காதல் காலம் 1

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..


அழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. "டேய் சிவா! எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு". இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் "அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா" அம்மா சொன்னதும் "ம்" என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.

வழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், "எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்?" என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி. என் உலகம் மீண்டும் என் கண் முன்னால். ஐந்து வருடங்கள் முன் நான் ரசித்து பார்த்த அதே மஞ்சுளா.

அதிக மாற்றம் இல்லை அவளிடம். தோள் மேல் ஒரு கவிதையோடு வந்திருந்தாள். வேண்டாம்! உன் கண்ணீரால் அந்த கிளியின் தூக்கத்தை கலைக்காதே. என்னை போல் மனதுக்குள்ளேயே அழுது விடு. குழந்தையாய் இருக்கும் போதே தூங்கினால் தான் உண்டு. மனக்குளத்தின் அடியில் நிலா பிம்பம் போல இருந்த உன் முகம் மெல்ல மேலே மிதந்து வந்தது. சுடும் என்று தெரிந்திருந்தும் மெழுகுவர்த்தியில் கை வைக்கும் சிறுவன் போல அங்கேயே இருக்க துடித்தது மனது. உன்னை கஷ்டப்படுத்தாமலே பழகிப்போன நான் இப்பொழுதும் என் மனதை சிலுவையில் அறைந்து விட்டு வெளியேறினேன். அன்றைய நாள் மேலும் சுமையானது.

"ஏன்பா பேங்குக்கு போகலையா? ரொம்ப வேலையா?" சாப்பிடும் போது கேட்டாள் அம்மா. "மறந்துட்டேன் மா" என்று வழக்கம் பொய் சொன்னேன். பொய்கள் தான் தற்போது என் நண்பன். "தீமையிலாத சொலல்" என்ற‌ வள்ளுவனின் மொழி வேத வாக்கு. "ஏன்டா கல்யாணம் வேணாம்குற? இப்பவே 27 வயசு ஆச்சு" தொடர்ந்தாள். சிறு வயதில் 5+2 என்ன என்று உனக்கு தெரிந்து இருந்தும் என்னிடம் கேட்டாயே அதே ஜாதியைச்சேர்ந்த கேள்வி தானே இது? பதில் தெரிந்து கொண்டே என்னிடம் கேட்ட உன்னைப்பார்த்து சிரிக்க முயன்று தோற்று போய் கை கழுவினேன்.

உள்ளே சென்று அறையை தாழிட்டு மனதை திற‌ந்தேன். முனகிக்கொண்டிருந்த சிறுவன் கதறி அழத்தொடங்கினான். அழுவதற்கு கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது இந்த வாழ்க்கையில்.என்னை நொந்து கொண்டே படுக்கையின் மேல் நான். கண் முன்னே 10 வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் நிழல்களாக என்னைப்பார்த்து சிரிக்கத்தொடங்கின.

12-A . முதல் நாள் வகுப்பு. வேறொரு பள்ளியில் இருந்து வந்த நீ என் முன் பென்சில் அமர்ந்தாய். ஏதோ உன்னிடம் பேசி விட வேண்டும் என்று என் பேனாவுக்கு ஜன்னல் வழியே விடுதலை தந்தேன் நான், பின்னொரு நாளில் உன்னிடம் கைதாவபோவது தெரியாமல். "கொஞ்சம் பேனா தாங்களேன்" அன்று நான் சொன்ன அதே வார்த்தைகள் இன்று உன் உதட்டில் இருந்து. "வரலாறு மறுமுறை தொடருமாமே?". போதும்! இன்னொறு முறை தோற்க என்னிடம் தெம்பு இல்லையடி. வகுப்பில் இருந்த எல்லோரும் உன் மேல் கண்டதும் காதலில் விழ எனக்கு மட்டும் ஒரு நாள் ஆனது. அன்று இதே போல் என் படுக்கையில் உன் நினைவில் நான்........

காதல் காலம்‍‍‍ பாகம் 2

காதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......
‍- ஸ்ரீ

2 கால்தடங்கள்:

Tina said...

hey kalakita po....super!!!

ஸ்ரீ said...

//christina said...

hey kalakita po....super!!!//

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி கிருஸ்டினா :)