காதல் காலம்‍‍‍ 7

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 7 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.



பிள்ளையார் முன் கண்கள் மூடி நீ. உன்னைப் பார்த்தபடி நான். தற்செயலாக இதை கவனித்தாய்.

"ஏய் ஒழுங்கா அங்க பாத்து சாமி கும்பிடு."

"ரெண்டு சிலை இங்கே இருக்கு, அதில் அழகான சிலையை பாத்துகிட்டு நிக்கிறேன். உன்னை பாத்து கோபுரத்து சிற்பங்களுக்கே பொறாமை வேணும்னா நீயே பாறேன் எல்லாம் முகம் சுலிச்சிகிட்டு தான் இருக்கு."

"ஷூ... கோயிலுக்கு வந்தா சும்மா இருக்கணும்." என்று அதட்டினாய்.

"இல்லம்மா கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடணும்."

ததும்பிய புன்னகையை மறைத்துக் கொண்டு திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாய்.

"அடிப்பாவி! இதுக்குத்தானே இவ்ளோ நேரம் பேசுனேன்." மனதில் நினைத்துக் கொண்டே காத்திருந்தேன்.

"தீர்க சுமங்கலி பவ" ஐயர் சொன்ன வார்த்தையால் என் வலது கையில் ஆயுள் ரேகை நீண்டு முழங்கைக்கு ஓடியது. குங்குமத்தை என்னிடம் நீட்டி வைக்கச்சொன்னாய். என் தயவால் உன் இரு புருவங்களும் கை குலுக்கிக்கொண்டன. கையை உன் கண்களுக்கு மேல் வைத்து ஊதினேன்.

"காற்று மொட்டுக்களை திறக்கும்
என்று தான் கேள்வி
ஏனோ இன்று
தலைகீழாய்!"

அந்நேரம் உன் நெற்றியில் ஒரு நாடகம், புருவங்களுக்குள் நடனப் போட்டி. அதில் என்னையே மறந்து போனேன். மேளமோ நாதசுரமோ இல்லாமல் நடந்து முடிந்தது அந்த அழகான திருமணம்.

"சரி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிது போலாமா?"

"கல்யாணமா? கெட்டிமேளம் இல்ல, மந்திரம் இல்ல..."

"கெட்டிமேளம் வைக்க காரணமே ஒருவேளை மணமக்களில் யாராவது ஒருத்தர் கல்யாணம் பிடிக்காமல் மனசுல அழுதால் அந்த சத்தம் வெளியே கேக்கக்கூடாதுன்னு தான். புரிஞ்சுதா? அதனால இங்க கெட்டிமேளத்துக்கு அவசியம் இல்லம்மா."

"எல்லாத்துக்கும் குதர்க்கமா ஏதாவது பதில் வெச்சிரு."

சந்தோஷ‌த்தில் குதித்து மணி அடித்தாய். ஆனால் தரை இறங்கியது இரண்டு பூக்கள் தட்டில் இருந்த அர்ச்சனை பூவோடு சேர்த்து. குனிந்து எடுக்க இருவரும் முயற்ச்சிக்க நம் தலைகள் முட்டிக்கொண்டன.

"இரு இன்னொரு தடவை முட்டிக்கோ இல்லன்னா கொம்பு வளந்துடும்."

"எருமை உனக்கு கொம்பு இருந்தா தான் நல்லா இருக்கும்."

"ஆனால் பூ உனக்கு கொம்பு இருந்தா நல்லா இருக்காதே!"

என்னிடம் இருந்து தப்பித்து கோயிலை சுற்றி ஓடினாய்.

"என் சன்னிதானத்தில் என்ன விளையாட்டு இது?" அசரீரியாய் என்னிடம் மட்டும் பிள்ளையார்.

"பூவை கீழ தள்ளி விட்டதே நீ தானே!" பதிலுக்கு நான்.

"எனக்கும் பதில் தந்து வாயை அடச்சிட்டானே!" கோவத்தில் பிள்ளையார் திரும்பிக்கொண்டார்.

காதல் காலம்‍‍‍ பாகம் 8


காதல் காலம் தொடரும்....காதல் அழிவதில்லை...
‍‍-ஸ்ரீ

0 கால்தடங்கள்: