வெள்ளி, டிசம்பர் 28, 2007
செவ்வாய், செப்டம்பர் 11, 2007
இதுவும் காதல்
"மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க." அம்மா
செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து
சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.
"எப்படி படிச்சிருக்க?" மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.
"என்ன ஆச்சு?"
"என்னை பொண்ணு பாக்க வராங்க."
12 வகுப்பு பொது தேர்வு. குழப்பத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்.
"சரி அதெல்லாம் கொஞ்சம் நேரம் மறந்திடு இப்போ போய் ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு வா."
"முடியாது என் அண்ணன் பரிட்சைக்கு அப்புறம் வெளியிலேயே நிப்பான். வேற வழியே இல்லை." பேசிக்கொண்டே அழத்தொடங்கினாள்.
"சரி இப்போ என்ன தான் பண்ணனும் சொல்லு."
"கல்யாணம்"
"எப்போ?"
"இப்போ உடனே."
"விளையாடுறியா?"
"இது நடந்து ஆகணும் இல்லை இன்னைக்கே செத்துடுவேன்." வழக்கம் போல தன் பிடிவாதத்தில் இருந்து விலகாமல் பேசினாள் மஞ்சுளா. அவள்
குணம் அது. ஒரு விஷயம் முடிவு செய்து விட்டால் மாறமாட்டாள்.
"பைத்தியமா உனக்கு?"
"ஆமாம். பதில் சொல்லு முடியுமா? முடியாதா?"
இருந்த 10 நிமிட அவகாசத்தில் முடிவெடுத்தார்கள். நேரே கோயிலுக்கு போய் கல்யாணம் செய்து வீடு திரும்பினார்கள். ராமநாதன் ஏதோ
யோசனையில் ஆழ்ந்திருந்தார். முகத்தில் இறுக்கம்.
"அப்பா!"
"என்ன டா சிவா! பரிட்சை எப்படி எழுதின?" உயிர் இல்லாத குரலில் கேட்டுவிட்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
"அது வந்து...." நடந்ததை அப்படியே அவரிடம் சொன்னான்.
வெளியில் வந்து மஞ்சுளாவைப் பார்த்து, "பரந்தாமன் மகளா நீ? ஏற்கனவே எங்களுக்கு ஆகாது. இவனை தாய் இல்லாத பையனாச்சேனு செல்லம்
குடுத்து வளத்தது என் தப்பு தான் மா. போங்க என்ன ஆகப்போகுதோ! பெத்த பாவத்துக்காக அவனுக்கும் அவனை நம்பி வந்த பாவத்துக்காக
உனக்கும் சோத்தப்போடுறேன்."
மஞ்சுளா வீட்டார் விஷயமறிந்து சிவா வீட்டு வாசலில்....
"யோவ் புள்ளையா வளத்து வெச்சிருக்க?...................................."
அரை மணி நேரம் கழித்து ஆத்திரம் அடங்க, "அவ என் பொண்ணே இல்லையா. எப்படியோ ஒழிஞ்சிபோகட்டும்" கடைசியாக மஞ்சுளா அப்பா
வயிரெரிய கத்தி விட்டு போனார்.
இரவு சாப்பாடின் போது "இப்போ சந்தோஷமா உங்களுக்கு?" கேட்டுவிட்டு படுக்கப் போனார் ராமநாதன்.
பின் சென்ற சிவா "அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா...." அவ்வளவு நேரம் அடக்கிவைத்த அழுகை உடைந்து ஊற்றியது.
"போடா போ உன் மாமன் சொத்த கேட்டு கேஸ் போட்டிருக்கான் இன்னிக்கு. சொந்தத்தால பணக்கஷ்டம் புள்ளையான மனக்கஷ்டம் அவ்ளோ
தான் டா."
"என்னப்பா சொல்ற?"
முன்பு ஒரு நாள் போதையில் சொத்தை சிவா மாமன் எழுதி வாங்கியதை சொல்லி முடித்து அப்படியே தூங்கிப்போனார் ராமநாதன்.
வாழ்க்கை நடுவில் சிக்கிக்கொள்ள தன் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிப்போக வேண்டுமென்றால் கூட தன் தந்தையிடம் கையேந்தும்
நிலையில் சிவா. விரக்தியான முகத்தோடு இல்லையென சொல்லாத ராமநாதன். மாதம் உருண்டோட வழக்கில் தோற்று வீடு திரும்பிய ராமநாதன்
தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. சொந்தம் ஏமாற்ற வேறொரு ஊரில் கையில் பத்து ரூபாய் பணத்தோடு வீதியில் காதல் நின்று
கொண்டிருக்கின்றது.
"பசிக்குது டா...."
"ம். வா போலாம். கையேந்திபவன் இருக்கு சாப்பிடலாம்."
"பாட்டி, இட்லி எவ்ளோ பாட்டி?"
"ரெண்டு 5 ரூபா பா."
"நாலு குடு பாட்டி."
பசியில் அந்த இட்லியை அவசரமாக வாங்கினாள் மஞ்சுளா.
"மஞ்சு கொஞ்சம் திரும்பிக்கோயேன்."
"ஏன்?"
"இல்லை ரொம்ப பசி நான் சாப்பிடுறத பாத்தா நல்லா இருக்காது."
ஏதும் யோசிக்க பசி அனுமதிக்காமல் திரும்பிக்கொண்டாள். சிவா இலையில் இருந்த இட்லியை மீண்டும் பாட்டியின் தட்டில் போட்டான்.
திரும்பிய மஞ்சு, "என்னதான் பசியா இருந்தாலும் இப்படியா சாப்பிடுவ?" அப்பாவியாக கேட்டாள்.
"இன்னும் 2 வாங்கிக்கோ" சொல்லிக்கொண்டே தான் திருப்பி வைத்த இட்லிகளை அவளுக்கு வைத்து தண்ணீர் குடித்தான்.
"ஏய் காசு?"
"ம் இருக்கு 15 ரூபா வெச்சிருந்தேன் நீ சாப்பிடு."
இது பார்த்த பாட்டி விவரம் கேட்க எல்லா கதையும் சொன்னார்கள்.
"என் புள்ள வருவான் நான் உனக்கு ஏதாவது வேலை வாங்கி தர சொல்றேன்யா." அவள் சொன்ன பிறகு தான் இருவருக்கும் உயிர் வந்தது.
"என்ன தெரியும் தம்பி உனக்கு?" நல்ல ஆஜானுபாகுவான பாட்டியின் மகன் ஜோசப் கேட்டான்.
"அண்ணா ஒன்னும் தெரியாதுண்ணா ஆனா என்ன சொன்னாலும் செய்யறேண்ணா."
"கார் ஓட்டுவியா?"
"ம் சுமாரா ஓட்டுவேண்ணா."
"சரி நாளைக்கு காலைல இதைப்பத்தி பேசலாம் போய் தூங்கு."
நடுக்கடலில் தத்தளித்த கைகளுக்கு ஏதோ கட்டை சிக்கியது போல உணர்ந்தார்கள். நல்ல தூக்கம் வெகுநாட்கள் கழித்து.
"தல நான் சொல்லலை தம்பிக்கு தான் வேலை. காரு ஓட்டுவாப்புள" தன் தலைவனிடம் சிவாவைச் சேர்த்து விட்டு தன் வேலை முடிந்ததாக
நினைத்து ஜோசப் கிளம்பினான்.
"அவர் கூட போய் என்ன ஏதுன்னு பாத்து தெரிஞ்சிக்கோ போ". ஆதி அந்த ஊர் கட்டப்பஞ்சாயத்து தாதா.
அன்றிலிருந்து அழகான வாழ்க்கை ஆரம்பம். ஆனால் ஏனோ மஞ்சுவுக்கு அதில் நாட்டம் இல்லை எப்பவுமே ஏதோ இழந்தது போல தோன்றியது
அவளுக்கு. மூன்றாவது ஜீவன் அடியெடுத்து வைத்தது அவர்கள் வாழ்வில்.
"டேய் சிவா இவனை நல்லா வளத்து காட்டணும் டா."
"கண்டிப்பா ஆனா ஏன் எப்பவுமே சோகமாவே இருக்க?"
"ஒன்னும் இல்லை சொன்னா கோச்சிக்க மாட்டியே!"
"சொல்லு. உன்னை எப்போ நான் கோச்சிக்கிட்டு இருக்கேன்?"
"பக்கத்து வீட்டு பொம்பளை கூட என்னை அடியாள் பொண்டாட்டியா தான் பாக்குறா. பேச கூட மாட்டேங்குறா. இந்த வேலை வேண்டாம் டா."
"ரோட்டுல நிக்கும் போது அவன் தான் சோறு போட்டான்." ஊருக்கே கேட்கும் படி கத்தி விட்டு வெளியேறினான்.
அன்று நடந்த சண்டையில் கால் வெட்டப்பட்டு பாதி உயிரோடு தான் திரும்ப வந்தான் சிவா. அழுகைக்கு பஞ்சமில்லை. தன் நிலையை நினைத்து
இருவரும் அழுதனர் இன்னொருவருக்கு தெரியாமல். மஞ்சுளா பாரத்தை சுமக்க முடிவெடுத்து வெளியேறினாள்.
"சிவா எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு டா இனிமே கஷ்டம் இல்லை நீ கவலைப்படாதே" ஆறுதல் கூறி அவனை அன்றிலிருந்து
தூங்க வைத்தாள்.
"என்ன சிவா எப்டி இருக்க?" ஜோசப் மாதங்கள் கழித்து நலம் விசாரிக்க வந்தான்.
"இப்போ தான் நியாபகம் வந்துச்சா? என் பொண்டாடி அப்பவே சொன்னா இதெல்லாம் வேணாம்னு. நான் தான் உங்களுக்கு சிபாரிசா பேசுனேன்.
எனக்கு இதெல்லாம் தேவை தான்."
"அது வந்து சிவா......"
"என்ன இன்னும் ஏதாவது வேலையாகணுமா? என்னால ஒன்னும் முடியாதுப்பா என்னை பாத்துக்கவே ஒரு ஆள் வேணும். நீங்க கிளம்புங்க."
"இல்லை சிவா நம்ம மஞ்சு..."
இரவு வீடு திரும்பிய மஞ்சுளா குழந்தை அழ அவசரமாக உள்ளே ஓடி வந்தாள்.
"என்ன ஆச்சு குழந்தை அழுவுது நீ சும்மா தூங்கிட்டு இருக்க."
"ம் அதுவாவது தன் சோகத்தை அழுது காட்டுது."
"என்ன ஆச்சு உனக்கு?"
"எப்படி இருக்கு வேலை பரவாயில்லையா?"
"ம் ஏதோ போது."
"எத்தனை பேரு இன்னிக்கு?"
"என்ன கேட்ட?"
"அதான் பாக்குறியே ஒரு வேலை அதுல தான் எத்தனை பேரு வந்தாங்கன்னு கேட்டேன்."
சிவாவின் முகம் பார்க்க முடியாமல் மஞ்சுளா கட்டிலில் திரும்பி அழ ஆரம்பித்தாள்.
"ஏன் உனக்கு வேற ஏதும் தோணலையா? இப்படித்தான் போகணுமா?"
"ஆமாம் நான் என்ன என் சந்தோஷத்துக்கா போனேன்? அடியாள் பொண்டாட்டின்னு வீட்டு வேலைக்கு கூட சேத்துக்கலை. கம்பனியில கூட இதே
தொல்லை தான் டா. ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் நம்ம குழந்தை நான் என்ன செய்வேன் டா. இது தப்பா தெரியலாம் ஆனா யோசிச்சு
பாத்தா எனக்கு இது தப்பா தெரியலை. இந்த ஊருக்கு வந்தப்ப நீ சாப்பிடாம குடுத்த இட்லி மாதிரி தான் டா இதுவும். டேய் சிவா இது வெறும்
உடம்பு டா. மத்தவன் கூட போனா நான் கெட்டவள் ஆக மாட்டேன் அவனுக்கு அரை மணி நேரம் நான் தேவை அவ்ளோ தான் ஆனா அதுக்கு
மேல நான் அவனுக்கு ஒன்னும் பண்ணமாட்டேன். அதுவே உனக்கு ஒன்னுன்னா யோசிக்காம கூட உயிர குடுப்பேன் டா அதான் காதல். நான்
உன்னை காதலிக்குறேன் டா." கட்டிப்பிடித்து அழுதாள் மஞ்சுளா.
(முற்றும்)
{பாட்டம் லைன்:
==========
குழந்தைகாக பட்டினியாய் படுத்து, புருஷனுக்காக இன்னொருத்தனோடு கட்டிலில் படுக்கும் இவளும் பத்தினி தான். இதுவும் காதல் தான்.
காதல் இல்லை உண்மையான காதல்.
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதானது...... }
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
(நண்பர்களே! இது என்னுடைய முடிவு தான் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.)
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:37 11 கால்தடங்கள்
புதன், செப்டம்பர் 5, 2007
காதல் காலம் நிறைவுப்பகுதி
நண்பர்களே! புதிய இணையதளம் ஒன்று துவங்க உள்ளதால் இந்த வலைப்பூவில் ஆரம்பித்த இந்த தொடர்கதையை இதிலேயே முடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.
காதல் காலம் -1
தேவதை வாக்கு பலிக்குமா? நீ சொன்னது போலே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அப்படி சொல்வதை விட நான் சேர்ந்த கல்லூரியில் நீயும் அதிக மதிப்பெண் எடுத்தாலும் வந்து சேர்ந்தாய். நம் ஊருக்கு அருகிருப்பதால் உன் அப்பா சம்மதிக்க. நம் காதலை கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு சென்றோம் இருவரும். கல்லூரிக்கு ரயில் பயணம். அவசரத்தில் ஓடி வரும் உனக்காக நான் காத்திருந்தாலும் ரயில் காத்திருக்காத அந்நாட்களில் பேருந்தில் சேர்ந்து பயணித்தோம். பயணத்தில் பின்நோக்கி ஓடும் மரங்கள், உன்னை நோக்கி ஓடும் மனம். தினம் சன்னலோர இருக்கைக்காக சண்டை போடுவாய். ஊடலில்லாமல் காதலா? உன்னோடு சண்டையிட்டு வேண்டுமென்றே தோற்று உன் அருகில் அமர்வேன். வென்ற பரவசத்தில் உன் கண்களில் சின்ன மின்னல்கள் மின்னி மறையும். எனக்கு ரயிலோடு பயணங்கள் இல்லை அந்த நாட்கள், ஒரு மயிலோடு பயணம்.
தினம் உன்னோடு வரும் போது தேரை வடம் பிடித்திழுக்கும் பக்தன் போல பெருமிதம். வகுப்புகளில் மனம் முழுக்க உன் நினைவுகள், ஏடுகள் முழுக்க உன்னை பற்றிய கிறுக்கல்கள். காற்றில் படபடக்கும் புத்தகதாள்களாக கடைசி மணி அடிக்க ஏங்கிக்கிடக்கும் மனம். உன் கோவம், அழகு, சிரிப்பு இவைகளில் தொலைந்து போனதடி அந்த நாட்கள். பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவனாக உன்னை விட்டு அகலாத கண்களோடு சுற்றி வந்தவனாக நான். விளையாட்டாய் ஓடின 4 வருடங்கள் கல்லூரியில். வேலைக்கிடைக்காமல் நான் மனமுடைந்த வேளை. உன் வீட்டில் உனக்காக வரன் தேட, இருவரும் காதலை வீட்டில் சொன்னோம். அடுத்த நாள் வாடிய முகத்தோடு வந்து,
"அப்பா ஒத்துக்க மட்டேங்குறார். நாங்க வேற ஊருக்கு போறோம்." என்று சொல்லிச் சென்றவளை இப்போது தான் பார்க்கிறேன். அன்று பேசமுடியாமல் வாயடைத்து போனவன் தான் இன்று வரை பேச வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்.
"சிவா! டேய் சிவா!" அம்மா கதவு தட்டும் சத்தம். கண்களை துடைத்துக் கொண்டே ஏதும் நடக்காதவன் போல கதவு திறந்தேன்.
"என்ன? இன்னும் 6 மணி கூட ஆகலை அதுக்குள்ள ஏன் எழுப்பின?"
"சிவா! இப்போ தான் டா மஞ்சுளா அம்மா கிட்ட இருந்து போன் வந்தது."
"என்ன?" அதிர்ச்சியில் உரைந்தேன்.
"சீக்கிரம் கிளம்புடா."
"என்னம்மா சொல்ற? ஒன்னும் புரியலை."
ஐ.சி.யூ வெளியே உன் பெற்றோர். உன் அப்பா எங்கள் வரவைப்பார்த்து முகம் திருப்பிக் கொண்டு வெளியேற உள் நுழைந்தேன்.
"அவளுக்கு செவ்வாய் தோஷம் அதான் கல்யாணம் பண்ணி வைக்க முடியாமப்போச்சு. அதை அவளும் புரிஞ்சிக்கிட்ட உடனே தான் நாங்க ஊரை விட்டு கிளம்பினோம். அவ வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. நேத்து உங்க பையனை பேங்கில பாத்ததா சொன்னாள். அவள் அண்ணன் குழந்தையோட வந்ததை சிவா தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பார்னு ராத்திரியெல்லாம் புலம்பினாள். காலையில எழுப்பப்போனா இப்படி மாத்திரை சாப்பிட்டுட்டு நினைவில்லாம கிடக்குறா." என் அம்மாவிடம் அழுதபடியே உன் அம்மா.
"மஞ்சு..." குரல் தழுதழுக்க கூப்பிட்டேன்.
மெல்ல கண்களைத் திறந்தவள். ஒரு கண்ணீர்த் துளியை பதிலாகத் தந்தாய். மெளனம் மட்டுமே பேசத்தொடங்கியது. எதையோ தேடிய உன் கண்கள் மெதுவாக மூட.
"மஞ்சு... மஞ்சு..." மெல்ல என் குரல் தேய்ந்தது. காதலுக்கு புரியும் அந்த மொழி காலனுக்கு புரியுமா? வெகு நேரம் சத்தம் கேட்காமல் உள்ளே வரும் எல்லோரும் நம் பிணங்களைத் தான் பார்ப்பார்கள்.
"உன்
இமைப்புகளின் எதிரொலியே
என்
இதயத்துடிப்புகள்."
தொலைவில் எங்கோ கேட்கிறது ஒரு பாடல்
"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே........"
(பாடல் கேட்க)
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
உங்கள் கருத்துக்களை இந்த பதிவுக்கு கண்டிப்பாக விட்டுச்செல்லுங்கள். அவை என் அடுத்த கதைக்கு உதவும்.
நன்றி!!
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:31 6 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
திங்கள், செப்டம்பர் 3, 2007
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2007
வியாழன், ஆகஸ்ட் 23, 2007
ஸ்ரீயாகிய நான் 3 சோடி போட்டுக்குவோமா சோடி
ஸ்ரீயாகிய நான் 1
ஸ்ரீயாகிய நான் 2
எப்படியோ ஒரு வழியா +2 பரிச்சை முடிச்சிட்டேன். அப்புறம் என்டரன்ஸ்னு ஒன்னு எழுதனும்னு சொன்னாங்க. நமக்கு தான் பரிச்சை பயமே இல்லையே (ரிசல்ட் பயம் மட்டும் தான்) சரி கழுதை எழுதிட்டா போச்சுனு ரெடியானேன். என் அம்மாவுக்கு பையன் மெட்ராஸ்ல 'எக்ஸல்'ல படிச்சா பெரிய ஆளா வருவானு தோனிடுச்சு, அடுத்த வாரமே எக்ஸல் விஜயம். சும்மா சொல்ல கூடாதுங்க பெத்தவங்க எது பண்ணாலும் சரியா தான் இருக்கும். அட அட அட என்னா ஃபிகருங்க? போய் இறங்குனதுல இருந்து சைட் அடிக்க ஆரம்பிச்சது தான். நானா எதோ படிச்சிருந்தா கூட நல்ல மார்க் வாங்கி இருந்திருப்பேன் அங்க போனதனால ஊரை தான் சுத்தினேன. அப்புறம் கொஞ்சம் பயம் வந்து கோச்சிங் முடியிரத்துக்கு முன்னாடியே பஸ் ஏறிட்டேன். ஏதோ படிச்சு ஒரு காலேஜ்ல சீட்ட போட்டுட்டேன். தெய்வம்னு ஒன்னு இருக்குங்க அங்க போனாலுமா என்ன மாதிரியே ஆளுங்க இருப்பானுங்க?
ஒரு குருப்பா சேந்தோம் நான், குவா (குழந்தை மாதிரி), குடிகாரன் (நானும் தான் ஆனா அவனை செல்லமா அப்டி தான் சொல்லுவோம்), காட்டான் (கொஞ்சம் கோவக்காரன்), கரடி குட்டி (அவன் மூஞ்சி தவிர எல்லா இடத்துலயும் முடிங்க அதான், இன்னொருத்தன் இருக்கான் 'கரடி மாமா'னு அவனுக்கு கண்ணை தவிர எல்லா இடத்துலயும் முடி. சோ கன்பீஸ் ஆயிடாதீங்க). இன்னும் நிறைய பேர் இருக்கானுங்க லிஸ்டுல ஆனா நாங்க தான் முதல்ல ஒன்னு கூடுனோம். 5 பேரும் சேந்து என்ன அணுகுண்டா கண்டுபிக்க போறோம்? குட்டி செவுரா தான் ஆனோம். அதுலயும் ஒரு அழகு எங்களோட வார்டன், மனுசன் 8 மணிக்கு தான் எழுந்திருப்பாரு. முதல் நாள் காலேஜ் முடிஞ்சி எல்லாம் ஆஜர் ஆனோம். நான் சுவத்த பாத்து உக்காந்துகிட்டு கதை பேச ஆரம்பிச்சேன். ஒரு உணர்ச்சிவசத்துல "டேய் அவன் வார்டனாடா? 8.30 மணிக்கு என் கூட தான் வந்து பல் துளக்குறான். அவனுக்கு கீழ படிக்கிறவன் எவனாவது உருப்புடுவானா?"னு ஒரு ஸ்மால் கொஸ்டீன் தான் பண்ணேன் பின்னாடி வார்டன் நிக்கிறது தெரியாம. அது என்ன ரகசியமோ எப்பவுமே நான் மட்டும் தான் மாட்டுவேன். அவர் கூப்பிட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார் அதுல இருந்து ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் காலீல சியர்ஸ் சொல்லி தான் பல்லு துளக்குவோம். சேந்த முதல் நாளே டெளசர் (ஷார்ஸ்) போட கூடாது லுங்கி தான் கட்டணும்னு சொல்லிட்டானுங்க. எனக்கு அது பழக்கம் இல்லை சரி ரூம்ல இருக்கும் போது டெளசர்ல இருக்கலாம்னு நானும் மாட்டுனேன். கரண்ட்டு கட்டாயிடுச்சு வெளியில பாராபட் சுவத்துல உக்காந்திருந்தேன். இருட்டுல அக்கவுன்டன்ட் வந்ததை கவனிக்கலை. சுவத்துல அதுவும் டெளசர் போட்டுகிட்டு உக்காந்துகினு இருக்கியா உனக்கு எவ்ளோ எஸ்.கே டானு சொல்லி உக்காந்த இடத்துலயே அடிச்சாங்க (சுவத்துல இல்லைங்க சு... மறுபடியும் சென்சார் ப்ராப்ளம்). இப்படி தான் முதல் நாள் காலேஜுல போச்சு.
அந்த வார்டன் கிளம்பி போக வந்து சேந்தார் நம்ம புது வார்டன் - ஹீரோ "அல்லக்கை". அவன் சரியான் குடாக்குங்க. இஞ்சி தின்ன குரங்குனு கேள்வி பட்டிருப்பீங்க ஆனா அவன் இஞ்சி தின்ன குரங்குக்கு பேதி ஆனா மாதிரி இருப்பான். என்னாடா இவன் மரியாதை இல்லாம பேசுறானேனு தப்பா பீல் பண்ணாதீங்க அவன் ஒரு சில்லரை பையன்ங்க எங்க கிட்டயே புடிங்கி தின்னுவான். சரியான கிறுக்கன் எவ்ளோ ஓட்டுனாலும் தாங்குவான் ரொம்ப நல்லவன். ஒரு வருஷம் முழுக்க ஓட்டுனோம். அதுல சில மறக்க முடியாத ஓட்டல்கள் இங்கே:
1. பசங்க ஒரு தடவை அவன் ரூம்ல கதவு வழியா கொஞ்சம் தண்ணி ஊத்திட்டானுங்க. அப்புறம் கதவு தட்டினாங்க அவன் அந்த தண்ணியில வந்து நின்னான். "டேய் என்னடா ஈரமா இருக்கு தண்ணியா?"னு கேட்க. எல்லாம் சேந்து "அய்யய்யோ சார் தண்ணி இல்லை எவனோ "உஸ்கா" (அதாங்க ;) சென்சாருக்காக வேற ஸ்பெல்லிங்) போயிட்டான்"னு சொல்லிடானுங்க. பாவம் மூஞ்சிய பாக்கணுமே நொண்டி அடிச்சிகிட்டே ஓடுனான் பாத்ரூமுக்கு.
2. ஒரு தடவை உள்ள வைச்சு பூட்டிட்டானுங்க (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா). இந்த மேனேஜ்மன்டுனு இருப்பானுங்க இல்ல அதுங்க எல்லாம் சேந்து பூட்டு போடுறா மாதிரி இருந்தா தானடா உள்ள வைச்சு பூட்டுறீங்கனு சொல்லி அதை கதவோட இருக்க லாக்கா மாத்திட்டானுங்க (அடடா இன்னாமா யோசனை பாத்தீங்களா மூளைய ரொம்ப சொறிஞ்சானுங்க போல). நாங்க தான் இன்சினியர் ஆச்சே ரொம்ப யோசிக்கலை அழகா அவன் உள்ள இருக்கும் போது அந்த சாவி ஓட்டையில பபுள் கம் வெச்சி அடைச்சுட்டானுங்க. அப்புறம் எப்டி வந்தானு தெரியல பாவம்.
3. அவன் ரூம் கதவுல போய் பெருசா "அல்லக்கை" அப்டினு எழுதிட்டானுங்க. அவன் என் கிட்ட வந்து "டேய் அல்லக்கைனா என்னடா"னு கேட்க நான் எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா எக்ஸ்ப்லெயின் பண்ணேன். கொஞ்சம் சோகமா ஆயிட்டாரு. "என் கதவுல யாரோ அப்டி எழுதிட்டானுங்க"னு சொல்லி பீல் பண்ணாரு. நான் "நீங்க என்ன சார் பண்ணீங்க"னு கேட்டேன். சிம்பிளா "அழிச்சிட்டேன்"னு மனுஷன் பதில் சொல்லிட்டாரு. "அதை எப்டி அழிச்சீங்க? அது பால் பாயிண்ட் பேனாவாச்சே!"னு சொல்லி தொலைக்க. "டேய் நீ தானா?"னு என் மேல பாய ஆரம்பிச்சுட்டார். கேணை வழக்கம் போல பொய் சொன்னதை நம்பிட்டான்.
இன்னும் நிறைய இருக்குங்க அவனை பத்தி ஆனா ரொம்ப மொக்கை போட்டுட்டேன்னு நினைக்குறேன் இப்போதைக்கு அப்பீட் ஆயிக்கிறேன். பசங்க கூட கொஞ்சம் டிஸ்கிஸ் பண்ணிட்டு அப்புறம் சொல்றேன் ஏன்னா எனக்கு ஞாபகம் இருக்குற மேட்டர் எல்லாம் சென்சார் விஷயங்கள் சோ அப்பாலீக்கா நல்ல மேட்டர்ஸ் சொல்றேன்.
ஸ்ரீயாகிய நான் 4
ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:35 3 கால்தடங்கள்
வகை: அசைபோடுகிறேன்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2007
குழல்
மக்களே!
புல்லாங்குழல் அடிப்படையா கவிதை எழுதலாம்னு பேனா எடுத்தேன். ஆனால் வழக்கம் போல அது காதலையே வாந்தியெடுத்து வைக்க.சரி எழுதியாச்சு உங்களை கஷ்டப்படுத்தாமல் விடுவேனா? அவை கீழே:
(பெரிதாக பார்க்க, படங்களை கொஞ்சம் கிள்ளவும்).
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:29 2 கால்தடங்கள்
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007
வருவாயா
உன்னை காதலிக்க
இந்த ஆயுள்
எவ்வளவு குறைவு?
நீ அருகிருந்தால்
சாகாவரம் போதாதே!
உன் கண்களில்
நீந்தி விளையாட,
கைகளில் ஏந்தி
உறவாட ஆசையடி!
காதலில் இருவரும்
கரைந்து போக
வருவாயா?
குழந்தை சிரிப்பில்
உறைந்து போக,
கூந்தலில் கொஞ்சம்
தொலைந்து போக வேண்டுமடி!
எல்லா நொடியும்
கடைசிநாளாய் வாழ்வோம்
வருவாயா?
உன்னை காதலிக்க
இந்த ஆயுள்
எவ்வளவு குறைவு?
காதல் தீரும் வரை
காதலிக்க வேண்டும்
வருவாயா?
காதல் தீருமா????
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 1:39 PM 0 கால்தடங்கள்
வியாழன், ஆகஸ்ட் 16, 2007
திருப்பிக் கொடுக்க முடியுமா
உன்னில் காதல் படித்தேன்,
சிணுங்கலுக்கு வரியமைத்தேன்,
மெளனத்துக்கும் தலையசைத்தேன்.
கண் வழிபுகுந்து கனவுகளுக்கு
உயிர் கொடுத்தேன்,
கூந்தலுக்கு கல்லையும்
பூக்க வைத்தேன்.
இப்போதோ நீ இல்லை,
நானும் தான் இல்லை.
எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?
நனையவா குடை பிடித்தேன்?
உடைக்கவா சிலை வடித்தேன்?
மறக்கவா காதலித்தேன்?
எனக்கு நீ வேண்டாமடி
நான் தான் வேண்டும்
திருப்பிக் கொடுக்க முடியுமா?
என்னை...
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:19 PM 0 கால்தடங்கள்
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2007
சுதந்திரம்
ஏன் கொண்டாடுகிறாய்?
இனாமாய் கிடைத்த
விடுமுறைக்கா சந்தோஷப்படுகிறாய்?
சுதந்திரமா?
எங்கே காட்டு பார்ப்போம்.
சுவாசிக்கவே இன்னொருவனை
வேலைக்கு வைக்கும்
முதலாளி வர்கம்,
இலவசமாக சவக்குழி
கிடைத்தால் சாகும்
ஏழை ஒரு பக்கம்,
கணினி விலை
குறைந்ததற்கு சந்தோஷப்படும்
நடுத்தர வர்கம்.
"டேய்! கணிணி கூழா சாப்பிடப்போகிறாய்?"
"அரச"மரத்தில் மட்டுமே கூடு கட்ட
ஆசைப்படும் சில பறவைகள்,
ஐ.டி . பூங்காவில்
பல செக்கு மாடுகள்,
எட்டு மணி நேரக்கூண்டுக்குள்
குளிர்காயும் இளைஞர்கள்,
வேலை இல்லையென அதிகார்ப்பூர்வமாக
அறிவிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம்.
ஒளிர்கிறது இந்தியா!!!!!!
வக்கணையான பேச்சு
"இரவில் வாங்கினோம் விடியவில்லை"
இரவில் தானே வாங்கினோம்?
இரவல் வாங்கவில்லையே!
இன்னும் ஏன் அந்நியனுக்கு சலாம்?
அறுபதாண்டு சுதந்திரமே
பணி ஓய்வு பெற்று ஓடு!
மீண்டும் பிறக்கட்டும்
ஒரு சுதந்திரம்...
சா'தீ'யை விழுங்கும் ஃபினிக்ஸ்ஸாய்,
வீட்டை தன் முதுகில் சுமக்கும்
நத்தையாய் உருமாறு
அழகாய் மாறும் இந்தியா!
பொறுத்திருங்கள்
சமத்துவம் பிறக்கும்
அன்று பிறந்த குழந்தையிடம்
கொடுத்து கிழித்தெறியுங்கள்
இந்தக் கிறுக்கலை.
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 2:12 PM 0 கால்தடங்கள்
வகை: கவிதை
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2007
நீ
நீ
எச்சில் படுத்திய தேநீர்
தேன் நீர்!
இருபுறமும் இதயமெனக்கு
புகைப்படத்தில் மட்டும்
என் வலப்பக்கம்
நீ!
நீயில்லாமல்
ஊமையாய் போனது
நான் மட்டுமல்ல
என் முந்தக்கூவியும் தான்.
நீ
முத்தமிட்ட பின் தான்
என்
சுவை மொட்டுக்கள்
மலர்ந்தன.
தொடக்கத்திலும்
முடிவிலும்
பக்கங்கள் கிழிந்து போன
பிரம்மன் எழுதிய
பிரசித்தி பெற்ற
மர்ம நாவல்
நீ!
காதல் அழிவதில்லை...
ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:35 PM 2 கால்தடங்கள்
புதன், ஆகஸ்ட் 8, 2007
ஸ்ரீயாகிய நான் 2 ணா அது நான் இல்லீங் ணா
ஸ்ரீயாகிய நான் 1
ம்... இப்போ ஒரு நிலைமைக்கு வந்தாச்சுங்க ஸ்கூல்ல. ஏன்னா வயசுக்கு வந்தவங்க கம்மி அப்போ (அர்த்தம் புரியாதவங்க முதல் பாகம் படிக்கவும்). அடுத்த கட்ட முயற்சியா அழகா முடிவெட்டினேன் 'நம்மவர்' கரண் மாதிரி. எல்லா ஜூனியர் பசங்களும் ஆர்வமா பாப்பானுங்க. எத்தனையோ பேருக்கு நான் ரோல் மாடலா இருந்திருக்கேன். அதனால பீ.இ.டீ வாத்திக்கு என் மேல கொஞ்சம் கான்டு. ஒரு மேச்சு சரியா விளையாடலைனு கத்துனான் நான் "போடா ஹேர்"னு பேட்ட தூக்கி போட்டுட்டு போயிட்டேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா பின்னாடி ஒரு பெரிய ஆப்பு வெச்சுட்டான் அவன்.
எப்பவுமே தீபாவளிக்கு எங்க ஸ்கூல்ல வெடி வெச்சே ஆகணும் அது தான் ரூல் (எல்லா ஸ்கூல்லையும் பண்ணுவாங்கனு நினைக்குறேன்). பூனைக்கு யாரு மணி கட்டுறதுனு கேள்வி. நெஞ்ச நிமித்திகிட்டு சரி நான் பண்றேன் மாப்ளைங்களானு சொல்லிட்டேன். அதுல ஒரு டெக்னிக்குங்க சரவெடி வாங்கிட்டு வந்து திரிய நல்லா கிள்ளி அத ஒரு ஊதுவத்தி நடுவுல கட்டணும் அப்புறம் வத்திய பத்த வெச்சிட்டு அப்பீட்டு ஆயிடணும் (தூ... இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்கானு கேக்காதீங்க, நான் அயின்ஸ்டீன் இல்ல இவ்ளே தான் யோசிக்க முடியும் நம்மலால). இதுக்கு பேரு தான் டைம் பாம் (டைம் சரம்னு கூட சொல்லலாம்). நான் கொஞ்சம் பயபுள்ளங்களோட சேர்ந்து அடுத்த ஆப்பரேசனுக்கு ரெடி ஆனேன். பக்காவா பிளான் போட்டு வெச்சோம். ஆனா எந்த முந்திரிக்கொட்டையோ எனக்கு முன்னாடி அத செய்வானு நினைக்கலை.
தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி. சாமியெல்லாம் கும்பிட்டுட்டு சந்தனம் வெச்சிகிட்டு கிளம்பினேன். என் அம்மா என்னடா புள்ள சாமியெல்லாம் கும்புடாதேனு அப்பவே கேட்டாங்க என்ன தப்பு பண்ண போறியானு. அப்பவாவது நான் உசாரா ஆயிருக்கலாம் ஆனா 'விதி..... வலியது'. காலீல லொகேசன் பாக்க போனேன் (பாத்ரூம் தான் வேற எங்க கொண்டி வெக்க). அங்க நான் "ரெக்வயர்மென்டு கேதரிங்" பண்ணிகிட்டு இருந்தப்ப உச்சா போக ஒரு ஆறாங்கிளாஸ் பையன் வந்தான். "டேய் அண்ணன் கொஞ்சம் வேளையா இருக்கேன் இடத்த காலி பண்ணு"னு சொல்லி தொறத்தி உட்டுட்டேன். பாவம் அந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிருக்கும்? சே இப்போ நினைச்சா கூட கண்ணு கலங்குது (பீலிங்ஸ்). நான் சும்மா இடம் பாக்க தான் போனேன் நாளைக்கு வந்து வெக்கலாம்னு. ப்ரேயர் நடந்தப்ப பாத்தா என்னோட லொகேசன்ல எவனோ சூட்டிங் பண்ணிட்டான். மானாவாரியா சத்தம். சரம் சூப்பரா வெடிக்குது. ஆனால் பையன் கொஞ்சம் லூசு போல தொட்டி பக்கத்துல கொண்டு போயா வெப்பான் அது எகிறி தொட்டி உள்ள உழுந்திடுச்சு. பாதி தான் வெடிச்சுது ஆனா சோக்கா வெடிச்சுது.
ஒரே எமர்ஜென்சி தான் போங்க. பீ.இ.டீ என்னமோ பெரிய காரியம் நடந்தா மாதிரி ஓடுறான் பாத்ரூமுக்கு. சி.ஐ.டி அந்த மீதி பாதிய போலீஸ் நாய் மாதிரி கவ்விகிட்டு வந்தான். நம்ம பசங்க சும்மாவா இருப்பானுங்க கிளாசுக்கு வந்த உடனே மாம்ஸ் சூப்பர் டானு கை குடுக்குறானுங்க. நான் வெக்கலைனு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க. சரி யாரு வெச்சா என்ன? நமக்கு வேளை மிச்சம்னு போய் சந்தோசமா உக்காந்துகிட்டேன். ஜுவாலஜி லேபுக்கு ஒன்னும் எழுதாம வந்துட்டேன் அன்னிக்கு. அந்த மேடம் கொஞ்சம் சிடு மூஞ்சு 11thல இருந்தே என்னை பிடிக்காது அதுக்கு. சரி ஏன் திட்டு வாங்கணும்னு உக்காந்து கிளாஸ் நடக்கும் போது கீழ நோட்டை வெச்சி கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்போ நம்ம பீ.இ.டி பரேடுனு கிளாஸ் ரூமுக்கு வந்தான். கூட பாத்தா நம்ம செல்லம், காலைல நான் தொறத்தி விட்ட செல்லம் தான். பாவம் அவன் அந்த நேரம் வரைக்கும் உச்சா போகலைன்னு நினைக்கிறேன் (மூஞ்சிய பாத்தா அப்டி தான் இருந்தது). நான் அப்போவாவது நிமிந்து பாத்திருக்கலாம் ரொம்ப சின்சியரா எழுதிகிட்டு இருந்தேன் (அது தேவை இல்லை அன்னிக்குனு தெரியாம தான் எழுதுனேன் ஏன்னா நான் லேபுக்கு போகலை). பீ.இ.டீ நான் குனிந்து இருக்கறத பாத்து செல்லத்துக்கிட்ட "இவனா? இவனா?"னு கேட்டான். செல்லமும் இவனே தான்னு கரெக்டா தப்பா சொல்லிட்டான்.
அப்புறம் என்ன? தூக்குங்கடா இவனனு ஒரு ஆடரு நம்ம பீ.இ.டீ கிட்ட இருந்து. நேரா பிரின்ஸி ரூம்ல டைட்டில்ல சொன்னா மாதிரி சொல்லிகிட்டு நான் சிட்டிங் (உண்மைய சொல்லனும்னா நீலிங்). அந்த பிரின்ஸி கூட வேற ஒரு விசயத்துல டிஸ்யூம். ஒரு நாள் திங்கக்கிழமை ஓத் (உறுதி மொழி) எடுக்கும் போது பின்னாடி இருக்க பையன் கிட்ட "டேய் நம்ம பிரின்ஸி பாக்க சி.ஐ.டி சகுந்தலா மாதிரி இருக்கா இல்ல"னு சொல்லிட்டேன். அத பாத்துட்டாங்க. அவ்ளோ கும்பல்லவும் கரெக்டா தெரிந்ததுல இருந்தே தெரியலையா நான் கொஞ்சம் கிளாமர்னு :). அதனால அவங்க வந்து என்னமோ சொத்தே போனா மாதிரி கத்துனாங்க. நான் சொன்னத கூட இருந்தவனுங்களே நம்பலை அது நம்புமா?. மானஸ்தன் நான் நேரா போய் அப்பாவோட வந்துட்டேன். அவங்க இந்த பையன போலீஸ்ல புடிச்சு குடுக்கணும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எப்டியோ நான் புரூவ் பண்ணி கலங்கத்தை தொடச்சிக்கிட்டேன்னு வைங்க. ஆனா இன்னி வரைக்கும் எவன் வெச்சதுன்னே சொல்ல மாட்டேங்குறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது?
"வெடி வைங்க ஆனா எவன் கிட்டையும் சொல்லாம வையுங்க"
ஸ்ரீயாகிய நான் 3
ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:49 10 கால்தடங்கள்
வகை: அசைபோடுகிறேன்
செவ்வாய், ஆகஸ்ட் 7, 2007
காதல் காலம் 10
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.நேரமில்லாதவர்கள் இதை மட்டும் கூட தனியாகப் படிக்கலாம்.
நிறைமாத கர்பிணியாய் மேகக்கூட்டம். உன்னைக் காண வெளியே கால் எடுத்து வைப்பதற்குள் பிரசவித்து விட்டது. சக்கரைவாகப் பறவையைத் தவிர மற்றவை எல்லாம் மனமுடைந்து கிளைகளில். சக்கரைவாகமாகவே பிறந்திருக்கலாம் மழைக்காலத்திலும் கூட காதலித்திருக்கலாமே என எண்ணத்தில் ஜன்னலோரம் மழையை ரசிக்கிறேன். மழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது காற்று. என்னை வந்து சேரும் முன் உன்னைத் தொட்டு விட்டதா அது? இவ்வளவு குளிர்கின்றதே இன்று. அருகில் நீயில்லாமல் சாரல்கள் கூட ஊசியாய் என்னைக் குத்தின. மின்சாரக்கம்பிகளில் சிட்டுக்குருவிகளுக்கு பதிலாக மழைத்துளிகள் தொங்கிக் கொண்டிருந்தன ஆனால் அடுத்து வந்த துளி முன்னால் இருந்ததை தள்ளி விட்டு இடம் பிடித்துக் கொண்டது. ம்... இந்த இயற்கையும் கூட மனிதர்களைப் பார்த்து மாறி விட்டதோ?
கொட்டும் மழைத்துளிகள் பிடித்து வானுக்கு ஏறி மேகங்களை சிறை பிடிக்க மனம் துடித்தது. ஏனோ தெருவோரமாய் மழையில் விளையாடிய குழந்தை உன்னை நினைவூட்ட நீயும் அதை ரசித்துக் கொண்டிருப்பாய் என உணர்ந்த மனம் அமைதியானது. வண்ணம் கரையாமல் பாதுகாக்க என் அறையில் தஞ்சம் புகுந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி. உன் எட்டு நாள் ஆயுட்காலத்தில் ஏன் விளையாடுகிறானோ வருணன்? அந்த குறுகிய காலத்தில் காதலையும் தேனையும் எப்படி சுவைக்கிறாய் சொல்லி விட்டுப்போ.
காலில் தான் உன் சுவை மொட்டுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உன் காலில் என் காதல் தூது கட்டவா? இல்லை அதையும் போய் சேர்ப்பதற்குள் சுவைத்து விடுவாயா? படைத்தவன் கொடுமைக்காரன் ரெண்டு பூக்கள் காதலிக்க உன்னை வெறும் ஆயுதமாக பயன்படுத்துகிறானே? ஆனால் அந்தக் காதலை நீ சுவைக்கும் முன் கல்லறையில் புதைக்கிறான். பூவுக்கு மட்டும் தான் காதல் தூது போவாயா? இன்று எனக்கும் போயேன் என் காதலியும் பூ தான்.
பெயர் வந்ததே
உன்னால் தானோ?"
ரவிவர்மனின் கிழிந்த ஓவியத்துண்டாய் பறந்து வெளியே போனது. மழை நின்றது தெரிய வர நானும் கிளம்பினேன் என் பூவைத் தேடி. வானவில்லாய் வானத்தில் கோலம் போட்டது சூரியன் மழைத்துளியோடு கைகோர்த்து. தூரத்தில் எப்போதும் சந்திக்குமிடத்தில் ஈரமாக நீ, நனைந்து போனேனடி நான்.
"ஏய் இவ்ளோ நேரம் நனைஞ்சுட்டா இருந்த?"
"இல்லை நீ வருவேன்னு காத்துகிட்டு இருந்தேன்."
"பைத்தியம் முதல்ல துவட்டிக்கோ."
"வானவில் எடுத்து தா துவட்டிக்கிறேன்."
"அது வானத்தோட தாவணி. நனைந்து போன தாவணியை வானம் காய வைக்குது. அதுல தொடச்சா உன் அழகு அதுல ஒட்டிக்கும் வேண்டாம்."
சொல்லிக்கொண்டே உன் தலை துவட்ட மீண்டும் மேகம் மழையாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த வாழைமர இலை பிடிங்கி இருவரும் நடக்கலானோம். உன்னை நனையவிடக் கூடாதென அந்த வாழை இலை கூட மழையோடு தன் ஒட்டு மொத்த பலத்தை திரட்டி போட்டி போட்டு வென்றது ஆனால் நான் சற்று கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டேன். மழையில் நனைந்ததால் அன்று நான் அழுததை நீ கவனித்திருக்க வாய்ப்பில்லை.
காதல் காலம் தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:56 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
ஞாயிறு, ஆகஸ்ட் 5, 2007
நன் பண்
மீசை அரும்பிய பருவம்
நான் பேசும் மொழி
பெற்றவருக்கும் மற்றவருக்கும்
புறியாமல் இருக்க
என் பாஷை பேசி அருகிலமர்ந்தாய்!
சில நேரம்
இரத்தசொந்தங்களும்,இதயச்சொந்தமும்
என்னை குறை கூற
அந்த குறைகளோடென்னை
சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டாய்!
சுவாசிக்கவே சோம்பேறித்தனம் படுவாய்
தூக்கத்தில் பசியென நான் உளற
கையேந்திபவன் இட்லியோடு
நள்ளிரவில் எழுப்பினாய்,
தூக்கத்துக்காக சாகவும் செய்வாய்
மூன்று மணி நேரத்துக்கொரு முறை
என்னை எழுப்பி
மருந்தை வாயில் திணித்தாய்.
கம்யூனிசம் முதல்
காமசூத்திரம் வரை விவாதம்,
ஒரே குவளை பீர்,
ஒரிலை சோறு,
ஒரு போர்வை தூக்கம்
எப்படி மறப்பேன்?
கொலைப்பழி என் மேல் இருப்பினும்
என் பங்கு எங்கே?
என சட்டையைப் பிடிப்பாயே!
உன்னிடம் நட்புக்கு
கர்ணனே கையேந்துவானடா!
கவலைபடதே நமைப்பிறிக்க
அந்த சூழ்ச்சிக்கார கண்ணன் இல்லை.
என் இடப்பக்கம் எப்பவுமே
காலியாகவே இருக்கும் உனக்காக...
அழகான வார்த்தை நண்பன்
ஆனால் தமிழில் எப்போதுமே
தவறாக எழுதப்படுகிறதோ?
"நன் பண்" தான் சரி!!
இந்த நண்பர்கள் தினத்தன்று குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்ட என் நண்பர்களுக்காக சமர்ப்பனம்.
நட்பும் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 7:31 PM 2 கால்தடங்கள்
வகை: கவிதை
வெள்ளி, ஆகஸ்ட் 3, 2007
காதல் காலம் 9
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 9 முதல் பாகம் இதோ இங்கே.
மாலைப்பொழுது. தன் பணி முடிந்தும் உறங்கச் செல்லாமல் வானத்தின் விளிம்பில் சூரியன். அழகான செவ்வானம். வீடு திரும்பும் சூரியன் முதுகில் சிவப்புமை அடித்து முட்டாள் தினம் கொண்டடுகிறதா நிலா? இல்லை இரவு - சூரியனை கொலை செய்ய அதன் உதிரமா வானம் முழுக்க?
முதன்முதலாக உன்னை நினைக்காமல் வானத்து விளையாட்டைப் பார்த்தபடி அந்த சூரியகாந்தி தோட்டத்தில் காத்திருக்கிறேன். அனிச்சையாய் நீ வருவதை உணர்ந்தேன் ஆனால் பொய்யாய் தெரியாதது போல நடித்து வானம் பார்க்கிறேன். பின்னிருந்து என் கண்களை கைகளால் கைது செய்தாய்.
"யாரது?"
"நீயே கண்டுபிடி."
"ம்.. ஏதாவது துப்பு குடு."
"அடப்பாவி என் குரல் கேட்டுமா தெரியல?" பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து அடிக்க வந்தாய்.
"ஏய்.... அங்க பாரு அந்த மேகக்கூட்டம் கூட என்னடா குயில் தோடி ராகத்துல கூவுதுனு என்னைப் போலவே குழம்பிப் போய் இங்க பாக்குது."
"ம்.. கதை சொல்ல சொன்னா நல்லா சொல்லுவ. நான் வந்தது கூட கவனிக்காம உக்காந்திருக்க."
"எனக்கு தெரியுமே நீ வந்தது. தெரிஞ்சா மாதிரி இருந்திருந்தா என் கண்களுக்கு இன்னொரு இமை கிடைச்சிருக்குமா? அந்த சுகம் நிரந்திரமாக கிடைக்குமானால் இருட்டுக்கு வாழ்க்கை பட்டுவிடுவேன் தெரியுமா?"
"பின்னாடி பாக்கவே இல்ல நீ. அப்புறம் எப்படி தெரியும் உனக்கு?"
"அங்க பாரு அந்த சூரியகாந்தி எல்லாம் நீ இங்க இருக்கன்னு சாயந்திரம் கூட கழுத்து வலிக்க கிழக்கைப் பார்த்துகிட்டு இருக்கு. அது எல்லாம் இந்த பக்கமா திரும்பினதை பாத்து நீ வந்ததை தெரிஞ்சிக்கிட்டேன்."
"போதும்பா விட்டா நிறுத்தாம பேசுவ நீ."
சொல்லிக்கொண்டே வைக்கோல் போரின் மேல் சாய்ந்தாய். அந்த வயலில் இருந்த நாத்துக்களெல்லாம் உடனே சாகத்தயாரனது எனக்கு மட்டும் தானடி தெரியும்.
ஊமைக் கரையோடு கதையடிக்கும் நதியாய், பூக்களின் தவத்தை கலைக்கப் பாடும் வண்டாய் பேசி, உன் அழகால் பசித்து, வெட்கத்தை புசித்து, சிறிது நேரம் மடியில் தவழ்ந்து காலத்தின் வயதை அதிகரித்தேன்.
உன் தாலாட்டுப் பேச்சில் மயங்கி கிடந்தவனை உனக்கு எசைப்பாட்டு பாடும் குயில் எழுப்பியது. தலை கோதிக் கொண்டே நீ இருக்க மனம் முரட்டுக்குதிரையாய் பாய்ந்து ஓடியது எண்ணக்காட்டில். ("நான் சஹாராவின் சகோதரன் என் பகல்கள் சுடும், இரவு குளிரும் அது தான் வழக்கம் ஆனால் இவள் வந்து என் வாழ்ககை வீதிகளில் வண்ணம் விசிறியடித்து இப்போது ஒன்னும் தெரியாதது போல உக்காந்து இருக்கா." யோசனையில் நான்.)
"என்ன யோசிக்கிற?"
"ஒன்னும் இல்ல இன்னும் 2 மாசத்துல காலேஜ் சேரணும். நாம பிரிஞ்சிடுவோமா?"
"எதுக்கு பிரியணும்? நாம ரெண்டு பேரும் ஒரே காலேஜுல சேந்தா போச்சு."
"நடக்குமா?"
"ஏன் நடக்காது? வேணும்னா பாரு நாம ஒன்னாதான் படிக்கப்போறோம்."
நீ சொன்னதால் அது உண்மையில் நடந்தது போலவே எனக்கு தோன்ற இருவரும் சிரிப்போடு கிளம்பினோம் வீட்டுக்கு. உதட்டில் சிரிப்பு இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லாதது ஒரு அறிவு கொண்ட செடிகளுக்கு கூட தெரிந்தந்தது. காலையில் பார்த்த வண்ணங்கள் எல்லாம் தன்னுள் இருந்தாலும் இந்த வானம் ஏன் நட்சத்திரங்களால் ஓட்டை போடப்பட்ட கருப்பு புடவையை கட்டிக்கொள்கிறது? ஒரு வேளை என் சோகத்தை பகிர்ந்து கொள்கிறதோ?
காதல் காலம் -10
காதல் காலம் தொடரும்... காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 5:58 PM 2 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
கன்னி ராசி
ஒவ்வொரு நாளும்
நான்
போய் வரும் போது
ஜன்னல் கம்பிகளில்
புன்னகைப் பூத்திருக்கும்
கண்களாலேயே
கையசைப்பாய்
திடீரென்று
உன்னைக் காணவில்லை
என் மின்னலைக்
கைது செய்தது யார்?
பிறகு தான் தெரிந்தது
உனக்குத் திருமணம் ஆகிவிட்டது.
என்ன செய்வது?
எனக்கு ராசி மட்டும் தான்
"கன்னி".
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:32 2 கால்தடங்கள்
வியாழன், ஆகஸ்ட் 2, 2007
வாழ்நாள் சேகரிப்பவன்
மின்னல்,
உன் புன்னகைகளைச் சேகரித்தால்
பூந்தோட்டம்,
உன் க்ண்ணீர்த்துளிகளைச் சேகரித்தால்
ஆலகாலம்,
உன் இதழ்த்துளிகளை சேகரித்தால்
தேன்கூடு,
உன் வெட்கத்தினை சேகரித்தால்
அந்தி,
உன் இதயத்துடிப்பைச் சேகரித்தால்
என் வாழ்நாட்கள்!
என்னவளே!
உனக்குத்தெரியுமா?
தாஜ்மகாலின்
சுவரில்
உன் பெயரையும்
என்
அடுப்புக் கரியால்
எழுதி வைத்தேன்
எல்லோரும்
அதிசயமாய்ப் பேசிக்கொள்கிறார்கள்
அந்த எழுத்துகளில் தான்
ரோஜாவின் மணம் வீசுகிறதாம்.
என்னை
இப்போதும்
"பைத்தியம்" என்கிறாயா?
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:42 6 கால்தடங்கள்
புதன், ஆகஸ்ட் 1, 2007
உன்
அதென்னடி ரகசியம்?
உன்
கூந்தல் சேரும்
பூக்கள்
உயிர்த்தெழுகின்றன?
உதட்டு ரேகை
கிடைக்குமா?
எனக்கு ஜோசியம்
பார்க்க வேண்டுமாம்.
உன்
இமைப்புகளின்
எதிரொலியே
என் இதயத்துடிப்புகள்.
ஒற்றை முடி
கொடுப்பாயா?
என் உயிர் கட்டத்தேவை!
உன்
சிரிப்பை
கொஞ்சம் கடன் தா
மோனாலிசாவை
வெறுப்பேற்ற ஆசை.
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:07 2 கால்தடங்கள்
செவ்வாய், ஜூலை 31, 2007
நிரந்தர கர்பிணி
கோயிலுள்ளே பத்து ரூபாய்
போட்ட கை தான்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் தேடியது.
பிறந்திருக்கலாம்
யோசனையில்
பிச்சைக்காரச் சிறுவன்.
அரியும் சிவனும்
ஒன்னென்று
புறியவே
ஒரு யுகமாச்சே!
அப்போ
மதநல்லினக்கம்?
சில ஜென்மங்கள்
கழித்து பேசுவோம்...
கர்பிணியாய்
கோயில் உண்டியல்,
வெளியே
பாலுக்கு கதறும்
ஏழைகள்.
கேட்கவில்லையா
உங்களுக்கு?
"கடவுள் முன் எல்லோரும் சமமா?"
சரி முதலில்
"கடவுள் எல்லோரும் சமமா?"
ஆமென்றால்
அய்யனாருக்கு மட்டும்
ஏன் 'அவுட் ஹவுஸ்'?
அருள் தரும்
ஐந்தறிவு யானையை
மன்னிப்பேன்.
உன்னையல்ல....
அன்பே சிவம்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:37 0 கால்தடங்கள்
வகை: கவிதை
ஸ்ரீயாகிய நான் 1 வயசுக்குவந்துட்டோம்ல
தப்பா நினைக்காதீங்க. பசங்க எப்போ வயசுக்கு வராங்கனு தெரியமாட்டேங்குதே! ஆனா பசங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சா வயசுக்கு வந்தா மாதிரினு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தது 12th படிக்கும் போது தான். கொஞ்சம் லேட் இல்ல? அப்போ கொஞ்சம் படிப்பாளி நான், இதெல்லாம் தெரியாது. எக்ஸ்கர்சன் அப்டின்ற பேருல வாத்தியாருங்க ஊரு சுத்த கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த வருசம் மெட்ராஸ் போலாம்னு சொன்னாங்க. கிளாஸ் கவனிக்காம சும்மா பின்னாடி பென்சுல பேசுரத கேட்டேன் அவனுங்க எனக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டானுங்க போல பீரை பத்தி பேசிகிட்டு இருந்தானுங்க. எனக்கு ஆசை வந்துடுச்சு சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமேனு அவனுங்க கிட்ட கெஞ்சுனேன். அவனுங்க சரி ஆனா நீ தான் வாங்கிட்டு வரணும்னு சொல்லிடானுங்க பாவிங்க. உடனே மாஸ்டர் பிளான் போட்டோம் நானும் என் பிரண்டு ஓணானும். அன்னிக்கு ராத்திரி தான் ஆபரேசன் பீர். அவன் வண்டி எடுத்துகிட்டு பாருக்கு போனோம். போகும் போது நான் தான் ஓட்டினேன் ஆனா எனக்கு வண்டி ஒட்ட தெரியாது ஏதோ ஒரு சந்தோசத்துல ஓட்டிட்டேன். அவன உள்ள அனுப்பி வாங்கிட்டு வர சொன்னேன் (உசாரு இல்ல நாங்கெல்லாம்). போனவன் அலறிகிட்டு ஓடி வரான் அவனோட அப்பா உள்ள இருக்காராம், ஆனா செல்லம் வாங்கிட்டு வந்துட்டான். சீக்கிரம் வண்டி எடுடானு சொல்றான் ஆனா வண்டி நவுற மாட்டேங்குது. அப்டியே வண்டிய தள்ளிகிட்டு எஸ் ஆயிட்டோம்.
அடுத்த பிரச்சனை எங்க வெக்கறதுனு. அடுத்த நாள் 4 மணிக்கு தான் போறோம் சரி அத அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பொதருல போட்டுட்டு போயிட்டோம். நான் வீட்டுக்கு நல்ல புள்ளயா போய் மத்த விசயம் எல்லாம் எடுத்து வெச்சேன். ஒரு 7up பாட்டில் எடுத்து போட்டுகிட்டேன் (அதுல ஊத்துனா தான் தெரியாதுனு ஐடியா. எப்டி யோசிச்சேன் பாத்தீங்களா?). சந்தோசமா தூங்க போயிட்டேன். அடுத்த நாள் 3.30 மணிக்கு அவன் வீட்டுக்கு போனா அந்த இருட்டுல எந்த பொதருல போட்டோம்னு ஞாபகம் இல்ல. டார்ச் அடிச்சி எப்டியோ 10 நிமிஷதுல கண்டு புடிச்சிட்டோம். அதுக்கு அப்புறம் தான் தெரியுது அது சோடா பாட்டில்ல இருக்குற மூடி மாதிரி இருக்கு. ஓப்பனர் இல்ல, பல்லால கடிச்சாலும் வேலக்கு ஆகல. அடுத்த ஐடியா நர்ஸ் ஊசி எல்லாம் ஒடச்சி ஒப்பன் பண்றா மாதிரி தொரக்கலாம்னு தோணுச்சு (இட் ஹேப்பன்ஸ்! எல்லா நேரமுமா நல்ல ஐடியா வரும்?). ஆனா அது சொதப்பல்னு கல்லால அடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது. எல்லா பீரும் என் சட்ட மேல தான். பாதி பாட்டில் காலி மீதிய 7up பாட்டில்ல ஊத்தினோம். ஸ்கூல் யுனிபாம்ல தான் போணும் ஆனா சட்ட எல்லாம் நாசம் ஆச்சு அப்டியே அவன் வீட்டுக்கு பின்னாடி போய் இருட்டுல அத தோச்சு மாட்டிக்கிட்டு போனேன்.
ஆனா அந்த வாசனை (நாத்தம் தான் ஆனா இப்போ அது வாசனையா தெரியுது) அப்டியே தான் இருந்தது. எல்லாம் வித்தியாசமா பாத்தானுங்க. ஓடி போய் கடைசி சீட்ட போட்டு சைலண்ட் ஆயிட்டேன். அப்புறம் சட்டய கழட்டி தூக்கி போட்டுட்டேன். அத காசு குடுத்து வாங்கிட்டோமேனு குடிச்சுட்டேன். நம்ம சிம்ஸ் சூப்பரா ஆடியிருக்குமே நிலவை கொண்டு வானு ஒரு வாலி பாட்டு அத போட்டு சரியான குத்து போட்டேன். அப்பால போய் பிளாட் ஆயிட்டேன். வாய முதலை மாதிரி தொரந்துகிட்டு தூங்கி இருக்கேன். அத போட்டோ வேற எடுத்து மானத்த வாங்கிட்டானுங்க. ஆனா நான் கவலை படலைங்க (இருந்தா தான;)). அன்னிக்கு இருந்து நானும் சொல்லிக்கிறா மாதிரி வளந்துட்டேன் ஸ்கூல்ல. 12th முன்னாடி நடந்த கத நிறைய இருக்கு (வித்து ரொமான்சு) . அப்புறம் சொல்றேன். ரொம்ப யோசிக்காதிங்க ரொமான்சுனு சொன்ன உடனே... ;)
ஸ்ரீயாகிய நான் 2
ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:33 6 கால்தடங்கள்
வகை: அசைபோடுகிறேன்
திங்கள், ஜூலை 30, 2007
கட உள் கடவுள்
சேமித்த பாவமூட்டைகளோடு
அவன் வீடு போக,
காசைப் பார்த்த கொடி மரம்
காலம் மறந்து பூக்க,
காந்திக்கு ஐயர் எங்களிடையில்
கண்ணாமூச்சி நடத்த,
புறப்பட்டேன் அவனை
தேடி நானே!
துரும்பை கிளறியும்,
தூணை சுரண்டியும்
ஏமாந்து போனேன்.
"ஏழையின் சிரிப்பு"
என்றாரொரு பெரியவர்.
ஏழைக்கா பஞ்சம்?
பசியெனும் பசையால்
இடுப்போடு வயிறொட்டியவன்
எப்படி சிரிப்பான்?
மீண்டும் ஏமாற்றம்.
வேறு வழியின்றி
அச்சிலை முன்னே
இறக்கி வைத்து நடந்தேன்.
ஏனோ இப்போது மனம்
அதிக பாரமாய்!
"விதைத்ததை நானே
அறுத்துக் கொள்கிறேன்"
சொல்லி மறுபடி சுமந்தேன்.
ஆனால்
அதில் சுமையிருந்தும்
பாரமில்லை.
அட!
உள்ளே கிடப்பவனை
வெளியே தேடினால்
கிடைப்பானா?
கட+ உள் = கடவுள்.
அன்பே சிவம்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:18 PM 2 கால்தடங்கள்
வகை: கவிதை
அசைபோடுகிறேன்
நண்பர்களே!
ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த காலேஜ் பக்கம் போயிருந்தேன். பின் நோக்கி போகிற சுகமே தனி தான். முதல்ல போகணுமானு தான் யோசித்தேன். நான் காதல் பழகிய அந்த அழகான உலகத்த மறுபடியும் பாக்க ஏதோ என்ன இழுத்துட்டு போயிடுச்சு. என்கிட்ட நல்லா பழகுனவங்களை மட்டும் பாத்துட்டு வந்துடலாம்னு போனா அங்க எல்லாரும் அவர் ரூம்ல தான் இருக்காங்க. என்ன உருப்பட மாட்டடானு திட்டுனவங்க தான் என்ன பார்த்து சந்தோஷப் பட்டாங்க. எங்கயோ படிச்ச ஞாபகம் "வெளியேறியது பறவை, கூண்டுக்கு விடுதலை.". ஆனா அந்த கூண்டுகள் எனக்கு கூடு கட்ட சொல்லித்தந்து இன்னும் கூண்டா இருக்கவே சந்தோஷப்படுதுங்க. என் பேரை 2 வருஷம் கழிச்சு கூட முக்கால் வாசி சரியா சொன்ன அந்த பேராசிரியை, ஆர்வமா என்ன பாத்த ஜூனியர் எல்லாம் "ஏன் இவ்ளோ நாள் போகாம இருந்தேன்னு என்னயே கேள்வி கேக்க வெச்சுது.". நீங்களும் ஒரு முறை போய் பாத்தாதான் நான் சொல்றது புறியும். திரும்ப வர மனசில்லாம தான் வந்தேன். நியாபகங்கள் சுவை இப்போது புறிந்து போச்சு அதனால் ஒரு புது பகுதி ஆரம்பிக்க நினைக்கிறேன். பேரு தேடி சலிச்சு போச்சு. "Being Sri" அப்டினு வைக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா தமிழ்ல எழுதும் போது நம்ம பசங்க தப்பா படிக்க போறாங்களோ ஒரு பயம் அதனால "ஸ்ரீயாகிய நான்" அப்டினு அரம்பிக்க போறேன். என் வாழ்க்கையில நடந்த சில மறக்க முடியாதவை மட்டுமே இடம் பெறும். நீங்களும் ஒரு முறை போய் பாக்கலாமே...?
அசைபோடுகிறேன்...
-ஸ்ரீ.
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:58 0 கால்தடங்கள்
வகை: அசைபோடுகிறேன்
புதன், ஜூலை 25, 2007
காதல் பிழைக்க
எங்கே போகிறது இந்த காதல்?
காதல் போயின் சாதல்
என கொதித்த மூத்த கவியின்
வார்த்தையை பொய்யாக்கும் முயற்சியோ?
கடற்கரை மணலிலும்,
அரங்குகளின் இருட்டிலும்,
பூங்காவின் புதரிலும்,
காதல் கொலை செய்யும் காமுகா!
நடுத்தெருவில் சூரியன் சிரிக்க
புணரும் தெருநாய்க்கும்
உனக்கும் பெரிய
வித்தியாசம் இல்லை.
காமஇச்சை தீர உனக்கு
காதலென்ன கேடயமா?
அடேய் படைத்தவனே!
ஒன்று
ஆணைக் கருத்தரிக்கவை,
இல்லை
அவளை ஊர் கூட்டி,
அவன் வீட்டின் முன்
பிரசவிக்க ஆணையிடு!
காதல் பிழைத்துக்கொள்ளும்...
காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ
(உண்மைக் காதலை சாடி எழுதப்படவில்லை)
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:34 PM 2 கால்தடங்கள்
திங்கள், ஜூலை 23, 2007
தேவதைலோகம்
என்ன வரம் வேண்டுமோ கேள்!
உறக்கத்தின் நடுவே
உரக்கக்கேட்ட குரலால் எழுந்தேன்.
தூக்கத்தை தூர எட்டி உதைக்கும் முன்
பிரகாசமாக சிரித்தான் கடவுள்.
மானிடப்பதரல்லவா சுயநலமே
முந்திக் கொண்டு வர
தேவலோகத்தில் ஒரு இடமென்றேன்
மறுக்கவா முடியும்?
தர்மசங்கடத்தில் அவன்!
உடனே சுதாரித்துக் கொண்டு
சரி அது வேண்டாம்.
என்னவளை அரை நொடி கூட
பார்க்காமல் இருக்க முடியாது,
இமைகளை செயலிழக்கச் செய்யென்றேன்.
தேவர்களின் குணத்தை கேட்பதை
புரிந்து மர்மமாக சிரித்து மறைந்தான்.
இமைகள் முத்தமிடுவதை நிறுத்தின,
தேவனான திமிரில் தேவலோகத்திக்கெதிராக
தேவதை உனக்கு தேவதைலோகமொன்று செய்தேன்.
இதழோடு இதழ் முட்டி உனக்கும்
நம் காதல் போல் அமரநிலை தந்தேன்.
சரி வா நம் லோகத்துக்கு அந்த
தாஜ்மகாலை ஒரு படிக்கல்லாக்கலாமா?
பரிசீலிப்போம்.
கடவுளையே வென்ற பரவசத்தில்
திளைத்த நேரம் காதோரமாய்
"இப்போது புரிகிறதா?
முதல் வரம் ஏன் தரவில்லையென்று."
மர்ம சிரிப்பின்
முடிச்சியவிழ்த்தான்.
இப்போது தேவனானாலும்
முன்னாள் மனிதன் தானே!
அசட்டுத்தனத்தை துடைத்துக்கொண்டு
என் தேவதைலோகத்தில்
நான்....
காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 5:40 PM 0 கால்தடங்கள்
வெள்ளி, ஜூலை 20, 2007
காதல் காலம் 8
இது பாகம் 8 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.
எப்போதுமே உன்னோடு நான் இருந்து விடுவேன் என்று நினைத்து தானோ அந்த பொறாமைக்கார கடவுள் படைத்தான் இரவை. தனிமையைக் கூட சமாளித்து விடுவேன் ஆனால் உன் நினைவுகளை என்ன செய்ய? இரவோடு சேர்ந்து அவையும் இம்சை செய்தன. கனவோடு கண்ணாமூச்சி, தலையணைக்கு உயிர் தந்து அதோடு செல்ல பேச்சு, இப்படியே இரவைக் கொன்று முடித்தேன். தலையில் தீ வைத்து விட்டார்களோ? தன் கொண்டையைப் பார்த்து சந்தேகத்தில் கூவும் சேவல், மெதுவாக வெளியே வந்து சோம்பல் முறிக்கும் சூரியன், என்னைப் போலவே இரவை வெறுத்திருந்து கூட்டை விட்டு பறக்கும் புறாக்கள் அனைத்தும் அழகாகத் தெரிந்தாலும் மனம் உன்னைத்தேடியே அலைபாய்ந்தது. பால் வாங்கும் காரணம் சொல்லி கால்கள் உன் வீடு தேடி நடந்தன.
இரவில் நிலவும்
உனைக்காணா நேரம்
வடித்த கண்ணீர் தானோ?
விடியலில்
புற்களிலும், பூக்களிலும்.
தூரத்தில் என் உயிருக்கு உருவமும், பச்சை தாவணியும் கொடுத்தார் போல் நீ. அந்த தெருவையே அழகாக அலங்கரித்து கொண்டிருந்தாய் என் வாழ்க்கையை போலவே. தண்ணீர் தெளித்தும் அடங்காத உன் வீட்டு வாசலின் தாகம், நீ சரியாக துவட்டாத ஒரு துளி நீரால் மூழ்கிப்போனது. அது சரி சூரியனையே குளிரச்செய்யும் அந்த சொட்டு இது வெறும் நிலம் தானே!
வாசலைக் கொஞ்சுகிறாயோ? ஓ! கோலமா? அடிப்போடி பைத்தியக்காரி நாணத்தால் நீ கால் நுணியில் போடும் கோலத்தை விடவா இது அழகாக இருக்கப் போகிறது. நடப்பதை மறந்தன கால்கள். என்னைக் கண்ட நீ மிரண்டு போன மான் குட்டியாய் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினாய். கீழே என்னை திட்டிக்கொண்டிருக்கிறது பாதியில் நீ விட்டுச்சென்ற கோலம். அட இது கூட அழகாகத்தான் இருக்கிறது தேய்பிறை போல. இந்த நிகழ்வுகளில் என்னைத் தொலைத்து வெறும் கையோடு வீடு திரும்பினேன். பள்ளி முடிந்து திரும்பும் நேரம் வழக்கமான வார்த்தை விளையாட்டைத் தொடங்கினேன்.
"ஏய்! அப்படியா திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வந்து நிப்ப?"
"என்னிக்கா இருந்தாலும் உன் வீட்டுக்கு வரப்போரவன் தானே கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் அவ்ளோ தான்."
"ம்... சரி மயில் கோலம் பாத்தியா? எப்படி இருந்துச்சு?"
"மயில் போட்ட கோலத்த பாத்தேன் ஆனா.. மயில் கோலத்த பாக்கலயே!!"
"அய்யோ! ஒழுங்கா பதில் சொல்லு."
"நிஜமா தான். உன் கை பட்டதால இனிக்கிற கோலமாவை எல்லாம் சர்க்கரைனு ஏமாந்து போன எறும்புங்கள் எடுத்துகிட்டு போயிடுச்சு. அதான் பாக்க முடியல."
செல்லமாக உன் கையில் இருந்த குச்சியை என் மேல் வீசினாய். நான் நகர்ந்து விட, கூட்டுக்கு சுள்ளி தேடி வந்த மைனா அதன் வாசற்காலுக்கு அதை எடுத்துக் கொண்டு பறந்தது. கொடுத்து வைத்த பறவை அந்த கூடு கலையாது, கலைக்கவும் முடியாது. அந்த அடியின் சுகத்தை இழந்து விட்ட சோகத்தில் வரவிருக்கும் இரவுடனான சண்டைக்கு என்னை ஆயுத்தப் படுத்திக் கொண்டே நடந்தேன்.
காதல் காலம் பாகம் 9
காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:31 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
வியாழன், ஜூலை 19, 2007
பார் ரதி
இதயப் பூவமர்ந்து
உயிர்த்தேன் குடித்து
இமைச்சிறகடிக்கும்
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
உன் கண்கள்.
கருப்பு என்ன
ஒதுக்கப்பட்ட நிறமா?
அதில் பூக்களே இல்லை
ம்... ஒருவேளை,
உன் கூந்தலினும்
மணம் ஏற்ற முயன்று
தோற்றானோ நான்முகன்?
மேக அரிதாரம்
பூசியும் அழகில்
உனக்கு ஈடாகாமல்
வானம் அழுவதைத் தான்
மழை என்கிறதா உலகம்?
'எமக்குத் தொழில் கவிதை'
என்றான்
பாரதி
அவன் தொழிலாகவே வாழும்
நீ
பார் ரதி!!
மனதில் உனை விதைத்து
நீர் கொண்டு திரும்பும் முன்
விருட்சமாக சிரிக்கிறாய்.
கொணர்ந்த நீர் போதாமல்
உயிர் உருவி ஊற்ற
மறுகனம் போன்சாயாய்
மாறி சிலிர்க்கிறாய்.
ஏனடி இந்த சில்மிஷம்?
சில்மிஷியே!!!
காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:42 PM 0 கால்தடங்கள்
செவ்வாய், ஜூலை 17, 2007
நேத்து பெஞ்ச மழை
"நல்ல புள்ளயா படிச்சு
பெரிய ஆளாவனும்"
வேளக்காரியா அவமானப்பட்டு
முடியும் அவ வாழ்க்கயோட
ஆதங்கத்த கொட்டித்தீத்தா
ஆத்தா
கண்டிப்பானு நாஞ்சொல்லி
முடிக்குமுன்
போய் சேந்தா
அய்யோ மவராசி போய்டியே!
போலியா அழற கிழவிக,
குடிபோதயில அம்மனமா
கெடக்குற அப்பன்,
ஆத்தா நகைக்கு கழுகா
சுத்துற மாமன்
அழாம அவ முத்தம்
தந்த ஈரத்த தொட்டுகிட்டு
கெடக்கேன்
முனியப்பா இத காயவுடாத
வேண்டிக்கிட்டேன்
கடன வாங்கி காரியம் பண்ணி
சொந்தத்த வழியனுப்ப
அப்பனும் போனான் கூட
நானும் சொந்தம் தான்டானு சொல்லி
பிச்சயெடுக்க தோணல
கையேந்த ஆத்தா
கத்தும் தரல
சாராயக்கடயில வேல
கூலி அடியும் சூடும்
தான்டி
வவுறு காஞ்சி
உசுரு போவ
சோத்துக்கு திருடினேன்
மறஞ்சி வந்து
தொரந்த பையில
நோட்டுல எல்லாம்
ஆத்தாவோட மூஞ்சி
மன்னிச்சுடுடி என்ன
கதறி அழுது ஓடுனேன்
அந்த ஆள தேடி
ஐயா உங்க பைய
பசியாலத் திருடிப்புட்டேன்யா
மன்னிச்சிக்கோங்க
மேல கீல பாத்த
புண்ணியவான்
படிக்கிறியானு கேட்டார்
தோள்ள கைபோட்டு
ஆத்தா நேத்து பெஞ்ச மழைக்கு
அர்த்தம் இருக்கு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்!!
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 3:03 PM 0 கால்தடங்கள்
வகை: கவிதை
திங்கள், ஜூலை 16, 2007
வழக்கொழிந்த வார்த்தை
இலையுதிர் காலத்தால்
வறண்டு போன போது
என் வாசலுக்கு
வசந்தம் கொண்டு வந்தாய்
கால்களைப் பிடுங்கிக்கொண்டு
சிறகுகள் தந்து
மனக்கூண்டினுள்
சிறை வைத்தாய்
உனக்குள்ளே நான்
கறைந்து போக
என் முகவரி
நீயாய் போனாய்
என் அணுக்களில்
குடியேறி
உயிரோடு
சடுகுடு ஆடினாய்
கண்ணீர்த் தேன்,
முத்தத் தீ ஊற்றி
நம் காதல்
செடி வளர்த்தாய்
பூப்பூக்கும்
நேரம் பார்த்து
காற்றோடு
மறைந்து போனாய்
இன்று
நீ இல்லாமல்
வழக்கொழிந்த வார்த்தையாய்
நான்
நினைவுகளின் கல்லறையாய்
என் இதயம்!!
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 3:43 PM 2 கால்தடங்கள்
திங்கள், ஜூலை 9, 2007
காதல் காலம் 7
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 7 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.
பிள்ளையார் முன் கண்கள் மூடி நீ. உன்னைப் பார்த்தபடி நான். தற்செயலாக இதை கவனித்தாய்.
"ஏய் ஒழுங்கா அங்க பாத்து சாமி கும்பிடு."
"ரெண்டு சிலை இங்கே இருக்கு, அதில் அழகான சிலையை பாத்துகிட்டு நிக்கிறேன். உன்னை பாத்து கோபுரத்து சிற்பங்களுக்கே பொறாமை வேணும்னா நீயே பாறேன் எல்லாம் முகம் சுலிச்சிகிட்டு தான் இருக்கு."
"ஷூ... கோயிலுக்கு வந்தா சும்மா இருக்கணும்." என்று அதட்டினாய்.
"இல்லம்மா கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடணும்."
ததும்பிய புன்னகையை மறைத்துக் கொண்டு திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாய்.
"அடிப்பாவி! இதுக்குத்தானே இவ்ளோ நேரம் பேசுனேன்." மனதில் நினைத்துக் கொண்டே காத்திருந்தேன்.
"தீர்க சுமங்கலி பவ" ஐயர் சொன்ன வார்த்தையால் என் வலது கையில் ஆயுள் ரேகை நீண்டு முழங்கைக்கு ஓடியது. குங்குமத்தை என்னிடம் நீட்டி வைக்கச்சொன்னாய். என் தயவால் உன் இரு புருவங்களும் கை குலுக்கிக்கொண்டன. கையை உன் கண்களுக்கு மேல் வைத்து ஊதினேன்.
"காற்று மொட்டுக்களை திறக்கும்
என்று தான் கேள்வி
ஏனோ இன்று
தலைகீழாய்!"
அந்நேரம் உன் நெற்றியில் ஒரு நாடகம், புருவங்களுக்குள் நடனப் போட்டி. அதில் என்னையே மறந்து போனேன். மேளமோ நாதசுரமோ இல்லாமல் நடந்து முடிந்தது அந்த அழகான திருமணம்.
"சரி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிது போலாமா?"
"கல்யாணமா? கெட்டிமேளம் இல்ல, மந்திரம் இல்ல..."
"கெட்டிமேளம் வைக்க காரணமே ஒருவேளை மணமக்களில் யாராவது ஒருத்தர் கல்யாணம் பிடிக்காமல் மனசுல அழுதால் அந்த சத்தம் வெளியே கேக்கக்கூடாதுன்னு தான். புரிஞ்சுதா? அதனால இங்க கெட்டிமேளத்துக்கு அவசியம் இல்லம்மா."
"எல்லாத்துக்கும் குதர்க்கமா ஏதாவது பதில் வெச்சிரு."
சந்தோஷத்தில் குதித்து மணி அடித்தாய். ஆனால் தரை இறங்கியது இரண்டு பூக்கள் தட்டில் இருந்த அர்ச்சனை பூவோடு சேர்த்து. குனிந்து எடுக்க இருவரும் முயற்ச்சிக்க நம் தலைகள் முட்டிக்கொண்டன.
"இரு இன்னொரு தடவை முட்டிக்கோ இல்லன்னா கொம்பு வளந்துடும்."
"எருமை உனக்கு கொம்பு இருந்தா தான் நல்லா இருக்கும்."
"ஆனால் பூ உனக்கு கொம்பு இருந்தா நல்லா இருக்காதே!"
என்னிடம் இருந்து தப்பித்து கோயிலை சுற்றி ஓடினாய்.
"என் சன்னிதானத்தில் என்ன விளையாட்டு இது?" அசரீரியாய் என்னிடம் மட்டும் பிள்ளையார்.
"பூவை கீழ தள்ளி விட்டதே நீ தானே!" பதிலுக்கு நான்.
"எனக்கும் பதில் தந்து வாயை அடச்சிட்டானே!" கோவத்தில் பிள்ளையார் திரும்பிக்கொண்டார்.
காதல் காலம் பாகம் 8
காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 8:26 PM 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
காதல் காலம் 6
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 6 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.
இன்று வெகு நேரம் ஆகியும் விடியாதது போலவே தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் ஞாயிற்றுக்கிழமை என்று சிற்றறிவுக்கு எட்டியது. பிரதி ஞாயிறு விடுமுறை விட்ட வெள்ளையனை திட்டலானேன். சுவாசிக்காமல் இருக்க முடியுமா? கழற்றி விட்ட கன்றுக்குட்டியாய் உன்னைத்தேடி உச்சிப்பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் காத்திருந்தேன். உழைத்த 100 ரூபாய் நோட்டை நொடிக்கு நூறு முறை எடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் கூலிக்காரனைப் போல, உன் காதல் ஒன்று மட்டுமே உடன் இருக்க உலகத்தை வென்ற பெருமிதத்தில் நான். வழக்கம் போல் காலத்தை முந்திக்கொண்டு முன்னமே வந்து சேர்ந்தேன். என் தனிமையோடு பேசிக்கொண்டிருந்தேன்.
"லூசு வெயில்ல நின்னு என்ன பண்ற?"
"நட்சத்திரம் எண்ணிக்கிட்டு இருந்தேன்."
"லூசுனு சொன்னது சரி தான். இப்போ நட்சத்திரம் எங்க தெரியும்னு கேட்டா,'நிலாவே என் முன்னாடி நிக்குதே நட்சத்திரம் தெரியாதானு சொல்லுவ'."
"இல்லமா நீ என் சூரியன். நீ இல்லாம இவ்ளோ நேரம் இருட்டாதான் இருந்தது அதான் நட்சத்திரம் தெரிஞ்சுது."
"விட்டா பேசிகிட்டே இருப்ப வா கோயிலுக்கு போவோம்."
"ஆமாம் இல்லன்னா பிள்ளையாரே உன்ன பாக்க கீழ இறங்கி வந்துட போறாரு."
படிகளை நோக்கி ஓடினாய்.
"இன்னிக்கு கொலுசு அதிகமா சத்தம் போடுதே!"
"பொய் சொல்ல அளவே இல்லயா? நான் கொலுசே போடலை."
"அப்படியா? அப்ப அந்த சத்தம் எங்கேருந்து வருது? இந்த படிகள் தான் சத்தம் போடுதுனு நெனக்கிறேன் இரு என்னனு கேட்டுட்டு வரேன்."
படிகளை நோக்கி காதுகளை எடுத்து செல்கிறேன்.
"என்ன சொல்லுதுங்க?"
"அதுவா? இந்த கோயில் கட்டும் போது,'சிற்பியோட ஒரு அடிக்கே உடஞ்சுட்டியே அதான் நீ படிக்கல்லா இருக்க ஆனால் 1000 அடி வாங்கியும் உடையாததுனால தான் நான் கடவுள் சிலையா இருக்கேன்னு' அந்த சிலை சொல்லுச்சாம். ஆனா இன்னிக்கு இந்த படி எல்லாம் உன்னோட கால் பட்டதால உள்ள இருக்க கடவுளை பாத்து சிரிக்குதுங்க. உன் ஸ்பரிசம் தொடமுடியாத சாபம் வாங்கியிருக்காம் அந்த சிலை. இதுங்க எல்லாம் பழி தீத்துக்குச்சாம் அதான் சிரிக்குதுங்க."
"அப்பா! பொய் பேசுறதுல உன்ன யாரும் ஜெயிக்க முடியாது. பாத்து பொய் சொன்னா சாப்பாடு கிடைக்காதுனு சொல்லுவாங்க."
"'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது'
பொய்க்கு விலையாய்
உன் வெட்கம் கிடைக்கையில்
பசியும் எடுக்குமோ?"
பதில் தேடி கலைத்து போன நீ கண்ணாலேயே ஆயிரம் பதில் சொன்னாய். அதை மொழி பெயர்த்தால் தான் கவிதை என்கிறது இந்த உலகம்.
காதல் காலம் பாகம் 7
காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:46 PM 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
செவ்வாய், ஜூலை 3, 2007
காதல் காலம் 5
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 5 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லை என்றால் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.
மேய்ப்பன் தோளில் இருக்கும் வழிமாறிய ஆட்டுக்குட்டியாய் காதலின் தோளில் ஏறிக் கொண்டு பயணித்தேன். சவாரி என்றுமே சுகம் தானே. என் காதலை வட்டியும் முதலுமாக என் மேல் திணித்தாய் நீ. அற்புதமான அந்திப்பொழுது சூரியனை விரட்ட வந்த நிலா வானத்தில். உனக்காக ஆத்தங்கரையில் உன் முகத்தை மனதில் அசை போட்டுக்கொண்டே கல் எறிந்து கொண்டு நான் காத்திருந்தேன்.
"ரொம்ப நேரமா காத்திருக்கியா?"
"இல்ல இப்பதான் வந்தேன் ஆனா இந்த அரசமரம் தான் 70 வருசமா காத்துகிட்டு இருக்கு உனக்காக."
"இன்னிக்கு சூரியன் ரொம்ப சிகப்பா இருக்கே!"
"நீ வருவேனு இவ்ளோ நேரம் காத்திருந்தது அது கிளம்புர நேரம் பாத்து நீ வர அதான் கோவமா இருக்கு போல."
"எல்லாத்துக்கும் பதில் வெச்சிருப்பியோ?"
"முன்னாடி எல்லாத்துக்கும் கேள்வி தான் வெச்சிருந்தேன். இப்போ பதில்கள் தான் என்னை வெச்சிருக்கு."
"சரி அப்போ கேள்வி கேக்குறேன். ஏன் என்ன புடிச்சிருக்கு?"
"இயற்கைய பொய்யாக்க பொறந்திருக்கியே அதான்."
"எப்பவுமே புரியாத மாதிரி தான் பேசுவியா?"
"தேயாத நிலா,
வாடாத பூ,
பேசும் சித்திரம்,
குளிரும் தீ,
அழகான பெண் மயில்,
நடமாடும் கவிதை,
சிணுங்கும் சிற்பம்,
கைக்கெட்டும் வானம்,
கலையாத மேகம்,
ஐந்தடி சொர்கம்,
திகட்டாத தேன்..
இது மாதிரி சொல்லிகிட்டே போலாம். காரணம் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?"
"உன்ன மாதிரியே உன் காதலும் ரொம்ப மோசம்டா கனவுல கூட வந்து தொல்ல பண்ணுது."
"அடிப்பாவி என்னை அது தூங்கவே விடுறது இல்ல. நேத்து இப்படித்தான் தூங்க முடியாமல் உனக்காக் நட்சத்திரம் பறிக்க வானத்துக்கு போயிருந்தேன். சொர்கத்துல காவல் தேவதைகள் கண் அசந்த நேரம் உள்ளே போய் சுவத்துல உன் பேரை கிறுக்கிட்டேன். வந்து பாத்த தேவேந்திரன் தேவர்களை எல்லா சுவத்தலயும் உன் பேரையே எழுத சொல்லிட்டான். கடவுளா இருந்தாலும் சரி உன் பேரை எழுத விடுவேனா? நானே ராத்திரி முழுக்க இருந்து எழுதிட்டு தான் வந்தேன்."
கேட்ட நீ கைக்கு ஒரு முத்தம் தந்தாய். காமத்தை மட்டுமே அறிந்த அந்த வயது காதலோடு நீ தந்த முத்தத்தால் காமத்தைக் கொன்ற காதலாக மாறியது.
"சரி உலகத்துலயே சிறந்த காதல் ஜோடி ஆவோம் தயாராகிக்கோ!" என்றேன்.
"அப்போ ரோமியோ-ஜுலியட், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு பட்டியலில் நம்ம பேரும் சேத்துடுவோம்."
"காட்டுத்தீயை சுடும்
என் காதலுக்கு
மின்மினிப்பூச்சுடன் போட்டியா?"
இதைக்கேட்ட அரசமரம் இலைகளாக தன் வியர்வையை நம் மேல் உதிர்த்தது.
காதல் காலம் பாகம் 6
காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 8:42 PM 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
திங்கள், ஜூலை 2, 2007
காதல் வலை
பல நேரம் மருந்தானாலும்
சில நேரம் முட்களாக மாறி காயப்படுத்துவதால்
காதலுக்கு சரியான சின்னம் தான்
- ரோஜா.
உன் கூந்தலில் மல்லிகையாகும்
வரம் வேண்டாம்
நான் கேட்பது
உன் நிழலில் காலானாக
இருக்க அனுமதி மட்டுமே !
மேகமாய் என் வானில் வந்து
காதல் மழை தூவினாய்
வேர்கள் நனையாவிட்டாலும்
தாகம் அடங்கியதடி !
பின்னிய காதல் வலையில்
சிலந்திகளாய் - நாம்
பூச்சிகளாய் - நம் பெற்றோர் !
இறந்த பிறகு என்
கண்களை மூடிவிடாதீர்கள்
அவளை எப்போதும்
பார்த்துக்கொண்டிருக்கும்
வரம் வாங்கியுள்ளேன்.
கலைக்கப்படும் என்று தெரிந்தால்
குருவிகள் கூடு கட்டாது,
இடிக்கப்படும் என்று தெரிந்தால்
எறும்புகள் புற்றும் கட்டாது,
கேட்கப்படாது என்று தெரிந்தால்
குயில்கள் பாடாது,
வெட்டப்படும் என்று தெரிந்தால்
மரங்கள் வளராது,
ஏன்
உதிரும் என்று தெரிந்தால்
செடிகள் பூக்காது,
மறுக்கப்படும் என்று தெரிந்தும்
காதலித்தேனே
ஒரு வேளை நான் தான்
அஃறிணையோ ?
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 8:27 PM 2 கால்தடங்கள்
பிரம்மனின் தவறு
சிதறிய என் பேனா மை வானமாய்
உதறிய உன் தாவணி வானவில்லாய்
எப்போதுமே
உன்னால் தானடி நான் அழகாய்!!
"இதயம் சுக்குநூறாக உடையட்டும்!"
ஆண்டவன் சபித்தாலும் கவலையில்லை
எல்லாத்துண்டிலும் நீ தானே இருப்பாய்
என் ஆயுள் கூடத்தான் செய்யும்.
உன் நினைவுகளை சுவாசிக்கும்
முத்தங்களில் பசியாறும்
இந்த வாழ்க்கையே போதும் !
பிரம்மன் செய்த
முதல் தவறு நீ!
பெண் மயில் உன்னை
ஆண் மயிலை விட
அழகாய் படைத்து விட்டானே!
உன் சிரிப்பினால் எறிந்து
மீண்டும் உன் மடியில்
மறு ஜென்மம் எடுக்கும்
நானும் ஃபினிக்ஸ் தான்.
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12:05 PM 1 கால்தடங்கள்
வெள்ளி, ஜூன் 29, 2007
காதல் காலம் 4
ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.
மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.
"எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்." என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.
"அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி."
"கடிக்க வந்தா சும்மாவா விடுறது?"
"சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம். உன்னை ஒரு தடவை கடிக்க விடு அப்புறம் அது உடனே சக்கரை நோயில செத்துடும்."
"இங்க பாருடா யோசனை சொல்றாரு." சிரித்துக் கொண்டே நீ.
"யேய் போ! அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்ல." சொல்லியபடி வண்டைத் துரத்தினேன்.
"எதுக்காம்.....?"
"வண்டத் தொரத்தத் தான் வேற எதுக்கு?". மறுபடி முளைத்தது வெட்கம்.
"எப்படா என்னை காதலிக்க ஆரம்பிச்ச?"
"முத்து வந்த நேரம் சிப்பிக்கு,
முத்தம் வந்த நேரம் உதட்டுக்கு,
கவிதை வந்த நேரம் கவிஞனுக்கு,
காதல் வந்த நேரம் எனக்கும்,
எப்படித் தெரியும்?"
"அப்பா! எப்பவுமே பேசிக்கிட்டே தான் இருப்பியா? வாய் வலிக்காதா உனக்கு?"
"நீ கண்ணால பண்றத நான் வாயால பண்றேன். உனக்கு கண்ணு வலிக்குதா என்ன?"
அப்போது கூட்டில் இருந்து தவறி வெளியே விழுந்த ஒரு கிளிப் பேடையை கையில் எடுத்தாய்.
"அய்யோ தெரியாம வெளியே விழுந்துட்டியா நீ?" என்றவாறே முத்தமிட்டாய் அதை. கூச்சத்தில் மூக்கு சிவந்தது அதற்கு.
"தெரியாமல் எல்லாம் இல்லை நீ கையில எடுப்பனு தெரிஞ்சேதான் விழுந்திருக்கும். இப்போ முத்தம் வேற குடுத்துட்டியா மீதி குஞ்சிகளும் பின்னாலயே கூட்ட விட்டு குதிக்கப் போது பாரு."
"எவ்ளோ அழகா இருக்கு பாறேன். இத வீட்டுக்கு கொண்டு போட்டா?"
"வேண்டாம்மா. நீ வீட்டுக்கு கொண்டு போக அது உன்னைப் பாத்து அம்மானும் நான் அந்த பக்கம் வந்தா அப்பானும் கூப்பிட்டுச்சுன்னா வம்பாயிடும்."
"சீ!"
ஒற்றை சிணுங்கலுக்கு ஒரு கோடி அர்த்தங்கள். இந்த முறை கொஞ்சம் அதிகம் வெட்கப்பட்டு விட்டாய் போலும், தோப்பில் உள்ள எல்லா மாமரங்களுமே பழுத்து விட்டன. மாம்பழம் பழுத்து பார்த்த கிளிகள் மாமரங்களே பழுத்ததால் அவசரக் கூட்டம் போட்டு நம்மை வாழ்த்தின.
காதல் காலம் பாகம் 5
காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:46 2 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
வியாழன், ஜூன் 28, 2007
காதல் காலம் 3
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.
அந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இறக்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.
நீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி. அவ்வளவு சுலபமாக நுழைந்து விடமுடியுமா? ஏமாற்றத்துடன் என்னை திட்டிக்கொண்டே திரும்பியது. கனவுகளோடு உறவாடிக் கொண்டே காலத்தை கழித்தேன். உச்சாணிக்கொம்பில் ஏறிய சிறுவன் இறங்க சிரமப்படுவது போல காதலை சிரிப்போடு வரவேற்ற நான் அதை சுமக்கும் சுமைத்தாங்கியாய் இறக்கி வைக்கமுடியாமல் தவித்தேன்.
சில கேள்விகளுக்கு விடை இருப்பதில்லை,
பல வார்த்தைகள் சொல்லப்படுவதில்லை,
சில வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை,
பல கனவுகளுக்கு உயிர் கிடைப்பதில்லை,
சில கனவுகள் உயிரோடு புதைபடுகின்றன.....
இவை தான் வாழ்க்கை என்றால்
என் காதல் விதிவிலக்காகட்டும்!!"
எறும்பு சேகரித்த சர்க்கரையாய் இந்த 6 மாதங்களாக நான் சேர்த்த காதலும், தைரியத்தையும் துணைக்கு கூட்டிக்கொண்டு வந்து உன்னிடம் என் காதலை சொன்னேன். நீ திருப்பித்தந்தது ஒரு கோவப்பார்வை. முத்தம் கொடுக்கும் என்று நினைத்தக் குழந்தை கன்னத்தைக் கடித்தால் எப்படிக் கோவப்படுவது? உன்னிடம் இருந்து வந்த பார்வையே என் மன பாரத்தை இறக்கி வைக்க ஆனந்தக்கடலில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்தேனா? "நீ அருகில் இருந்தால் கடல் கூட கைக்குள் அடக்கம் தானே?" நின்று கொண்டு தான் இருந்தேன்.
காதல் காலம் பாகம் 4
காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 3:52 PM 0 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
புதன், ஜூன் 27, 2007
காதல் காலம் 2
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....
இது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.
கண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.
"தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி?" என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.
"ஏன் இந்த வண்ணம்?" கேட்டேன் அவனிடம்.
"குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா? நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்!" என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.
கடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும்?. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. "இது கலையாமலே இருக்கக் கூடாதா?" ஏங்கியது மனது. ஆனால் புத்தி, "பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே! நிஜம் அல்ல இது." எனக்கடிந்து கொண்டது. விடியலுக்காத் தவம் இருக்க ஆரம்பித்தேன். சூரியனும் என் போல் தானோ? உடனே விழித்துக்கொண்டான் உன்னைக் காண. வழக்கத்துக்கு மாறாக சிரிப்போடு எழுந்தேன்.
வெகு நாட்கள் கழித்து தலை சீவிக் கிளம்பினேன் பள்ளிக்கு. வெளியில் ஏதும் காட்டிக்கொள்ளாமல் உன் வருகைக்காக நானும் புதிதாய் பிறந்த(பூத்த) என் காதலும் காத்திருந்தோம். நீ வரும் வரை உறைந்து போயிருந்த காலம் வந்தவுடன் கரையத் தொடங்கியது. ஒரு சின்ன புன்னகையை எனக்கு வீசிவிட்டு அமர்ந்தாய் உன் இருக்கையிலும் என் இதயத்திலும். பசலையின் முதல் கட்டமாக நோட்டில்
" இனி
பொங்கலில் மட்டும் அல்ல,
தினமும்
'மஞ்சு' விரட்டு தான்.." கிறுக்கின கைகள்.
பிறந்த முதல் கவிதை மறைக்கப்பட்டது என் காதலைப் போலவே.
ஒரே நாளில் இத்தனை மாற்றங்களா?. கண்களுக்கு நீ மட்டுமே தெரிகிறாய். என் உலகம் மாறத்தொடங்கியது. நீயே என் பள்ளியாய், உன் கழுத்தோர மச்சம் கரும்பலகையாய்.
இனிதே ஆரம்பம் ஆனது காதல் பாடம்..
காதல் காலம் பாகம் 3
காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 11:49 2 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
செவ்வாய், ஜூன் 26, 2007
காதல் காலம் 1
இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..
அழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. "டேய் சிவா! எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு". இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் "அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா" அம்மா சொன்னதும் "ம்" என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.
வழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், "எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்?" என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி. என் உலகம் மீண்டும் என் கண் முன்னால். ஐந்து வருடங்கள் முன் நான் ரசித்து பார்த்த அதே மஞ்சுளா.
அதிக மாற்றம் இல்லை அவளிடம். தோள் மேல் ஒரு கவிதையோடு வந்திருந்தாள். வேண்டாம்! உன் கண்ணீரால் அந்த கிளியின் தூக்கத்தை கலைக்காதே. என்னை போல் மனதுக்குள்ளேயே அழுது விடு. குழந்தையாய் இருக்கும் போதே தூங்கினால் தான் உண்டு. மனக்குளத்தின் அடியில் நிலா பிம்பம் போல இருந்த உன் முகம் மெல்ல மேலே மிதந்து வந்தது. சுடும் என்று தெரிந்திருந்தும் மெழுகுவர்த்தியில் கை வைக்கும் சிறுவன் போல அங்கேயே இருக்க துடித்தது மனது. உன்னை கஷ்டப்படுத்தாமலே பழகிப்போன நான் இப்பொழுதும் என் மனதை சிலுவையில் அறைந்து விட்டு வெளியேறினேன். அன்றைய நாள் மேலும் சுமையானது.
"ஏன்பா பேங்குக்கு போகலையா? ரொம்ப வேலையா?" சாப்பிடும் போது கேட்டாள் அம்மா. "மறந்துட்டேன் மா" என்று வழக்கம் பொய் சொன்னேன். பொய்கள் தான் தற்போது என் நண்பன். "தீமையிலாத சொலல்" என்ற வள்ளுவனின் மொழி வேத வாக்கு. "ஏன்டா கல்யாணம் வேணாம்குற? இப்பவே 27 வயசு ஆச்சு" தொடர்ந்தாள். சிறு வயதில் 5+2 என்ன என்று உனக்கு தெரிந்து இருந்தும் என்னிடம் கேட்டாயே அதே ஜாதியைச்சேர்ந்த கேள்வி தானே இது? பதில் தெரிந்து கொண்டே என்னிடம் கேட்ட உன்னைப்பார்த்து சிரிக்க முயன்று தோற்று போய் கை கழுவினேன்.
உள்ளே சென்று அறையை தாழிட்டு மனதை திறந்தேன். முனகிக்கொண்டிருந்த சிறுவன் கதறி அழத்தொடங்கினான். அழுவதற்கு கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது இந்த வாழ்க்கையில்.என்னை நொந்து கொண்டே படுக்கையின் மேல் நான். கண் முன்னே 10 வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் நிழல்களாக என்னைப்பார்த்து சிரிக்கத்தொடங்கின.
12-A . முதல் நாள் வகுப்பு. வேறொரு பள்ளியில் இருந்து வந்த நீ என் முன் பென்சில் அமர்ந்தாய். ஏதோ உன்னிடம் பேசி விட வேண்டும் என்று என் பேனாவுக்கு ஜன்னல் வழியே விடுதலை தந்தேன் நான், பின்னொரு நாளில் உன்னிடம் கைதாவபோவது தெரியாமல். "கொஞ்சம் பேனா தாங்களேன்" அன்று நான் சொன்ன அதே வார்த்தைகள் இன்று உன் உதட்டில் இருந்து. "வரலாறு மறுமுறை தொடருமாமே?". போதும்! இன்னொறு முறை தோற்க என்னிடம் தெம்பு இல்லையடி. வகுப்பில் இருந்த எல்லோரும் உன் மேல் கண்டதும் காதலில் விழ எனக்கு மட்டும் ஒரு நாள் ஆனது. அன்று இதே போல் என் படுக்கையில் உன் நினைவில் நான்........
காதல் காலம் பாகம் 2
காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
- ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 1:49 PM 2 கால்தடங்கள்
வகை: தொடர் கதை
திங்கள், ஜூன் 25, 2007
முதல் காதலி
நான் பார்த்த முதல் முள் இல்லாத ரோஜா அவள்
இல்லை
ரோஜா கூட வாடி விடுமாமே!
பிறகெப்படி கூற?
தேவதை....?
ஆம் தேவதை!
இறக்கைகள் இல்லாத தேவதை
எனக்கு காதல் கற்றுத்தந்த தேவதை.
வெற்றிக்கு தோள்
தோல்விக்கு மடி தந்தவள்
உன் மடிக்காகவே தோற்றேன் அப்போது....
உதவும் அக்கறை கூட இல்லாமல்
உதவாக்கரை என்று என்னை சொன்ன இந்த உலகம்
உன் ஒற்றை ஆறுதலுக்கு முன் தோற்குமடி.
எனக்காகவே தவம் இருந்த நீ
கேட்டாய் ஒரு வரம்
நீ கேட்டு மறுப்பேனா?
விட்டுத்தந்தேன் என்
இரண்டாம் காதலை!
இப்போதோ எப்போதும்
என் நினைவாகவே நீ!
அவள் நினைவாகவே நான்!
உனக்காகவே வாழும் மகன்
-ஸ்ரீ
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 6:41 PM 6 கால்தடங்கள்
வகை: கவிதை