காதல் காலம் 2

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.

கண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.
"தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி?" என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.
"ஏன் இந்த வண்ணம்?" கேட்டேன் அவனிடம்.
"குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா? நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்!" என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.
கடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும்?. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. "இது கலையாமலே இருக்கக் கூடாதா?" ஏங்கியது மனது. ஆனால் புத்தி, "பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே! நிஜம் அல்ல இது." எனக்கடிந்து கொண்டது. விடியலுக்காத் தவம் இருக்க ஆரம்பித்தேன். சூரியனும் என் போல் தானோ? உடனே விழித்துக்கொண்டான் உன்னைக் காண. வழக்கத்துக்கு மாறாக சிரிப்போடு எழுந்தேன்.

வெகு நாட்கள் கழித்து தலை சீவிக் கிளம்பினேன் பள்ளிக்கு. வெளியில் ஏதும் காட்டிக்கொள்ளாமல் உன் வருகைக்காக நானும் புதிதாய் பிறந்த(பூத்த) என் காதலும் காத்திருந்தோம். நீ வரும் வரை உறைந்து போயிருந்த காலம் வந்தவுடன் கரையத் தொடங்கியது. ஒரு சின்ன புன்னகையை எனக்கு வீசிவிட்டு அமர்ந்தாய் உன் இருக்கையிலும் என் இதயத்திலும். பசலையின் முதல் கட்டமாக நோட்டில்

" இனி
பொங்க‌லில் மட்டும் அல்ல,
தினமும்
'மஞ்சு' விரட்டு தான்.." கிறுக்கின கைகள்.

பிறந்த முதல் கவிதை மறைக்கப்பட்டது என் காதலைப் போலவே.

ஒரே நாளில் இத்தனை மாற்றங்களா?. கண்களுக்கு நீ மட்டுமே தெரிகிறாய். என் உலகம் மாறத்தொடங்கியது. நீயே என் பள்ளியாய், உன் கழுத்தோர மச்சம் கரும்பலகையாய்.

இனிதே ஆரம்பம் ஆனது காதல் பாடம்..

காதல் காலம்‍‍‍ பாகம் 3

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

2 கால்தடங்கள்:

King Vishy said...

yappa.. how do u manage humor and senti stuff so comfortably?? Each line in this post was lovely..

ஸ்ரீ said...

//King Vishy said...

yappa.. how do u manage humor and senti stuff so comfortably?? Each line in this post was lovely..
//

வாங்க விஷி,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. :)