இதுவும் காதல்

"மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க." அம்மா

செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து

சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.

"எப்படி படிச்சிருக்க?" மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.

"என்ன ஆச்சு?"

"என்னை பொண்ணு பாக்க வராங்க."

12 வகுப்பு பொது தேர்வு. குழப்பத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்.

"சரி அதெல்லாம் கொஞ்சம் நேரம் மறந்திடு இப்போ போய் ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு வா."

"முடியாது என் அண்ணன் பரிட்சைக்கு அப்புறம் வெளியிலேயே நிப்பான். வேற வழியே இல்லை." பேசிக்கொண்டே அழத்தொடங்கினாள்.

"சரி இப்போ என்ன தான் பண்ணனும் சொல்லு."

"கல்யாணம்"

"எப்போ?"

"இப்போ உடனே."

"விளையாடுறியா?"

"இது நடந்து ஆகணும் இல்லை இன்னைக்கே செத்துடுவேன்." வழக்கம் போல தன் பிடிவாதத்தில் இருந்து விலகாமல் பேசினாள் மஞ்சுளா. அவள்

குணம் அது. ஒரு விஷயம் முடிவு செய்து விட்டால் மாறமாட்டாள்.

"பைத்தியமா உனக்கு?"

"ஆமாம். பதில் சொல்லு முடியுமா? முடியாதா?"

இருந்த 10 நிமிட அவகாசத்தில் முடிவெடுத்தார்கள். நேரே கோயிலுக்கு போய் கல்யாணம் செய்து வீடு திரும்பினார்கள். ராமநாதன் ஏதோ

யோசனையில் ஆழ்ந்திருந்தார். முகத்தில் இறுக்கம்.

"அப்பா!"

"என்ன டா சிவா! பரிட்சை எப்படி எழுதின?" உயிர் இல்லாத குரலில் கேட்டுவிட்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

"அது வந்து...." நடந்ததை அப்படியே அவரிடம் சொன்னான்.

வெளியில் வந்து மஞ்சுளாவைப் பார்த்து, "பரந்தாமன் மகளா நீ? ஏற்கனவே எங்களுக்கு ஆகாது. இவனை தாய் இல்லாத பையனாச்சேனு செல்லம்

குடுத்து வளத்தது என் தப்பு தான் மா. போங்க என்ன ஆகப்போகுதோ! பெத்த பாவத்துக்காக அவனுக்கும் அவனை நம்பி வந்த பாவத்துக்காக

உனக்கும் சோத்தப்போடுறேன்."

மஞ்சுளா வீட்டார் விஷயமறிந்து சிவா வீட்டு வாசலில்....

"யோவ் புள்ளையா வளத்து வெச்சிருக்க?...................................."

அரை மணி நேரம் கழித்து ஆத்திரம் அடங்க, "அவ என் பொண்ணே இல்லையா. எப்படியோ ஒழிஞ்சிபோகட்டும்" கடைசியாக மஞ்சுளா அப்பா

வயிரெரிய கத்தி விட்டு போனார்.

இரவு சாப்பாடின் போது "இப்போ சந்தோஷமா உங்களுக்கு?" கேட்டுவிட்டு படுக்கப் போனார் ராமநாதன்.

பின் சென்ற சிவா "அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா...." அவ்வளவு நேரம் அடக்கிவைத்த அழுகை உடைந்து ஊற்றியது.

"போடா போ உன் மாமன் சொத்த கேட்டு கேஸ் போட்டிருக்கான் இன்னிக்கு. சொந்தத்தால பணக்கஷ்டம் புள்ளையான மனக்கஷ்டம் அவ்ளோ

தான் டா."

"என்னப்பா சொல்ற?"

முன்பு ஒரு நாள் போதையில் சொத்தை சிவா மாமன் எழுதி வாங்கியதை சொல்லி முடித்து அப்படியே தூங்கிப்போனார் ராமநாதன்.

வாழ்க்கை நடுவில் சிக்கிக்கொள்ள தன் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிப்போக வேண்டுமென்றால் கூட தன் தந்தையிடம் கையேந்தும்

நிலையில் சிவா. விரக்தியான முகத்தோடு இல்லையென சொல்லாத ராமநாதன். மாதம் உருண்டோட வழக்கில் தோற்று வீடு திரும்பிய ராமநாதன்

தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. சொந்தம் ஏமாற்ற வேறொரு ஊரில் கையில் பத்து ரூபாய் பணத்தோடு வீதியில் காதல் நின்று

கொண்டிருக்கின்றது.

"பசிக்குது டா...."

"ம். வா போலாம். கையேந்திபவன் இருக்கு சாப்பிடலாம்."

"பாட்டி, இட்லி எவ்ளோ பாட்டி?"

"ரெண்டு 5 ரூபா பா."

"நாலு குடு பாட்டி."

பசியில் அந்த இட்லியை அவசரமாக வாங்கினாள் மஞ்சுளா.

"மஞ்சு கொஞ்சம் திரும்பிக்கோயேன்."

"ஏன்?"

"இல்லை ரொம்ப பசி நான் சாப்பிடுறத பாத்தா நல்லா இருக்காது."

ஏதும் யோசிக்க பசி அனுமதிக்காமல் திரும்பிக்கொண்டாள். சிவா இலையில் இருந்த இட்லியை மீண்டும் பாட்டியின் தட்டில் போட்டான்.

திரும்பிய மஞ்சு, "என்னதான் பசியா இருந்தாலும் இப்படியா சாப்பிடுவ?" அப்பாவியாக கேட்டாள்.

"இன்னும் 2 வாங்கிக்கோ" சொல்லிக்கொண்டே தான் திருப்பி வைத்த இட்லிகளை அவளுக்கு வைத்து தண்ணீர் குடித்தான்.

"ஏய் காசு?"

"ம் இருக்கு 15 ரூபா வெச்சிருந்தேன் நீ சாப்பிடு."

இது பார்த்த பாட்டி விவரம் கேட்க எல்லா கதையும் சொன்னார்கள்.

"என் புள்ள வருவான் நான் உனக்கு ஏதாவது வேலை வாங்கி தர சொல்றேன்யா." அவள் சொன்ன பிறகு தான் இருவருக்கும் உயிர் வந்தது.


"என்ன தெரியும் தம்பி உனக்கு?" நல்ல ஆஜானுபாகுவான பாட்டியின் மகன் ஜோசப் கேட்டான்.

"அண்ணா ஒன்னும் தெரியாதுண்ணா ஆனா என்ன சொன்னாலும் செய்யறேண்ணா."

"கார் ஓட்டுவியா?"

"ம் சுமாரா ஓட்டுவேண்ணா."

"சரி நாளைக்கு காலைல இதைப்பத்தி பேசலாம் போய் தூங்கு."

நடுக்கடலில் தத்தளித்த கைகளுக்கு ஏதோ கட்டை சிக்கியது போல உணர்ந்தார்கள். நல்ல தூக்கம் வெகுநாட்கள் கழித்து.

"தல நான் சொல்லலை தம்பிக்கு தான் வேலை. காரு ஓட்டுவாப்புள" தன் தலைவனிடம் சிவாவைச் சேர்த்து விட்டு தன் வேலை முடிந்ததாக

நினைத்து ஜோசப் கிளம்பினான்.

"அவர் கூட போய் என்ன ஏதுன்னு பாத்து தெரிஞ்சிக்கோ போ". ஆதி அந்த ஊர் கட்டப்பஞ்சாயத்து தாதா.

அன்றிலிருந்து அழகான வாழ்க்கை ஆரம்பம். ஆனால் ஏனோ மஞ்சுவுக்கு அதில் நாட்டம் இல்லை எப்பவுமே ஏதோ இழந்தது போல தோன்றியது

அவளுக்கு. மூன்றாவது ஜீவன் அடியெடுத்து வைத்தது அவர்கள் வாழ்வில்.

"டேய் சிவா இவனை நல்லா வளத்து காட்டணும் டா."

"கண்டிப்பா ஆனா ஏன் எப்பவுமே சோகமாவே இருக்க?"

"ஒன்னும் இல்லை சொன்னா கோச்சிக்க மாட்டியே!"

"சொல்லு. உன்னை எப்போ நான் கோச்சிக்கிட்டு இருக்கேன்?"

"பக்கத்து வீட்டு பொம்பளை கூட என்னை அடியாள் பொண்டாட்டியா தான் பாக்குறா. பேச கூட மாட்டேங்குறா. இந்த வேலை வேண்டாம் டா."

"ரோட்டுல நிக்கும் போது அவன் தான் சோறு போட்டான்." ஊருக்கே கேட்கும் படி கத்தி விட்டு வெளியேறினான்.

அன்று நடந்த சண்டையில் கால் வெட்டப்பட்டு பாதி உயிரோடு தான் திரும்ப வந்தான் சிவா. அழுகைக்கு பஞ்சமில்லை. தன் நிலையை நினைத்து

இருவரும் அழுதனர் இன்னொருவருக்கு தெரியாமல். மஞ்சுளா பாரத்தை சுமக்க முடிவெடுத்து வெளியேறினாள்.

"சிவா எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு டா இனிமே கஷ்டம் இல்லை நீ கவலைப்படாதே" ஆறுதல் கூறி அவனை அன்றிலிருந்து

தூங்க வைத்தாள்.

"என்ன சிவா எப்டி இருக்க?" ஜோசப் மாதங்கள் கழித்து நலம் விசாரிக்க வந்தான்.

"இப்போ தான் நியாபகம் வந்துச்சா? என் பொண்டாடி அப்பவே சொன்னா இதெல்லாம் வேணாம்னு. நான் தான் உங்களுக்கு சிபாரிசா பேசுனேன்.

எனக்கு இதெல்லாம் தேவை தான்."

"அது வந்து சிவா......"

"என்ன இன்னும் ஏதாவது வேலையாகணுமா? என்னால ஒன்னும் முடியாதுப்பா என்னை பாத்துக்கவே ஒரு ஆள் வேணும். நீங்க கிளம்புங்க."

"இல்லை சிவா நம்ம மஞ்சு..."

இரவு வீடு திரும்பிய மஞ்சுளா குழந்தை அழ அவசரமாக உள்ளே ஓடி வந்தாள்.

"என்ன ஆச்சு குழந்தை அழுவுது நீ சும்மா தூங்கிட்டு இருக்க."

"ம் அதுவாவது தன் சோகத்தை அழுது காட்டுது."

"என்ன ஆச்சு உனக்கு?"

"எப்படி இருக்கு வேலை பரவாயில்லையா?"

"ம் ஏதோ போது."

"எத்தனை பேரு இன்னிக்கு?"

"என்ன கேட்ட?"

"அதான் பாக்குறியே ஒரு வேலை அதுல தான் எத்தனை பேரு வந்தாங்கன்னு கேட்டேன்."

சிவாவின் முகம் பார்க்க முடியாமல் மஞ்சுளா கட்டிலில் திரும்பி அழ ஆரம்பித்தாள்.

"ஏன் உனக்கு வேற ஏதும் தோணலையா? இப்படித்தான் போகணுமா?"

"ஆமாம் நான் என்ன என் சந்தோஷத்துக்கா போனேன்? அடியாள் பொண்டாட்டின்னு வீட்டு வேலைக்கு கூட சேத்துக்கலை. கம்பனியில கூட இதே

தொல்லை தான் டா. ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் நம்ம குழந்தை நான் என்ன செய்வேன் டா. இது தப்பா தெரியலாம் ஆனா யோசிச்சு

பாத்தா எனக்கு இது தப்பா தெரியலை. இந்த ஊருக்கு வந்தப்ப நீ சாப்பிடாம குடுத்த இட்லி மாதிரி தான் டா இதுவும். டேய் சிவா இது வெறும்

உடம்பு டா. மத்தவன் கூட போனா நான் கெட்டவள் ஆக மாட்டேன் அவனுக்கு அரை மணி நேரம் நான் தேவை அவ்ளோ தான் ஆனா அதுக்கு

மேல நான் அவனுக்கு ஒன்னும் பண்ணமாட்டேன். அதுவே உனக்கு ஒன்னுன்னா யோசிக்காம கூட உயிர குடுப்பேன் டா அதான் காதல். நான்

உன்னை காதலிக்குறேன் டா." கட்டிப்பிடித்து அழுதாள் மஞ்சுளா.

(முற்றும்)


{பாட்டம் லைன்:
==========
குழந்தைகாக பட்டினியாய் படுத்து, புருஷனுக்காக இன்னொருத்தனோடு கட்டிலில் படுக்கும் இவளும் பத்தினி தான். இதுவும் காதல் தான்.

காதல் இல்லை உண்மையான காதல்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதானது...... }


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.


(நண்பர்களே! இது என்னுடைய முடிவு தான் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.)

11 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

நண்பா...

இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை..பசி தீர்க்க உடல் விலை பேசுவது ஒன்று தான் தீர்வில்லை..அதுவும் உடன்போக்கில் ஈடுபட்டவர்களுக்கு இது தீர்வும் அல்ல! இது ஒரு சினிமாத்தனமான கற்ப்பனைக் கதை !

ஸ்ரீ said...

வாங்க விக்ரமதித்தன்,

நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா காணும் உங்களை. தற்கொலைகள் முட்டாள் தனம் என ஒப்புக்கொள்கிறீர்களா? அது ஒரு நொடியில் நடந்து விடும் ஒரு நிகழ்வு. அது போல் தான் வாழ்க்கையில் சில விஷயங்கள் விபரீதமாக நடக்கலாம். இதோடு அவர்கள் வாழக்கை முடிந்து விடவில்லையே நண்பரே! உண்மை தான் நாம் நினைத்துப்பார்க்காத ஒன்று நடந்து விட்டால் அதை சினிமாத்தனம் என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் இது போல நிறைய நடக்கின்றன நமக்குத் தெரியாமல். கருத்துக்கு நன்றி.

விக்ரமாதித்தன்...! said...

ஸ்ரீ..

நான் கூறியது.. விபச்சாரம் ஒன்று தான் முடிவில்லை என்பது.. நம் ஊரில் நடப்பதை நான் அறியாததுமில்லை.. வாரம் தோறும் தவறாமல் நக்கீரன் படிக்க்த் தவறவில்லை..நம் ஊர் அவலங்கலை..

தொடரட்டும் உங்கள் கதைப் பணி !

ஸ்ரீ said...

நானும் ஒப்புக்கொள்கிறேன் விக்ரமா. நான் அவள் விபச்சாரியாகத் தான் வாழந்து முடியப்போகிறாள் என்று சொல்லவில்லையே. இது ஒரு நிகழ்வு அவ்வளவு தான். மாற்றம் தான் மாற்றம் இல்லாததாயிற்றே. காலம் மாறும்.

Divya said...

எழுமையான , அருமையான எழுத்து நடை , பாராட்டுக்கள்.

கதையின் முடிவு ஒரு கற்பனை என்று நீங்கள் முடித்திருந்தால் கூட பரவாயில்லை, அதெப்படீங்க வறுமையினால் உடலை விற்று பிழைப்பதை 'காதல்' என்று முடித்திருக்கிறீர்கள், இந்த கருத்து ஒப்புக்கொள்ள் முடியாது.

இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கலாம், அதற்காக அது ஞாயம் என்று வாதிடுவது அபத்தமானது

உங்கள் கதையில்...
காதலுக்கும் , காமத்திற்க்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வயதில் , தென் பெற்றோரை எதிர்த்து ஒரு சிறு பெண் எடுத்த பிடிவாதமான் முடிவால் அவளுக்கும் அவள் காதலன்/கணவன் இருவருக்கும் ஏற்பட்ட அவலநிலையும்,...

காதலியின் பிடிவாதத்தை எதிர்க்க முடியாது, தான் படித்து முடித்து, சமபாதிக்கும் நிலைக்கும் வருவதற்கு முன்பாகவே அவசரக் கல்யாணம் செய்து, பின் அடியாள் ஆக உருமாறும் ஒரு சிறுவனின் பரிதாப நிலை தான் தெரிகிறது.....

இத்தகை முடிவுகளினால் ஏற்படும் விளைவுகள் இவை என்று நீங்கள் பாட்டம் லைன் போட்டிருந்தால், கைத்தட்டி பாராட்டியிருப்பேன்!

ஸ்ரீ said...

கருத்துக்கு நன்றி திவ்யா!!!!

உங்கள் வாதம் ஒப்புக்கொள்ளலாம் திவ்யா. ஆனால் எனக்குள் ஒரு கேள்வி. ஒரு காதலில் உயிர் இழந்தால் அது உண்மையான காதல் என சொல்லப்படுகிறது. ஆனால் வெறும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? அந்த கேள்விக்கு விடை தேடினாலும் பதில் இல்லை. ஒரு வேளை காதலி கற்பழிக்கப்பட்டால் அவளை மணம் புரிய எத்தனை காதலர்கள் இருக்கிறார்கள்? எனக்குள் இருந்த சில கெள்விகளே இந்த கதை. நேரம் இல்லாததால் சில விளக்கம் கொடுக்க இயலவில்லை. இது என் முடிவு தான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

aruna said...

காதல் சரியா தப்பா ,காதலினல் கஷ்டம்தானா?இன்னும் எத்தனையோ விடை தெரியாத கேள்விகளும்,கதைகளும்......தொடர்கின்றன.
அருணா

ஸ்ரீ said...

//aruna said...

காதல் சரியா தப்பா ,காதலினல் கஷ்டம்தானா?இன்னும் எத்தனையோ விடை தெரியாத கேள்விகளும்,கதைகளும்......தொடர்கின்றன.
அருணா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அருணா. காதலினால் கஷ்டம் ஒரு போதும் வந்ததில்லை காதலர்களால் தான் பிரச்சனை வருகிறது, வளர்கிறது. நிறைய கேள்விகளும் கதைகளும் தொடரும் அதில் நம்முடையவையும் இருக்கும் என நம்புவோம். நன்றி.

Dreamzz said...

Divya sonnathum othukanum.. neenga solra pointukku nenga kadhaiya vera maahtiri aarambichu irukanum...

suicide panna athu kaadhalnu yaaru sonna? athu கோழை தனம்! காதல் இல்லை.. தயவு செய்து கோழை தனத்தை காதல் ஆக்காதீர்கள்...

If i disregard the background of this couple.. yes I can agree... nyayam illainaalum.. nijam endraavathu.

ஸ்ரீ said...

// Dreamzz said...

Divya sonnathum othukanum.. neenga solra pointukku nenga kadhaiya vera maahtiri aarambichu irukanum...

suicide panna athu kaadhalnu yaaru sonna? athu கோழை தனம்! காதல் இல்லை.. தயவு செய்து கோழை தனத்தை காதல் ஆக்காதீர்கள்...

If i disregard the background of this couple.. yes I can agree... nyayam illainaalum.. nijam endraavathu.

//

ஓகே பாயிண்ட் டேக்கன் டிரீம்ஸ். அவங்க சொன்னதை நான் மறுத்து சொல்லவில்லை. நான் இந்த கதை எழுதியதன் காரணம் காதலுக்கும் காமத்துக்கும் ஆன வித்தியாசம் புரியத்தான். யாரையும் புண்படுத்த அல்ல. வந்தமைக்கு நன்றி.

ஜி said...

kathai start pannumpothe ithe maathiri ethavathu nadakkumngra oru vithamaana bayam irunthathu.. :(((

Gud one.. though....