காதல் தான் வேறென்ன

நீ முன் நின்றால்
நிலைக்கண்ணாடிக்கே
நிலை கொள்வதில்லை.
என் நிலை சொல்லவேண்டுமா?

Photobucket

எனக்குள் காதல் நுழைகையில்
குருதிவெள்ளணுக்கள் எதிர்க்காமல்
சிவப்பணுக்களாலான
பூங்கொத்தோடு வரவேற்றதே!
உனக்கும் அப்படித்தானே?

Photobucket

பல்லியின் காலடியிலும்
வசதியாய் வாழ்வேன்
உன் காதல் துணையிருந்தால்.

Photobucket

போன வாரம்
எனக்களித்த பூச்செண்டை
முத்தமிட்டாயா?
வாடியபின்னும்
வாசம் வீசுகின்றது!

Photobucket

எப்போது பார்த்தாலும்
என் முகத்தில் நீயும்,
உன் முகத்தில் நானும் தான் தெரிகின்றோம்.
ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடிகள் போல.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

கன்னத்துப்பூச்சி

அழகானவைகளின் பட்டியல் கொஞ்சம் நீண்டு கொண்டே தான் போகும்। ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது? அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.

எப்போது எழுத ஆரம்பித்தாலும் சில பொருட்கள் நம் நினைவில் நிழலாடும்। சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண்। எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி। ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில்? அது பூவை களவாடும் கொள்ளைகாரனா? இல்லை இரு மலர்கள் பறிமாறிக்கொள்ளும் காதல் கடிதமா?

பூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே! காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி? அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இரண்டாம் நிலை காதல் கடிதமா? நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்தியிலும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா? அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ। காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா? காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன்? எடுத்துப்போகும் மகரந்தப்பொடிகளை பூங்கொத்தாக்கி உன் காதலிக்கு பரிசளிக்க நீ ஒன்றும் மனிதன் இல்லை என்பது எனக்கு தெரியும். இந்த குணத்திற்காவது உன் ஆயுட்காலம் சற்று திருத்தி எழுதப்படலாமே?

பூக்களின் இளவரசனாக நினைத்துக்கொள்வாயோ? தேன் தேடி அதை யுத்தமிட்டு எடுத்துக்கொள்வதாய் எண்ணமோ? தேன் என்ன தெரியுமா? அது ஒற்றை பூவின் கண்ணீர்। பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து செல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா? “உன்னை ஏதும் செய்யமாட்டேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா? உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா? பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா? இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா? வேண்டாம் உன்னை எனக்காக சுமை தூக்கும் தொழிலாளியாக்க உடன்பாடில்லை. போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.

கேள்விப்பட்டிருப்பீர் பாட்டி சொல்ல ‘முன்ஜென்மம் பட்டாம்பூச்சியை கொடுமை படுத்தினால் அடுத்த பிறப்பில் பழிதீர்த்துக்கொள்ளும் அது’ என்று। முன்ஜென்மத்தில் நீங்கள் அதை கொடுமை படுத்தியிருந்தால் நீங்கள் வண்ணத்துப்பூச்சியாகத் தான் பிறக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ நிச்சயம் இல்லை. அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த.

உஷார்! ‘இரக்கமற்றது காதல்’.


முன்னம் உதிர்ந்த சிறகுகளிலிருந்து சில வண்ணத்துப்பூச்சி கவுஜைகள்।

என் காதலின் வண்ணம்
இன்னும் உன் விரல்களில்
ஒட்டி இருக்கின்றதா?
தெரியவில்லை…
ஆனால், சிறகில் நிறமிழந்த
வண்ணத்துப்பூச்சியாக உழன்று
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளில்
இந்த நொடி வரை…

*

இதயப் பூவமர்ந்து,
உயிர்த்தேன் குடித்து,
இமைச்சிறகடிக்கும்,
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.

(பெரிதாகப் பார்க்க படத்தைக் கொஞ்சம் கிள்ளவும்)



காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

தூங்காத இதயம் ரெண்டு




காலிடுக்கில்
தூங்கிய தலையணையை
மார்புக்கு குடியேற்றியது
உன் காதல்.

Photobucket

உன் தூக்கத்தை ரசிக்கவில்லை,
நீ உறங்க இரவு முழுதும்
என் இமைகளால்
சாமரம் வீசிக்கொண்டிருந்தேன்
அவ்வளவு தான்.

Photobucket

யார் சொன்னது
காதலித்தால்
கனவு தேசத்தில் மிதக்கலாம் என்று?
எனக்கு தூக்கமும் பூப்பதில்லை,
கனவும் காய்ப்பதில்லை,
உனக்கெப்படி?

Photobucket

இரவெல்லாம் விழித்திருந்து
மறுநாள் உன்னிடம்
நம் இதயங்கள்
ஒத்தியங்குவதை சொன்னால்,
வெகு இயல்பாக
"ஒரு இதயம் துடித்தால்
எப்படி இரண்டு சத்தம் கேட்கும்?" என்கிறாய்.
நான் இன்னும் அதிகம் காதலிக்க வேண்டுமோ?

Photobucket

இரவானால்
தூக்கத்துக்கு மாறாக
ஏக்கம் தொற்றிக்கொள்(ல்)கிறது.
இதை விட ஒரு சாட்சி தேவையா
என் காதலை நிரூபிக்க?

Photobucket

இரவில்
நம்மை பிரித்துவிட்டதாய்
எண்ணி சிரிக்கிறான்
பொறாமைக்காரன் கடவுள்.
அவனுக்கு சொல்லவேண்டும்
நாம் அதிகம் நம்மை பற்றி
அப்போது தான் நினைக்கிறோம் என.

Photobucket

இரவில்
நிலவும் உனைக்காணா நேரம்
வடித்த கண்ணீர் தானோ?
விடியலில்
புற்களிலும், பூக்களிலும்.

(இது மட்டும் ஒரு பழைய கவிதை, தலைப்போடு ஒத்துப்போன காரணத்தால் மறுபதிவு இட்டுள்ளேன்)

PhotobucketPhotobucketPhotobucket


புத்தாண்டு அழகா ஆரம்பமாயிடுச்சு. மொக்கையா ரெண்டு கவிதை அதுக்கு சொல்லலைன்னா தூக்கம் வராது, அதனால நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லைன்னு கீழே போட்டிருக்கேன். (முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மோளம் அடிச்சுகிட்டுன்னு நினைச்சு 2 மட்டும் போடுறேன்).


வருடப்பிறப்புக்கு பதில்
நிமிடப்பிறப்பு கொண்டாடுகிறது மனம்
நீ அருகில் இருக்கும்
தருணங்களில்...

Photobucket

அழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு
அதே நாட்காட்டியில் முற்றுபுள்ளியில்லை
நீயில்லாமல் முடிவற்றுக்கிடக்கும்
என் வாழ்க்கை போல.

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

நாங்களும் பாடுவோம்ல

இத்தனை நாளா கவுஜைன்னு பேருல போட்ட மொக்கை போதாதுன்னு கொஞ்சம் அசைபோடலாமேன்னு வந்திருக்கேன். பள்ளி படிக்கும் போது நாம் பாடின பாட்டு போட சொல்லி அழைத்திருக்கார் 'காதல் முரசு'. பள்ளி வயதில் எனக்கு ஒரே ஒரு நண்பன் தான். அவனோடு தான் அதிகம் பொழுதை கழிப்பேன். எப்போதும் ஒன்றாய் தோள் மீதி கை போட்டு சுற்றி இருக்கிறேன். அவன் பெயர் 'தனிமை'. கொஞ்சம் பெரியவன் ஆன பின்னர் வழக்கம் போல ஒரு மட்டையை பிடித்து கிரிக்கட் விளையாடிய ஒரு சராசரி சிறுவன் தான் நான். அதனால் அந்த ஒரு அழகான காலம் என் வாழ்க்கையில் கொஞ்சம் குறைவு (ஒரு வேளை மறந்து போச்சான்னு கூட தெரியலை. இந்த மாதிரி எதுவும் பண்ணாதது நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்). அதனால் நண்பர்களோடு கூட பேசி சில பாட்டு பிடிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த உரையாடலில் கிடைத்த சில பாடல்கள் கீழே. அவர்கள் இந்த பாட்டெல்லாம் சொல்லும் போதே அழகான ஒரு சூழலில் இருப்பது போல உணர்ந்தேன். சில விஷயங்கள் இழந்துவிட்டோமோ என்ற எண்ணம் சற்று தலை தூக்கினாலும், இந்த வயதில், வேலை பலுவுக்கு இடையில் இதை நினைக்க வைத்ததற்காக நன்றி கோ.

அப்புறம் படித்த பாட்டு போடணும்னு சொல்லி இருக்காரு. நான் மட்டும் என்னங்க ஜெர்மன்லயா படிச்சேன்? எல்லாருக்கும் ஒரே தென்னமரம் போட்ட தமிழ் புத்தகம் தான். அதனால வகுப்பறைக்கு வெளியில் பாடின சுவாரசியமான பாட்டெல்லாம் தேடி இங்க போட்டிருக்கேன். (அடைப்புக்குள் இருக்கும் கமெண்டு மட்டும் தான் என்னுடையது).



மொட்ட ராசாத்தி
ரொட்டி சுட்டாலாம்
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாலாம்
காசு பத்தலையாம்
கடக்காரனை பாத்து
கண் அடிச்சாலாம்.

(அட அட அட என்ன கருத்தம்சம் இருக்குறா மாதிரியான ஒரு பாட்டுங்க. இதை பாடப்புத்தகத்துல சேத்தா பசங்க ஏன் ஃபெயில் ஆகப்போறாங்க? படிச்ச முதல் முறையே மனதில் பதிந்திடுமே.)


A B C D
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி.

(சூப்பர். கவனிச்சீங்களா பாட்டுல ஒரு பிசுறு கூட இல்லை. டி, டி, டி மற்றும் D. தமிழ் கூட ஆங்கிலத்தை சேத்து ஒரு அருமையான நடையில் தமிழ் வளர்த்திருக்கார் யாரோ ஒரு மூத்த கவிஞர். யாருக்காவது அவர் பேர் தெரிஞ்சா சொல்லுங்கப்பு. எனக்கென்னமோ இவர் ஒரு விளையாட்டு பிள்ளையா (play boy) இருந்திருப்பார்னு தோணுது. அதான் வந்தா வாடி இல்லாட்டி போடி அப்படின்னு ஆணித்தனமா பாடி இருக்கார்.)


பக்கத்து வீட்டு நிருமலா
உனக்கு என்ன இருமலா?
வாங்கி தரேன் விக்ஸு
என் டோரு நம்பர் சிக்ஸு.

(கண்டிப்பா இதை சொன்னவர் சங்கர் நேத்திராலயாவுல இந்நேரம் முதன்மை மருத்துவர் ஆகியிருப்பார் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை.)


ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு
டாமு டூமு டைய்யா
அஸ்கலக்கடி ஜாமு சுந்தரி
என் பேர் உய்யா.

(இந்த பாடலின் பனை பூம்புகார்ல இருந்ததால கடல் கொண்டு போயிடுச்சாம் தெளிவான குறிப்புகள் இல்லை. அதனால பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் மக்களே. சரியான வரிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. அருமையான பாட்ட வளக்கறது நம்ம கடமை இல்லையா?)


தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவு உளுந்த மாவு
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு,
அம்மாவுக்கு மூணு,
அண்ணனுக்கு ரெண்டு,
பாப்பாவுக்கு ஒன்னு
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டா பூசை.

(யாருன்னு தெரியல யாரோ தீனிப்பண்டாரம் சார் பாடுனது போல. இவரோட இன்னொரு பாட்டும் இருக்குன்னு சொன்னாங்க ஆனா அது அவர் கோவதுல இருக்கும் போது பாடுனது போல.

அது...


ஐஸ் ஐஸ் ஐஸ்
அஞ்சி பிஸா ஐஸ்
ஆப்பிள் ஜீஸ்
நீ ஒரு லூஸ்.)

மேல சொன்ன பாடல்களுக்கு தனியா சுதி, ராகம், லயம் எல்லாம் இருக்குங்க நீங்க பாட்டுக்கு உங்களோட சொந்த ராகத்துல பாடி ரீமிக்ஸ் பண்ணிடாதீங்க ராசா.


நான் அழைக்கும் மூன்று தோழர்கள்,

1. 'ரொம்ப நல்லவன்' ட்ரீம்ஸ்,
2. நாடோடி இலக்கியன்,
3. கோபால்.


நியாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

எனக்கு காதல் தெரியாது



















காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.