கன்னத்துப்பூச்சி

அழகானவைகளின் பட்டியல் கொஞ்சம் நீண்டு கொண்டே தான் போகும்। ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது? அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.

எப்போது எழுத ஆரம்பித்தாலும் சில பொருட்கள் நம் நினைவில் நிழலாடும்। சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண்। எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி। ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில்? அது பூவை களவாடும் கொள்ளைகாரனா? இல்லை இரு மலர்கள் பறிமாறிக்கொள்ளும் காதல் கடிதமா?

பூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே! காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி? அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இரண்டாம் நிலை காதல் கடிதமா? நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்தியிலும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா? அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ। காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா? காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன்? எடுத்துப்போகும் மகரந்தப்பொடிகளை பூங்கொத்தாக்கி உன் காதலிக்கு பரிசளிக்க நீ ஒன்றும் மனிதன் இல்லை என்பது எனக்கு தெரியும். இந்த குணத்திற்காவது உன் ஆயுட்காலம் சற்று திருத்தி எழுதப்படலாமே?

பூக்களின் இளவரசனாக நினைத்துக்கொள்வாயோ? தேன் தேடி அதை யுத்தமிட்டு எடுத்துக்கொள்வதாய் எண்ணமோ? தேன் என்ன தெரியுமா? அது ஒற்றை பூவின் கண்ணீர்। பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து செல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா? “உன்னை ஏதும் செய்யமாட்டேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா? உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா? பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா? இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா? வேண்டாம் உன்னை எனக்காக சுமை தூக்கும் தொழிலாளியாக்க உடன்பாடில்லை. போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.

கேள்விப்பட்டிருப்பீர் பாட்டி சொல்ல ‘முன்ஜென்மம் பட்டாம்பூச்சியை கொடுமை படுத்தினால் அடுத்த பிறப்பில் பழிதீர்த்துக்கொள்ளும் அது’ என்று। முன்ஜென்மத்தில் நீங்கள் அதை கொடுமை படுத்தியிருந்தால் நீங்கள் வண்ணத்துப்பூச்சியாகத் தான் பிறக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ நிச்சயம் இல்லை. அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த.

உஷார்! ‘இரக்கமற்றது காதல்’.


முன்னம் உதிர்ந்த சிறகுகளிலிருந்து சில வண்ணத்துப்பூச்சி கவுஜைகள்।

என் காதலின் வண்ணம்
இன்னும் உன் விரல்களில்
ஒட்டி இருக்கின்றதா?
தெரியவில்லை…
ஆனால், சிறகில் நிறமிழந்த
வண்ணத்துப்பூச்சியாக உழன்று
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளில்
இந்த நொடி வரை…

*

இதயப் பூவமர்ந்து,
உயிர்த்தேன் குடித்து,
இமைச்சிறகடிக்கும்,
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.

(பெரிதாகப் பார்க்க படத்தைக் கொஞ்சம் கிள்ளவும்)காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

17 கால்தடங்கள்:

Sri said...

super...!!:-)

//அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த//

yennathu ithu...?!?:-)

Dreamzz said...

adada.... romba urugariye maapla! paarthuda.. kannathupoochinu ninaichu, kadasila kulaviya kottida pora kumari :)

கோபிநாத் said...

ஸ்ரீ

நன்றாக இருக்கு உங்கள் கன்னத்துப்பூச்சி ;))

அழகான எழுத்து நடை ;)

\\போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.
\\

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் ;)

Dreamzz said...

பூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே! காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி?

-- ada kaadhal kadidhathai padichutu poi, serka vendiya idathula serpathupa pattampoochi!

பூவிதழ் மௌனம்
மொழிபெயர்க்க
பட்டாம்பூச்சி..

உன்னிதழ் மௌனம்
மொழிபெயர்க்க
என் முத்தங்கள் :)

Dreamzz said...

என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா?

//

ரொம்ப யோசிக்கிற. முத்திடிச்சு. சீக்கிரம் வீட்டில கல்யாணம் பன்னி வைக்க சொல்லுப்பா!

sathish said...

I like this...
கற்பனை கொடிகட்டி பறக்குது ஸ்ரீ!!! என்ன விஷேசம் :))

//இரக்கமற்றது காதல்//
இறக்கமுமற்றது! அதில் என்றும் ஏற்றம்தானே :))

சத்யா said...

kavidhaigal migavum alagu :)

சத்யா said...

kavidhai ovvondrum alagu..

ஸ்ரீ said...

// Sri said...

super...!!:-)//

நன்றி ஆங்கில ஸ்ரீ ;)

//அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த//

yennathu ithu...?!?:-)//

அடடா சரியாத்தாங்க கண்டுபிடித்திருக்கீங்க. முதல் பத்தியில் பெண், காதல் சாயல் இல்லாமல் எழுதப்போவதா சொல்லிட்டு ஏன் கடைசியில இதை இணைச்சன்னு தான கேக்குறீங்க? புரியுதுங்க.

மனம் ஒரு குரங்கு................. :))

வந்து பொறுமையா போட்ட மொக்கைய படிச்சதுக்கு நன்றி.

aruna said...

ரொம்ப அழகான பதிவு....நான் பட்டாம் பூசியைப் பற்றி எழுதணும்னு நினைச்சுட்டு இருந்தேன்...முந்தீட்டீங்களே!! பெண்ணை விட்டு விலகி எழுதப் போறேன்னுட்டு பெண்ணிலேயே கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே!!!
அன்புடன் அருணா

ஸ்ரீ said...

//Dreamzz said...

adada.... romba urugariye maapla! paarthuda.. kannathupoochinu ninaichu, kadasila kulaviya kottida pora kumari :)//

யய்யா ட்ரீம்ஸ் நல்லதையே யோசிப்போமே!! :))

// ada kaadhal kadidhathai padichutu poi, serka vendiya idathula serpathupa pattampoochi!

பூவிதழ் மௌனம்
மொழிபெயர்க்க
பட்டாம்பூச்சி..

உன்னிதழ் மௌனம்
மொழிபெயர்க்க
என் முத்தங்கள் :)//

அடடா உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போ. சூப்பரா ஒரு கவிதை வேறையா?

//ரொம்ப யோசிக்கிற. முத்திடிச்சு. சீக்கிரம் வீட்டில கல்யாணம் பன்னி வைக்க சொல்லுப்பா!//

பன்னியா என்னப்பா ஆச்சு உனக்கு :).

நன்றி மாப்பி வந்ததுக்கு.

ஸ்ரீ said...

//கோபிநாத் said...

ஸ்ரீ

நன்றாக இருக்கு உங்கள் கன்னத்துப்பூச்சி ;))

அழகான எழுத்து நடை ;)//

எல்லாம் உங்களோட எழுத்த படிச்ச தாக்கம் தான் கோபி :)

//ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் ;)//

ரசித்தமைக்கு நன்றிங்கண்ணா.

ஸ்ரீ said...

//sathish said...

I like this...
கற்பனை கொடிகட்டி பறக்குது ஸ்ரீ!!! என்ன விஷேசம் :)) //

விஷேசமா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சதீஷ். அலுவலகத்தில் மதிப்பிடுதல் நடக்க போதா அதான் என்னையும் அறியாம உளறுறேன்.

//இரக்கமற்றது காதல்
இறக்கமுமற்றது! அதில் என்றும் ஏற்றம்தானே :))//

நீங்க சொன்னா ஓகே தான்.

ஸ்ரீ said...

//சத்யா said...

kavidhaigal migavum alagu :)//

ரொம்ப நன்றி சத்யா.

ஸ்ரீ said...

//aruna said...

ரொம்ப அழகான பதிவு....நான் பட்டாம் பூசியைப் பற்றி எழுதணும்னு நினைச்சுட்டு இருந்தேன்...முந்தீட்டீங்களே!!//

அச்சச்சோ! பரவாயில்லை அக்கா பட்டாம்பூச்சியை பற்றி எழுத எவ்வளவோ இருக்கே! ;)


//பெண்ணை விட்டு விலகி எழுதப் போறேன்னுட்டு பெண்ணிலேயே கொண்டு வந்து முடிச்சுட்டீங்களே!!!
அன்புடன் அருணா//

என்னக்கா பண்ண மனம் ஒரு குரங்கு :)). எங்க போனாலும் மறுபடி காதலிலேயே வந்து நிக்குது :(

புகழன் said...

//அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.
//
என்று சொல்லி விட்டு பிறகு ஏன் இந்த வரிகள் ஸ்ரீ
//
இதயப் பூவமர்ந்து,
உயிர்த்தேன் குடித்து,
இமைச்சிறகடிக்கும்,
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.
//

ஸ்ரீ கவிஞர்கள் பெண்னை மறந்து மறுத்து கவி எழுதுவது உண்மையிலேயே சிரமம்தான்.
ஏனென்றால் கவிதையின் மற்றொரு வடிவம்தான் பெண்

ஸ்ரீ said...

// புகழன் said...

//அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.
//
என்று சொல்லி விட்டு பிறகு ஏன் இந்த வரிகள் ஸ்ரீ
//
இதயப் பூவமர்ந்து,
உயிர்த்தேன் குடித்து,
இமைச்சிறகடிக்கும்,
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.
//

ஸ்ரீ கவிஞர்கள் பெண்னை மறந்து மறுத்து கவி எழுதுவது உண்மையிலேயே சிரமம்தான்.
ஏனென்றால் கவிதையின் மற்றொரு வடிவம்தான் பெண்//

நீங்கள் சொல்வதும் சரி தான் புகழன். நீங்கள் குறிப்பிட்ட கவிதை ஒரு மீள்பதிவு தான். அது நான் எப்போதோ எழுதிய கவிதை தலைப்பு வண்ணத்துப்பூச்சியாக இருப்பதால் அதை சேர்த்துவிட்டேன்.

உண்மை தான் பெண்களில்லாமல் கவிதை எழுதுவது சிரமம் தான். நன்றி புகழன் சார்.