காதல் காலம் 3

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....

இது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.

அந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இற‌க்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.

நீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி. அவ்வளவு சுலபமாக நுழைந்து விடமுடியுமா? ஏமாற்றத்துடன் என்னை திட்டிக்கொண்டே திரும்பியது. கனவுகளோடு உறவாடிக் கொண்டே காலத்தை கழித்தேன். உச்சாணிக்கொம்பில் ஏறிய சிறுவன் இறங்க சிரமப்படுவது போல காதலை சிரிப்போடு வரவேற்ற நான் அதை சுமக்கும் சுமைத்தாங்கியாய் இறக்கி வைக்கமுடியாமல் தவித்தேன்.

" பல நிகழ்வுகள் கேள்வி கேட்கப்படுவதில்லை,
சில கேள்விகளுக்கு விடை இருப்பதில்லை,
பல வார்த்தைகள் சொல்லப்படுவதில்லை,
சில வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை,
பல கனவுகளுக்கு உயிர் கிடைப்பதில்லை,
சில கனவுகள் உயிரோடு புதைபடுகின்றன.....
இவை தான் வாழ்க்கை என்றால்
என் காதல் விதிவில‌க்காகட்டும்!!"

எறும்பு சேகரித்த சர்க்கரையாய் இந்த 6 மாதங்களாக நான் சேர்த்த காதலும், தைரியத்தையும் துணைக்கு கூட்டிக்கொண்டு வந்து உன்னிடம் என் காதலை சொன்னேன். நீ திருப்பித்தந்தது ஒரு கோவப்பார்வை. முத்தம் கொடுக்கும் என்று நினைத்தக் குழந்தை கன்னத்தைக் கடித்தால் எப்படிக் கோவப்படுவது? உன்னிடம் இருந்து வந்த பார்வையே என் மன பாரத்தை இறக்கி வைக்க ஆனந்தக்கடலில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்தேனா? "நீ அருகில் இருந்தால் கடல் கூட கைக்குள் அடக்கம் தானே?" நின்று கொண்டு தான் இருந்தேன்.


காதல் காலம்‍‍‍ பாகம் 4

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍‍-ஸ்ரீ

0 கால்தடங்கள்: