காதல் காலம் 10

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.நேரமில்லாதவர்கள் இதை மட்டும் கூட தனியாகப் படிக்கலாம்.

நிறைமாத கர்பிணியாய் மேகக்கூட்டம். உன்னைக் காண வெளியே கால் எடுத்து வைப்பதற்குள் பிரசவித்து விட்டது. சக்கரைவாகப் பறவையைத் தவிர மற்றவை எல்லாம் மனமுடைந்து கிளைகளில். சக்கரைவாகமாகவே பிறந்திருக்கலாம் மழைக்காலத்திலும் கூட காதலித்திருக்கலாமே என எண்ணத்தில் ஜன்னலோரம் மழையை ரசிக்கிறேன். மழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது காற்று. என்னை வந்து சேரும் முன் உன்னைத் தொட்டு விட்டதா அது? இவ்வளவு குளிர்கின்றதே இன்று. அருகில் நீயில்லாமல் சாரல்கள் கூட ஊசியாய் என்னைக் குத்தின. மின்சாரக்கம்பிகளில் சிட்டுக்குருவிகளுக்கு பதிலாக மழைத்துளிகள் தொங்கிக் கொண்டிருந்தன ஆனால் அடுத்து வந்த துளி முன்னால் இருந்ததை தள்ளி விட்டு இடம் பிடித்துக் கொண்டது. ம்... இந்த இயற்கையும் கூட மனிதர்களைப் பார்த்து மாறி விட்டதோ?

கொட்டும் மழைத்துளிகள் பிடித்து வானுக்கு ஏறி மேகங்களை சிறை பிடிக்க மனம் துடித்தது. ஏனோ தெருவோரமாய் மழையில் விளையாடிய குழந்தை உன்னை நினைவூட்ட நீயும் அதை ரசித்துக் கொண்டிருப்பாய் என உணர்ந்த மனம் அமைதியானது. வண்ணம் கரையாமல் பாதுகாக்க என் அறையில் தஞ்சம் புகுந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி. உன் எட்டு நாள் ஆயுட்காலத்தில் ஏன் விளையாடுகிறானோ வருணன்? அந்த குறுகிய காலத்தில் காதலையும் தேனையும் எப்படி சுவைக்கிறாய் சொல்லி விட்டுப்போ.

காலில் தான் உன் சுவை மொட்டுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உன் காலில் என் காதல் தூது கட்டவா? இல்லை அதையும் போய் சேர்ப்பதற்குள் சுவைத்து விடுவாயா? படைத்தவன் கொடுமைக்காரன் ரெண்டு பூக்கள் காதலிக்க உன்னை வெறும் ஆயுதமாக பயன்படுத்துகிறானே? ஆனால் அந்தக் காதலை நீ சுவைக்கும் முன் கல்லறையில் புதைக்கிறான். பூவுக்கு மட்டும் தான் காதல் தூது போவாயா? இன்று எனக்கும் போயேன் என் காதலியும் பூ தான்.

"பூலோகம்
பெயர் வந்ததே
உன்னால் தானோ?"

ரவிவர்மனின் கிழிந்த ஓவியத்துண்டாய் பறந்து வெளியே போனது. மழை நின்றது தெரிய வர நானும் கிளம்பினேன் என் பூவைத் தேடி. வானவில்லாய் வானத்தில் கோலம் போட்டது சூரியன் மழைத்துளியோடு கைகோர்த்து. தூரத்தில் எப்போதும் சந்திக்குமிடத்தில் ஈரமாக நீ, நனைந்து போனேனடி நான்.

"ஏய் இவ்ளோ நேரம் நனைஞ்சுட்டா இருந்த?"

"இல்லை நீ வருவேன்னு காத்துகிட்டு இருந்தேன்."

"பைத்தியம் முதல்ல துவட்டிக்கோ."

"வானவில் எடுத்து தா துவட்டிக்கிறேன்."

"அது வானத்தோட தாவணி. நனைந்து போன தாவணியை வானம் காய வைக்குது. அதுல தொடச்சா உன் அழகு அதுல ஒட்டிக்கும் வேண்டாம்."

சொல்லிக்கொண்டே உன் தலை துவட்ட மீண்டும் மேகம் மழையாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த வாழைமர இலை பிடிங்கி இருவரும் நடக்கலானோம். உன்னை நனையவிடக் கூடாதென அந்த வாழை இலை கூட மழையோடு தன் ஒட்டு மொத்த பலத்தை திரட்டி போட்டி போட்டு வென்றது ஆனால் நான் சற்று கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டேன். மழையில் நனைந்ததால் அன்று நான் அழுததை நீ கவனித்திருக்க வாய்ப்பில்லை.

காதல் காலம் தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

0 கால்தடங்கள்: