
சொந்தத்த வழியனுப்ப‌
அப்பனும் போனான் கூட‌
நானும் சொந்தம் தான்டானு சொல்லி

பிச்சயெடுக்க தோணல‌
கையேந்த ஆத்தா
கத்தும் தரல‌

சாராயக்கடயில வேல‌
கூலி அடியும் சூடும்
தான்டி

வவுறு காஞ்சி
உசுரு போவ‌
சோத்துக்கு திருடினேன்

மறஞ்சி வந்து
தொரந்த பையில‌
நோட்டுல எல்லாம்
ஆத்தாவோட மூஞ்சி

மன்னிச்சுடுடி என்ன‌
கதறி அழுது ஓடுனேன்
அந்த ஆள தேடி

ஐயா உங்க பைய‌
பசியாலத் திருடிப்புட்டேன்யா
மன்னிச்சிக்கோங்க‌

மேல கீல பாத்த‌
புண்ணியவான்
படிக்கிறியானு கேட்டார்
தோள்ள கைபோட்டு

ஆத்தா நேத்து பெஞ்ச மழைக்கு
அர்த்தம் இருக்கு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்!!

-ஸ்ரீ

வழக்கொழிந்த வார்த்தை

இலையுதிர் காலத்தால்
வற‌ண்டு போன போது
என் வாசலுக்கு
வசந்தம் கொண்டு வந்தாய்

கால்களைப் பிடுங்கிக்கொண்டு
சிறகுகள் தந்து
மனக்கூண்டினுள்
சிறை வைத்தாய்

உனக்குள்ளே நான்
கறைந்து போக‌
என் முகவரி
நீயாய் போனாய்

என் அணுக்களில்
குடியேறி
உயிரோடு
சடுகுடு ஆடினாய்

கண்ணீர்த் தேன்,
முத்தத் தீ ஊற்றி
நம் காதல்
செடி வளர்த்தாய்

பூப்பூக்கும்
நேரம் பார்த்து
காற்றோடு
மறைந்து போனாய்


இன்று
நீ இல்லாமல்

வழக்கொழிந்த வார்த்தையாய்
நான்
நினைவுகளின் கல்லறையாய்
என் இதயம்!!


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ

காதல் காலம்‍‍‍ 7

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 7 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.பிள்ளையார் முன் கண்கள் மூடி நீ. உன்னைப் பார்த்தபடி நான். தற்செயலாக இதை கவனித்தாய்.

"ஏய் ஒழுங்கா அங்க பாத்து சாமி கும்பிடு."

"ரெண்டு சிலை இங்கே இருக்கு, அதில் அழகான சிலையை பாத்துகிட்டு நிக்கிறேன். உன்னை பாத்து கோபுரத்து சிற்பங்களுக்கே பொறாமை வேணும்னா நீயே பாறேன் எல்லாம் முகம் சுலிச்சிகிட்டு தான் இருக்கு."

"ஷூ... கோயிலுக்கு வந்தா சும்மா இருக்கணும்." என்று அதட்டினாய்.

"இல்லம்மா கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடணும்."

ததும்பிய புன்னகையை மறைத்துக் கொண்டு திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாய்.

"அடிப்பாவி! இதுக்குத்தானே இவ்ளோ நேரம் பேசுனேன்." மனதில் நினைத்துக் கொண்டே காத்திருந்தேன்.

"தீர்க சுமங்கலி பவ" ஐயர் சொன்ன வார்த்தையால் என் வலது கையில் ஆயுள் ரேகை நீண்டு முழங்கைக்கு ஓடியது. குங்குமத்தை என்னிடம் நீட்டி வைக்கச்சொன்னாய். என் தயவால் உன் இரு புருவங்களும் கை குலுக்கிக்கொண்டன. கையை உன் கண்களுக்கு மேல் வைத்து ஊதினேன்.

"காற்று மொட்டுக்களை திறக்கும்
என்று தான் கேள்வி
ஏனோ இன்று
தலைகீழாய்!"

அந்நேரம் உன் நெற்றியில் ஒரு நாடகம், புருவங்களுக்குள் நடனப் போட்டி. அதில் என்னையே மறந்து போனேன். மேளமோ நாதசுரமோ இல்லாமல் நடந்து முடிந்தது அந்த அழகான திருமணம்.

"சரி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிது போலாமா?"

"கல்யாணமா? கெட்டிமேளம் இல்ல, மந்திரம் இல்ல..."

"கெட்டிமேளம் வைக்க காரணமே ஒருவேளை மணமக்களில் யாராவது ஒருத்தர் கல்யாணம் பிடிக்காமல் மனசுல அழுதால் அந்த சத்தம் வெளியே கேக்கக்கூடாதுன்னு தான். புரிஞ்சுதா? அதனால இங்க கெட்டிமேளத்துக்கு அவசியம் இல்லம்மா."

"எல்லாத்துக்கும் குதர்க்கமா ஏதாவது பதில் வெச்சிரு."

சந்தோஷ‌த்தில் குதித்து மணி அடித்தாய். ஆனால் தரை இறங்கியது இரண்டு பூக்கள் தட்டில் இருந்த அர்ச்சனை பூவோடு சேர்த்து. குனிந்து எடுக்க இருவரும் முயற்ச்சிக்க நம் தலைகள் முட்டிக்கொண்டன.

"இரு இன்னொரு தடவை முட்டிக்கோ இல்லன்னா கொம்பு வளந்துடும்."

"எருமை உனக்கு கொம்பு இருந்தா தான் நல்லா இருக்கும்."

"ஆனால் பூ உனக்கு கொம்பு இருந்தா நல்லா இருக்காதே!"

என்னிடம் இருந்து தப்பித்து கோயிலை சுற்றி ஓடினாய்.

"என் சன்னிதானத்தில் என்ன விளையாட்டு இது?" அசரீரியாய் என்னிடம் மட்டும் பிள்ளையார்.

"பூவை கீழ தள்ளி விட்டதே நீ தானே!" பதிலுக்கு நான்.

"எனக்கும் பதில் தந்து வாயை அடச்சிட்டானே!" கோவத்தில் பிள்ளையார் திரும்பிக்கொண்டார்.

காதல் காலம்‍‍‍ பாகம் 8


காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

காதல் காலம் 6

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 6 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

இன்று வெகு நேரம் ஆகியும் விடியாதது போலவே தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் ஞாயிற்றுக்கிழமை என்று சிற்றறிவுக்கு எட்டியது. பிரதி ஞாயிறு விடுமுறை விட்ட வெள்ளையனை திட்டலானேன். சுவாசிக்காமல் இருக்க முடியுமா? கழற்றி விட்ட கன்றுக்குட்டியாய் உன்னைத்தேடி உச்சிப்பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் காத்திருந்தேன். உழைத்த 100 ரூபாய் நோட்டை நொடிக்கு நூறு முறை எடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் கூலிக்காரனைப் போல, உன் காதல் ஒன்று மட்டுமே உடன் இருக்க உலகத்தை வென்ற பெருமிதத்தில் நான். வழக்கம் போல் காலத்தை முந்திக்கொண்டு முன்னமே வந்து சேர்ந்தேன். என் தனிமையோடு பேசிக்கொண்டிருந்தேன்.

"லூசு வெயில்ல நின்னு என்ன பண்ற?"

"நட்சத்திரம் எண்ணிக்கிட்டு இருந்தேன்."

"லூசுனு சொன்னது சரி தான். இப்போ நட்சத்திரம் எங்க தெரியும்னு கேட்டா,'நிலாவே என் முன்னாடி நிக்குதே நட்சத்திரம் தெரியாதானு சொல்லுவ'."

"இல்லமா நீ என் சூரியன். நீ இல்லாம இவ்ளோ நேரம் இருட்டாதான் இருந்தது அதான் நட்சத்திரம் தெரிஞ்சுது."

"விட்டா பேசிகிட்டே இருப்ப வா கோயிலுக்கு போவோம்."

"ஆமாம் இல்லன்னா பிள்ளையாரே உன்ன பாக்க கீழ இறங்கி வந்துட போறாரு."

படிகளை நோக்கி ஓடினாய்.

"இன்னிக்கு கொலுசு அதிகமா சத்தம் போடுதே!"

"பொய் சொல்ல அளவே இல்லயா? நான் கொலுசே போடலை."

"அப்படியா? அப்ப அந்த சத்தம் எங்கேருந்து வருது? இந்த படிகள் தான் சத்தம் போடுதுனு நெனக்கிறேன் இரு என்னனு கேட்டுட்டு வரேன்."

படிகளை நோக்கி காதுகளை எடுத்து செல்கிறேன்.

"என்ன சொல்லுதுங்க?"

"அதுவா? இந்த கோயில் கட்டும் போது,'சிற்பியோட ஒரு அடிக்கே உடஞ்சுட்டியே அதான் நீ படிக்கல்லா இருக்க ஆனால் 1000 அடி வாங்கியும் உடையாததுனால தான் நான் கடவுள் சிலையா இருக்கேன்னு' அந்த சிலை சொல்லுச்சாம். ஆனா இன்னிக்கு இந்த படி எல்லாம் உன்னோட கால் பட்டதால உள்ள இருக்க கடவுளை பாத்து சிரிக்குதுங்க. உன் ஸ்பரிசம் தொடமுடியாத சாபம் வாங்கியிருக்காம் அந்த சிலை. இதுங்க எல்லாம் பழி தீத்துக்குச்சாம் அதான் சிரிக்குதுங்க."

"அப்பா! பொய் பேசுறதுல உன்ன யாரும் ஜெயிக்க முடியாது. பாத்து பொய் சொன்னா சாப்பாடு கிடைக்காதுனு சொல்லுவாங்க."

"'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது'
பொய்க்கு விலையாய்
உன் வெட்கம் கிடைக்கையில்

பசியும் எடுக்குமோ?"

பதில் தேடி கலைத்து போன நீ கண்ணாலேயே ஆயிரம் பதில் சொன்னாய். அதை மொழி பெயர்த்தால் தான் கவிதை என்கிறது இந்த உலகம்.

காதல் காலம்‍‍‍ பாகம் 7

காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

காதல் காலம் ‍‍‍ 5

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 5 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லை என்றால் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

மேய்ப்பன் தோளில் இருக்கும் வழிமாறிய ஆட்டுக்குட்டியாய் காதலின் தோளில் ஏறிக் கொண்டு பயணித்தேன். சவாரி என்றுமே சுகம் தானே. என் காதலை வட்டியும் முதலுமாக என் மேல் திணித்தாய் நீ. அற்புதமான அந்திப்பொழுது சூரியனை விரட்ட வந்த நிலா வானத்தில். உனக்காக ஆத்தங்கரையில் உன் முகத்தை மனதில் அசை போட்டுக்கொண்டே கல் எறிந்து கொண்டு நான் காத்திருந்தேன்.

"ரொம்ப நேரமா காத்திருக்கியா?"

"இல்ல இப்பதான் வந்தேன் ஆனா இந்த அரசமரம் தான் 70 வருசமா காத்துகிட்டு இருக்கு உனக்காக."

"இன்னிக்கு சூரியன் ரொம்ப சிகப்பா இருக்கே!"

"நீ வருவேனு இவ்ளோ நேரம் காத்திருந்தது அது கிளம்புர நேரம் பாத்து நீ வர அதான் கோவமா இருக்கு போல."

"எல்லாத்துக்கும் பதில் வெச்சிருப்பியோ?"

"முன்னாடி எல்லாத்துக்கும் கேள்வி தான் வெச்சிருந்தேன். இப்போ பதில்கள் தான் என்னை வெச்சிருக்கு."

"சரி அப்போ கேள்வி கேக்குறேன். ஏன் என்ன புடிச்சிருக்கு?"

"இயற்கைய பொய்யாக்க பொறந்திருக்கியே அதான்."

"எப்பவுமே புரியாத மாதிரி தான் பேசுவியா?"

"தேயாத நிலா,
வாடாத பூ,
பேசும் சித்திரம்,
குளிரும் தீ,
அழகான பெண் மயில்,
நடமாடும் கவிதை,
சிணுங்கும் சிற்பம்,
கைக்கெட்டும் வானம்,
கலையாத மேகம்,
ஐந்தடி சொர்கம்,
திகட்டாத தேன்..

இது மாதிரி சொல்லிகிட்டே போலாம். காரணம் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?"

"உன்ன மாதிரியே உன் காதலும் ரொம்ப மோசம்டா கனவுல கூட வந்து தொல்ல பண்ணுது."

"அடிப்பாவி என்னை அது தூங்கவே விடுறது இல்ல. நேத்து இப்படித்தான் தூங்க முடியாமல் உனக்காக் நட்சத்திரம் பறிக்க வானத்துக்கு போயிருந்தேன். சொர்கத்துல காவல் தேவதைகள் கண் அச‌ந்த நேரம் உள்ளே போய் சுவத்துல உன் பேரை கிறுக்கிட்டேன். வந்து பாத்த தேவேந்திரன் தேவர்களை எல்லா சுவத்தலயும் உன் பேரையே எழுத சொல்லிட்டான். கடவுளா இருந்தாலும் சரி உன் பேரை எழுத விடுவேனா? நானே ராத்திரி முழுக்க இருந்து எழுதிட்டு தான் வந்தேன்."

கேட்ட நீ கைக்கு ஒரு முத்தம் தந்தாய். காமத்தை மட்டுமே அறிந்த அந்த வயது காதலோடு நீ தந்த முத்தத்தால் காமத்தைக் கொன்ற காதலாக மாறியது.

"சரி உலகத்துலயே சிறந்த காதல் ஜோடி ஆவோம் தயாராகிக்கோ!" என்றேன்.

"அப்போ ரோமியோ‍‍-ஜுலியட், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு பட்டியலில் நம்ம பேரும் சேத்துடுவோம்."

"காட்டுத்தீயை சுடும்
என் காதலுக்கு
மின்மினிப்பூச்சுடன் போட்டியா?"

இதைக்கேட்ட அரசமரம் இலைகளாக தன் வியர்வையை நம் மேல் உதிர்த்தது.


காதல் காலம்‍‍‍ பாகம் 6


காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

காதல் வலை

பல நேரம் மருந்தானாலும்
சில நேரம் முட்களாக மாறி காயப்படுத்துவதால்
காதலுக்கு சரியான சின்னம் தான்
‍‍- ரோஜா.


உன் கூந்தலில் மல்லிகையாகும்
வரம் வேண்டாம்
நான் கேட்பது
உன் நிழலில் காலானாக‌
இருக்க அனுமதி மட்டுமே !


மேகமாய் என் வானில் வந்து
காதல் மழை தூவினாய்
வேர்கள் நனையாவிட்டாலும்
தாகம் அடங்கியதடி !


பின்னிய காதல் வலையில்
சிலந்திகளாய் - நாம்
பூச்சிகளாய் - நம் பெற்றோர் !


இறந்த பிறகு என்
கண்களை மூடிவிடாதீர்கள்
அவளை எப்போதும்
பார்த்துக்கொண்டிருக்கும்
வரம் வாங்கியுள்ளேன்.


கலைக்கப்படும் என்று தெரிந்தால்
குருவிகள் கூடு கட்டாது,
இடிக்கப்படும் என்று தெரிந்தால்
எறும்புகள் புற்றும் கட்டாது,
கேட்கப்படாது என்று தெரிந்தால்
குயில்கள் பாடாது,
வெட்டப்படும் என்று தெரிந்தால்
மரங்கள் வளராது,
ஏன்
உதிரும் என்று தெரிந்தால்
செடிகள் பூக்காது,
மறுக்கப்படும் என்று தெரிந்தும்
காதலித்தேனே
ஒரு வேளை நான் தான்
அஃறிணையோ ?


காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

பிரம்மனின் தவறு

சிதறிய என் பேனா மை வானமாய்
உதறிய உன் தாவணி வானவில்லாய்
எப்போதுமே
உன்னால் தானடி நான் அழகாய்!!"இதயம் சுக்குநூறாக உடையட்டும்!"
ஆண்டவன் சபித்தாலும் கவலையில்லை
எல்லாத்துண்டிலும் நீ தானே இருப்பாய்
என் ஆயுள் கூடத்தான் செய்யும்.உன் நினைவுகளை சுவாசிக்கும்
முத்தங்களில் பசியாறும்
இந்த வாழ்க்கையே போதும் !பிரம்மன் செய்த‌
முதல் தவறு நீ!
பெண் மயில் உன்னை
ஆண் மயிலை விட‌
அழகாய் படைத்து விட்டானே!உன் சிரிப்பினால் எறிந்து
மீண்டும் உன் மடியில்
மறு ஜென்மம் எடுக்கும்
நானும் ஃபினிக்ஸ் தான்.காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ
‍‍