காதல் காலம் 4

ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.


மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.

"எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்." என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.

"அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி."

"கடிக்க வந்தா சும்மாவா விடுறது?"

"சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம். உன்னை ஒரு தடவை கடிக்க விடு அப்புறம் அது உடனே சக்கரை நோயில செத்துடும்."

"இங்க பாருடா யோசனை சொல்றாரு." சிரித்துக் கொண்டே நீ.

"யேய் போ! அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்ல." சொல்லியபடி வண்டைத் துரத்தினேன்.

"எதுக்காம்.....?"

"வண்டத் தொரத்தத் தான் வேற எதுக்கு?". மறுபடி முளைத்தது வெட்கம்.

"எப்படா என்னை காதலிக்க ஆரம்பிச்ச?"

"முத்து வந்த நேரம் சிப்பிக்கு,
முத்தம் வந்த நேரம் உதட்டுக்கு,
கவிதை வந்த நேரம் கவிஞனுக்கு,
காதல் வந்த நேரம் எனக்கும்,
எப்படித் தெரியும்?"

"அப்பா! எப்பவுமே பேசிக்கிட்டே தான் இருப்பியா? வாய் வலிக்காதா உனக்கு?"

"நீ கண்ணால பண்றத நான் வாயால பண்றேன். உனக்கு கண்ணு வலிக்குதா என்ன?"

அப்போது கூட்டில் இருந்து தவறி வெளியே விழுந்த ஒரு கிளிப் பேடையை கையில் எடுத்தாய்.

"அய்யோ தெரியாம வெளியே விழுந்துட்டியா நீ?" என்றவாறே முத்தமிட்டாய் அதை. கூச்சத்தில் மூக்கு சிவந்தது அதற்கு.

"தெரியாமல் எல்லாம் இல்லை நீ கையில எடுப்பனு தெரிஞ்சேதான் விழுந்திருக்கும். இப்போ முத்தம் வேற குடுத்துட்டியா மீதி குஞ்சிகளும் பின்னாலயே கூட்ட விட்டு குதிக்கப் போது பாரு."

"எவ்ளோ அழகா இருக்கு பாறேன். இத வீட்டுக்கு கொண்டு போட்டா?"

"வேண்டாம்மா. நீ வீட்டுக்கு கொண்டு போக அது உன்னைப் பாத்து அம்மானும் நான் அந்த பக்கம் வந்தா அப்பானும் கூப்பிட்டுச்சுன்னா வம்பாயிடும்."

"சீ!"

ஒற்றை சிணுங்கலுக்கு ஒரு கோடி அர்த்தங்கள். இந்த முறை கொஞ்சம் அதிகம் வெட்கப்பட்டு விட்டாய் போலும், தோப்பில் உள்ள எல்லா மாமரங்களுமே பழுத்து விட்டன. மாம்பழம் பழுத்து பார்த்த கிளிகள் மாமரங்களே பழுத்ததால் அவசரக் கூட்டம் போட்டு நம்மை வாழ்த்தின.

காதல் காலம்‍‍‍ பாகம் 5


காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

காதல் காலம் 3

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.

அந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இற‌க்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.

நீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி. அவ்வளவு சுலபமாக நுழைந்து விடமுடியுமா? ஏமாற்றத்துடன் என்னை திட்டிக்கொண்டே திரும்பியது. கனவுகளோடு உறவாடிக் கொண்டே காலத்தை கழித்தேன். உச்சாணிக்கொம்பில் ஏறிய சிறுவன் இறங்க சிரமப்படுவது போல காதலை சிரிப்போடு வரவேற்ற நான் அதை சுமக்கும் சுமைத்தாங்கியாய் இறக்கி வைக்கமுடியாமல் தவித்தேன்.

" பல நிகழ்வுகள் கேள்வி கேட்கப்படுவதில்லை,
சில கேள்விகளுக்கு விடை இருப்பதில்லை,
பல வார்த்தைகள் சொல்லப்படுவதில்லை,
சில வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை,
பல கனவுகளுக்கு உயிர் கிடைப்பதில்லை,
சில கனவுகள் உயிரோடு புதைபடுகின்றன.....
இவை தான் வாழ்க்கை என்றால்
என் காதல் விதிவில‌க்காகட்டும்!!"

எறும்பு சேகரித்த சர்க்கரையாய் இந்த 6 மாதங்களாக நான் சேர்த்த காதலும், தைரியத்தையும் துணைக்கு கூட்டிக்கொண்டு வந்து உன்னிடம் என் காதலை சொன்னேன். நீ திருப்பித்தந்தது ஒரு கோவப்பார்வை. முத்தம் கொடுக்கும் என்று நினைத்தக் குழந்தை கன்னத்தைக் கடித்தால் எப்படிக் கோவப்படுவது? உன்னிடம் இருந்து வந்த பார்வையே என் மன பாரத்தை இறக்கி வைக்க ஆனந்தக்கடலில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்தேனா? "நீ அருகில் இருந்தால் கடல் கூட கைக்குள் அடக்கம் தானே?" நின்று கொண்டு தான் இருந்தேன்.


காதல் காலம்‍‍‍ பாகம் 4

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

காதல் காலம் 2

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.

கண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.
"தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி?" என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.
"ஏன் இந்த வண்ணம்?" கேட்டேன் அவனிடம்.
"குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா? நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்!" என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.
கடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும்?. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. "இது கலையாமலே இருக்கக் கூடாதா?" ஏங்கியது மனது. ஆனால் புத்தி, "பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே! நிஜம் அல்ல இது." எனக்கடிந்து கொண்டது. விடியலுக்காத் தவம் இருக்க ஆரம்பித்தேன். சூரியனும் என் போல் தானோ? உடனே விழித்துக்கொண்டான் உன்னைக் காண. வழக்கத்துக்கு மாறாக சிரிப்போடு எழுந்தேன்.

வெகு நாட்கள் கழித்து தலை சீவிக் கிளம்பினேன் பள்ளிக்கு. வெளியில் ஏதும் காட்டிக்கொள்ளாமல் உன் வருகைக்காக நானும் புதிதாய் பிறந்த(பூத்த) என் காதலும் காத்திருந்தோம். நீ வரும் வரை உறைந்து போயிருந்த காலம் வந்தவுடன் கரையத் தொடங்கியது. ஒரு சின்ன புன்னகையை எனக்கு வீசிவிட்டு அமர்ந்தாய் உன் இருக்கையிலும் என் இதயத்திலும். பசலையின் முதல் கட்டமாக நோட்டில்

" இனி
பொங்க‌லில் மட்டும் அல்ல,
தினமும்
'மஞ்சு' விரட்டு தான்.." கிறுக்கின கைகள்.

பிறந்த முதல் கவிதை மறைக்கப்பட்டது என் காதலைப் போலவே.

ஒரே நாளில் இத்தனை மாற்றங்களா?. கண்களுக்கு நீ மட்டுமே தெரிகிறாய். என் உலகம் மாறத்தொடங்கியது. நீயே என் பள்ளியாய், உன் கழுத்தோர மச்சம் கரும்பலகையாய்.

இனிதே ஆரம்பம் ஆனது காதல் பாடம்..

காதல் காலம்‍‍‍ பாகம் 3

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

காதல் காலம் 1

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..


அழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. "டேய் சிவா! எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு". இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் "அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா" அம்மா சொன்னதும் "ம்" என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.

வழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், "எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்?" என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி. என் உலகம் மீண்டும் என் கண் முன்னால். ஐந்து வருடங்கள் முன் நான் ரசித்து பார்த்த அதே மஞ்சுளா.

அதிக மாற்றம் இல்லை அவளிடம். தோள் மேல் ஒரு கவிதையோடு வந்திருந்தாள். வேண்டாம்! உன் கண்ணீரால் அந்த கிளியின் தூக்கத்தை கலைக்காதே. என்னை போல் மனதுக்குள்ளேயே அழுது விடு. குழந்தையாய் இருக்கும் போதே தூங்கினால் தான் உண்டு. மனக்குளத்தின் அடியில் நிலா பிம்பம் போல இருந்த உன் முகம் மெல்ல மேலே மிதந்து வந்தது. சுடும் என்று தெரிந்திருந்தும் மெழுகுவர்த்தியில் கை வைக்கும் சிறுவன் போல அங்கேயே இருக்க துடித்தது மனது. உன்னை கஷ்டப்படுத்தாமலே பழகிப்போன நான் இப்பொழுதும் என் மனதை சிலுவையில் அறைந்து விட்டு வெளியேறினேன். அன்றைய நாள் மேலும் சுமையானது.

"ஏன்பா பேங்குக்கு போகலையா? ரொம்ப வேலையா?" சாப்பிடும் போது கேட்டாள் அம்மா. "மறந்துட்டேன் மா" என்று வழக்கம் பொய் சொன்னேன். பொய்கள் தான் தற்போது என் நண்பன். "தீமையிலாத சொலல்" என்ற‌ வள்ளுவனின் மொழி வேத வாக்கு. "ஏன்டா கல்யாணம் வேணாம்குற? இப்பவே 27 வயசு ஆச்சு" தொடர்ந்தாள். சிறு வயதில் 5+2 என்ன என்று உனக்கு தெரிந்து இருந்தும் என்னிடம் கேட்டாயே அதே ஜாதியைச்சேர்ந்த கேள்வி தானே இது? பதில் தெரிந்து கொண்டே என்னிடம் கேட்ட உன்னைப்பார்த்து சிரிக்க முயன்று தோற்று போய் கை கழுவினேன்.

உள்ளே சென்று அறையை தாழிட்டு மனதை திற‌ந்தேன். முனகிக்கொண்டிருந்த சிறுவன் கதறி அழத்தொடங்கினான். அழுவதற்கு கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது இந்த வாழ்க்கையில்.என்னை நொந்து கொண்டே படுக்கையின் மேல் நான். கண் முன்னே 10 வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் நிழல்களாக என்னைப்பார்த்து சிரிக்கத்தொடங்கின.

12-A . முதல் நாள் வகுப்பு. வேறொரு பள்ளியில் இருந்து வந்த நீ என் முன் பென்சில் அமர்ந்தாய். ஏதோ உன்னிடம் பேசி விட வேண்டும் என்று என் பேனாவுக்கு ஜன்னல் வழியே விடுதலை தந்தேன் நான், பின்னொரு நாளில் உன்னிடம் கைதாவபோவது தெரியாமல். "கொஞ்சம் பேனா தாங்களேன்" அன்று நான் சொன்ன அதே வார்த்தைகள் இன்று உன் உதட்டில் இருந்து. "வரலாறு மறுமுறை தொடருமாமே?". போதும்! இன்னொறு முறை தோற்க என்னிடம் தெம்பு இல்லையடி. வகுப்பில் இருந்த எல்லோரும் உன் மேல் கண்டதும் காதலில் விழ எனக்கு மட்டும் ஒரு நாள் ஆனது. அன்று இதே போல் என் படுக்கையில் உன் நினைவில் நான்........

காதல் காலம்‍‍‍ பாகம் 2

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍- ஸ்ரீ

முதல் காதலி

நான் பார்த்த முதல் முள் இல்லாத ரோஜா அவள்
இல்லை
ரோஜா கூட வாடி விடுமாமே!
பிறகெப்படி கூற?
தேவதை....?
ஆம் தேவதை!
இறக்கைகள் இல்லாத தேவதை
எனக்கு காதல் கற்றுத்தந்த தேவதை.

வெற்றிக்கு தோள்
தோல்விக்கு மடி தந்தவள்
உன் மடிக்காகவே தோற்றேன் அப்போது....
உதவும் அக்கறை கூட இல்லாமல்
உதவாக்கரை என்று என்னை சொன்ன இந்த உலகம்
உன் ஒற்றை ஆறுதலுக்கு முன் தோற்குமடி.

எனக்காகவே தவம் இருந்த நீ
கேட்டாய் ஒரு வரம்
நீ கேட்டு மறுப்பேனா?
விட்டுத்தந்தேன் என்
இரண்டாம் காதலை!
இப்போதோ எப்போதும்
என் நினைவாகவே நீ!
அவள் நினைவாகவே நான்!

உனக்காகவே வாழும் மகன்
-ஸ்ரீ