சுதந்திரம்

ஏன் கொண்டாடுகிறாய்?
இனாமாய் கிடைத்த
விடுமுறைக்கா சந்தோஷப்படுகிறாய்?
சுதந்திரமா?
எங்கே காட்டு பார்ப்போம்.

சுவாசிக்கவே இன்னொருவனை
வேலைக்கு வைக்கும்
முதலாளி வர்கம்,
இலவசமாக சவக்குழி
கிடைத்தால் சாகும்
ஏழை ஒரு பக்கம்,
கணினி விலை
குறைந்ததற்கு சந்தோஷப்படும்
நடுத்தர வர்கம்.

"டேய்! கணிணி கூழா சாப்பிடப்போகிறாய்?"

"அரச"மரத்தில் மட்டுமே கூடு கட்ட
ஆசைப்படும் சில பறவைகள்,
ஐ.டி . பூங்காவில்
பல செக்கு மாடுகள்,
எட்டு மணி நேரக்கூண்டுக்குள்
குளிர்காயும் இளைஞர்கள்,
வேலை இல்லையென அதிகார்ப்பூர்வமாக
அறிவிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம்.

ஒளிர்கிறது இந்தியா!!!!!!

வக்கணையான பேச்சு
"இரவில் வாங்கினோம் விடியவில்லை"
இரவில் தானே வாங்கினோம்?
இரவல் வாங்கவில்லையே!
இன்னும் ஏன் அந்நியனுக்கு சலாம்?

அறுபதாண்டு சுதந்திரமே
பணி ஓய்வு பெற்று ஓடு!
மீண்டும் பிறக்கட்டும்
ஒரு சுதந்திரம்...

சா'தீ'யை விழுங்கும் ஃபினிக்ஸ்ஸாய்,
வீட்டை தன் முதுகில் சுமக்கும்
நத்தையாய் உருமாறு
அழகாய் மாறும் இந்தியா!

பொறுத்திருங்கள்
சமத்துவம் பிறக்கும்
அன்று பிறந்த குழந்தையிடம்
கொடுத்து கிழித்தெறியுங்கள்
இந்தக் கிறுக்கலை.

-ஸ்ரீ.

0 கால்தடங்கள்: