காதல் காலம் நிறைவுப்பகுதி

நண்பர்களே! புதிய இணையதளம் ஒன்று துவங்க உள்ளதால் இந்த வலைப்பூவில் ஆரம்பித்த இந்த தொடர்கதையை இதிலேயே முடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.

காதல் காலம் -1

தேவதை வாக்கு பலிக்குமா? நீ சொன்னது போலே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அப்படி சொல்வதை விட நான் சேர்ந்த கல்லூரியில் நீயும் அதிக மதிப்பெண் எடுத்தாலும் வந்து சேர்ந்தாய். நம் ஊருக்கு அருகிருப்பதால் உன் அப்பா சம்மதிக்க. நம் காதலை கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு சென்றோம் இருவரும். கல்லூரிக்கு ரயில் பயணம். அவசரத்தில் ஓடி வரும் உனக்காக நான் காத்திருந்தாலும் ரயில் காத்திருக்காத அந்நாட்களில் பேருந்தில் சேர்ந்து பயணித்தோம். பயணத்தில் பின்நோக்கி ஓடும் மரங்கள், உன்னை நோக்கி ஓடும் மனம். தினம் சன்னலோர இருக்கைக்காக சண்டை போடுவாய். ஊடலில்லாமல் காதலா? உன்னோடு சண்டையிட்டு வேண்டுமென்றே தோற்று உன் அருகில் அமர்வேன். வென்ற பரவசத்தில் உன் கண்களில் சின்ன மின்னல்கள் மின்னி மறையும். எனக்கு ரயிலோடு பயணங்கள் இல்லை அந்த நாட்கள், ஒரு மயிலோடு பயணம்.

தினம் உன்னோடு வரும் போது தேரை வடம் பிடித்திழுக்கும் பக்தன் போல பெருமிதம். வகுப்புகளில் மனம் முழுக்க உன் நினைவுகள், ஏடுகள் முழுக்க உன்னை பற்றிய கிறுக்கல்கள். காற்றில் படபடக்கும் புத்தகதாள்களாக கடைசி மணி அடிக்க ஏங்கிக்கிடக்கும் மனம். உன் கோவம், அழகு, சிரிப்பு இவைகளில் தொலைந்து போனதடி அந்த நாட்கள். பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவனாக உன்னை விட்டு அகலாத கண்களோடு சுற்றி வந்தவனாக நான். விளையாட்டாய் ஓடின 4 வருடங்கள் கல்லூரியில். வேலைக்கிடைக்காமல் நான் மனமுடைந்த வேளை. உன் வீட்டில் உனக்காக வரன் தேட, இருவரும் காதலை வீட்டில் சொன்னோம். அடுத்த நாள் வாடிய முகத்தோடு வந்து,

"அப்பா ஒத்துக்க மட்டேங்குறார். நாங்க வேற ஊருக்கு போறோம்." என்று சொல்லிச் சென்றவளை இப்போது தான் பார்க்கிறேன். அன்று பேசமுடியாமல் வாயடைத்து போனவன் தான் இன்று வரை பேச வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்.

"சிவா! டேய் சிவா!" அம்மா கதவு தட்டும் சத்தம். கண்களை துடைத்துக் கொண்டே ஏதும் நடக்காதவன் போல கதவு திறந்தேன்.

"என்ன? இன்னும் 6 மணி கூட ஆகலை அதுக்குள்ள ஏன் எழுப்பின?"

"சிவா! இப்போ தான் டா மஞ்சுளா அம்மா கிட்ட இருந்து போன் வந்தது."

"என்ன?" அதிர்ச்சியில் உரைந்தேன்.

"சீக்கிரம் கிளம்புடா."

"என்னம்மா சொல்ற? ஒன்னும் புரியலை."

ஐ.சி.யூ வெளியே உன் பெற்றோர். உன் அப்பா எங்கள் வரவைப்பார்த்து முகம் திருப்பிக் கொண்டு வெளியேற உள் நுழைந்தேன்.

"அவளுக்கு செவ்வாய் தோஷம் அதான் கல்யாணம் பண்ணி வைக்க முடியாமப்போச்சு. அதை அவளும் புரிஞ்சிக்கிட்ட உடனே தான் நாங்க ஊரை விட்டு கிளம்பினோம். அவ வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. நேத்து உங்க பையனை பேங்கில பாத்ததா சொன்னாள். அவள் அண்ணன் குழந்தையோட வந்ததை சிவா தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பார்னு ராத்திரியெல்லாம் புலம்பினாள். காலையில எழுப்பப்போனா இப்படி மாத்திரை சாப்பிட்டுட்டு நினைவில்லாம கிடக்குறா." என் அம்மாவிடம் அழுதபடியே உன் அம்மா.

"மஞ்சு..." குரல் தழுதழுக்க கூப்பிட்டேன்.

மெல்ல கண்களைத் திறந்தவள். ஒரு கண்ணீர்த் துளியை பதிலாகத் தந்தாய். மெளனம் மட்டுமே பேசத்தொடங்கியது. எதையோ தேடிய உன் கண்கள் மெதுவாக மூட.

"மஞ்சு... மஞ்சு..." மெல்ல என் குரல் தேய்ந்தது. காதலுக்கு புரியும் அந்த மொழி காலனுக்கு புரியுமா? வெகு நேரம் சத்தம் கேட்காமல் உள்ளே வரும் எல்லோரும் நம் பிணங்களைத் தான் பார்ப்பார்கள்.

"உன்
இமைப்புகளின் எதிரொலியே
என்
இதயத்துடிப்புகள்."


தொலைவில் எங்கோ கேட்கிறது ஒரு பாடல்

"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே........"

(பாடல் கேட்க‌)


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

உங்கள் கருத்துக்களை இந்த பதிவுக்கு கண்டிப்பாக விட்டுச்செல்லுங்கள். அவை என் அடுத்த கதைக்கு உதவும்.

நன்றி!!

6 கால்தடங்கள்:

code generator said...

உங்களுடைய காதல் காலம் கதை படிச்சேன் மிகவும் அருமை.இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம், குறுகிய காலத்தில் முடித்துவிட்டீர்கள். சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது. உங்களது அனுபவம் என்ன....? -அமைதிப்ரியன்
www.amaithipriyan.blogspot.com

ஸ்ரீ said...

//இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்,குறுகிய காலத்தில் முடித்துவிட்டீர்கள்.//

20 பாகம் எழுதவேண்டும் என தான் நினைத்தேன் ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய் விட்டது.

//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//

உண்மை தான் அமைதிப்பிரியன். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. ஆனால் என் மாற்றங்கள் அழகானவை.

அடுத்த கதை திங்கள்கிழமை தொடங்க உள்ளேன். கவலை வேண்டாம் 2 பகுதிகள் தான் மொத்தக்கதையும் :)

Gajani said...

//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//

ச.பிரேம்குமார் said...

அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு!!! வாழ்த்துக்கள் , முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும் ;)

//கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.//

உள்குத்து எல்லாம் நல்லாதான்யா வைக்கிறாங்க‌

ஸ்ரீ said...

என்ன KT இதுலயும் பிட் அடிச்சிட்டீங்க???? :)

//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//

அனுப‌வம் தானே வாழ்க்கை!!!!

ஸ்ரீ said...

//அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு!!!//

என்னய்யா கொஞ்சம் சந்தோஷப்படுறா மாதிரி இருக்கு??? :) காதலுக்கு ஏதுங்க முடிவு? மறுபடியும் தொடங்க வேண்டியது தான் இன்னொரு கதையை :)

//முடிவில் எனக்கு உடன்பாடில்லை//

முடிவில் உடன்பாடில்லையா???? சரி அடுத்த கதையில் பார்த்துக்கொள்வோம்.

அப்போ கடைசியா எழுதின கவிதை வீணாகிடுமே ப்ரேம் :((((

//உள்குத்து எல்லாம் நல்லாதான்யா வைக்கிறாங்க//

உள்குத்தா அய்யா ராசா மெய்யாலுமே கதையில் மாற்றம் இல்லைங்கப்பா.

BTW what is meant by உள்குத்து?